Tuesday, November 13, 2012

சென்னையிலிருந்து மதுரைக்குக் காலியாகச் சென்ற தீபாவளிச் சிறப்பு ரயில் !


சென்னை: தீபாவளியையொட்டி இன்று காலை சென்னையிலிருந்து 15 பெட்டிகளுடன் மதுரைக்கு இயக்கப்பட்ட ரயில் கிட்டத்தட்ட காலியாகவே சென்றது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி 50க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டதையடுத்து கடைசி நேரக் கூட்ட நெரிசலைச் சமாளிக்க மேலும் சில பகல் நேரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இதில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரை, நாகர்கோவிலுக்கு இன்று காலை சிறப்பு ரயில்கள் சென்றன.

மதுரை சிறப்பு ரயிலில் அதிகம் பேர் பயணம் செய்வதற்கு வசதியாக முன்பதிவு இல்லாத 15 பொதுப் பெட்டிகளும், முன் பதிவு கொண்ட இருக்கை வசதி கொண்ட 6 பெட்டிகளும், ஒரு 3 அடுக்கு ஏ.சி. பெட்டியும் என மொத்தம் 22 பெட்டிகள் இருந்தன.

சுமார் 3,000 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ரயிலில் முன்பதிவுப் பெட்டிகள் மட்டும் நிரம்பின. மற்ற 15 பொதுப் பெட்டிகள் காலியாக இருந்தன. இதில் மொத்தமே 500க்கும் குறைவானவர்களே இருந்தனர்.

காலை 9.20 மணிக்கு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்ற இந்த ரயிலில் 15 பொதுப் பெட்டிகளும் காலியாகவே இருந்ததால், அதில் பயணித்த பயணிகள் எழும்பூரிலேயே படுக்கையை விரித்துப் போட்டுக் கொண்டு 'ஹாயாக' மதுரைக்குச் சென்றனர். உண்மையிலேயே இவர்களுக்கு இது 'ஸ்பெஷல் டிரெயின்' தான்.

இது ரயில்வே நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த பகல் நேரச் சிறப்பு ரயில் விடுவது குறித்து 2 நாட்களுக்கு முன்னர் தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கடந்த வாரமே அறிவித்திருந்தால் பயணிகள் நேற்று முண்டியடித்துக் கொண்டு செல்வதைத் தவிர்த்துவிட்டு இன்று காலை வசதியாகவாவது மதுரைக்குச் சென்றிருப்பர். அல்லது இந்த ரயில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையாவது இயக்கியிருந்தால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலேயே பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பிவிட்டதால் இன்று வெளியூர் செல்பவர்களின் கூட்டம் ரயில், பஸ் நிலையங்களில் குறைவாகவே உள்ளது.

நாகர்கோவிலுக்குப் பிற்பகல் 2.25 மணிக்கு சிறப்பு ரயில் செல்கிறது.                   

 நன்றி :-ஒன் இந்தியா, 13-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.