Monday, November 5, 2012

டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் அவுட் : முக்கிய குற்றாவளி கைது !

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த அச்சக ஊழியர் ஒருவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த தியாகராஜன், செந்தில்குமார், ஸ்ரீதர்ராஜ் (எ) பாலன் ஆகியோர் மூலம்தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வினாத்தாள் வெளியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஒடிசா புவனேஸ்வரில் ரயில்வே துறையில் பணியாற்றிய ஆனந்தராவ் கைது செய்யப்பட்டப்பின் இவ்வழக்கு விசாரணை மந்தகதியிலேயே இருந்தது.

 இதைத் தொடர்ந்து இவ்வழக்கு ஈரோடு நகர காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

ஒடிசா வழக்கறிஞர் கைது

இந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதியன்று ஒடிசாவை சேர்ந்த வழக்கறிஞர் ககூன் சேனாதி பிகாரி (49) என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஒடிசாவில் உள்ள ஒரு அச்சகத்தில் பணியாற்றி வந்த புவனேஸ்வரைச் சேர்ந்த கோத்ரா மோகன் மந்த்ராவிடம் இருந்து ககூன் கேள்வித்தாளைப் பெற்றதும், தனது நண்பரான ஆனந்தராவ் மூலம் தமிழகத்தில் கேள்வித்தாளைப் பல லட்சத்துக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி இருந்த கோத்ரா மோகன் மந்த்ராவை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது.

அப்போது ஈரோட்டில் உள்ள ஓர் மையத்தில் கேள்வித்தாளின் நகலை கையில் வைத்திருந்ததாகப் பவானியைச் சேர்ந்த தனக்கொடி, அவரது கணவர் செந்தில், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                           

நன்றி :- ஒன் இந்தியா, 05-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.