Monday, November 5, 2012

நேபாளத்தில் கால்பதிக்கும் சீனத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்: "ரா' எச்சரிக்கை

நேபாளத்தில் சீனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், இது இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசுக்கு "ரா' உளவு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு "ரா' எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

""நேபாள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு சீனாவின் ஜிங்ஸிங் தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனம் உதவி வருகிறது.

அங்கு 4 உயர்தரத் தகவல் மையங்களை அமைக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த மையங்கள் காத்மாண்டு, பிரத்நகர், ஹெதெளதா, போக்ரா ஆகிய நகரங்களில் அமைக்கப்படுகின்றன. இதற்கென, அத்தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ. 134 கோடியை செலவிடுகிறது.

ஜிங்ஸிங் தொலைத்தொடர்பு நிறுவனம், சீன ராணுவத்துடன் இணைந்து பணியாற்றி வரும் நிறுவனமாகும். அந்நாட்டில் வயர்லெஸ் தொழில்நுட்ப சேவையில் இந்நிறுவனம் முதன்மையாக உள்ளது.

நேபாளத்தில் தனது கருவிகளை நிறுவுவதன் மூலம், இந்தியாவின் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளை சீனா கண்காணிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக நேபாள அரசுடன் பேசி, இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அந்நாட்டில் செயல்பட மத்திய வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று "ரா' அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாகத் தனது நிறுவனங்களின் அறிவுசார் தகவல்களைத் திருடும் பணியில் சீனாவைச் சேர்ந்த 2 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக கடந்த மாதம் அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்தப் புகாரைச் சீன நிறுவனங்கள் மறுத்துவிட்டன.                                 

நன்றி :- தினமணி, 05-11-2012






0 comments:

Post a Comment

Kindly post a comment.