ஐரோப்பாவின் நாகரிகத் தொட்டிலாக அறியப்படும் நாடு கிரேக்கம். கிரேக்க நாட்டின் அரச குடும்பமும் பாரம்பரியப் பெருமை மிக்கது. அதன் இளவரசி ஐரீன் (70) அண்மையில் தத்துவ அறிஞர் பேராசிரியர் டி.எம்.பி. மகாதேவனின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தில்லி வந்திருந்தார்.
ஒரு நாட்டின் இளவரசி என்ற பந்தாவைத் துளியும் வெளிப்படுத்தாமல், தான் தனிப்பட்ட பயணத்துக்காக வந்திருக்கிறோம் என்பதை அழுத்தமாக உணர்த்தி, இந்தியப் பெண்ணைப் போல் புடவை அணிந்து, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார்.
இந்திய, கிரேக்க கலாசார உறவுகள், சமயப் பெருமைகள் குறித்து ஐரீனிடம் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றி...? உங்களது சமுதாயப் பணி பற்றி...?
என்னுடைய தந்தை கிங் பால். நான் தெற்கு ஆப்பிரிக்காவில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிறந்தேன். அதனால்தான் எனக்கு "அமைதி' (சாந்தி) என்ற அர்த்தம் கொடுக்கும் ஐரீன் என்று பெயரிட்டனர். எங்களது நாடு குடியரசு ஆகிவிட்டாலும் நான் இன்னும் இளவரசிதான். 1967-ல் இருந்து நாங்கள் முடியாட்சியைத் துறந்துவிட்டோம்.
ஐரோப்பாவில் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணினேன். அதற்காக ஒரு "வேர்ல்டு இன் ஹார்மனி' என்ற தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பித்து, அத்தகைய கொடுமைக்குள்ளாகும் மாடுகளை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வந்தோம். தற்போது மாடுகளுக்குத் தவறான உணவுகளை அளிப்பதால் கொடூர நோய்கள் தாக்கும் நிலை ஏற்படுகிறது. அதன் காரணமாக அவற்றை அனுப்ப முடிவதில்லை.
தற்போது பொருளாதாரப் பாதிப்பால் கிரேக்க நாடு நிதிச் சிக்கலில் உள்ளது. அங்குள்ள ஏழைகளுக்குக் கல்வி உதவி செய்வது, ஆடைகள் வாங்கித் தருவது போன்ற உதவிகளைச் செய்து வருகிறோம். தவிர ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவமனை, பள்ளிகளுக்கு உதவி செய்வது ஆகியவற்றிலும் எங்களது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா- கிரேக்கம் இடையே ஒத்த விஷயங்களாகக் கருதி நீங்கள் பெருமைப்படுவது..?
இரு நாடுகளும் பல விஷயங்களில் ஒன்றுபட்டுத் திகழ்கின்றன. அதுதான் இவற்றின் சிறப்பம்சமாகும். மதம், தத்துவ அறிஞர்கள், செறிவான இலக்கியங்கள், நினைவிடங்கள் என பலவற்றில் இந்தியா சிறந்து விளங்குவது போல் கிரேக்கத்திலும் உள்ளது.
இந்தியாவின் மகான்கள் அருளிய தத்துவத்தில் நீங்கள் காணும் தனித்தன்மை என்ன?
இந்தியாவைப் போன்றே கிரேக்கமும் ஆன்மிக சிறப்புத்தன்மை வாய்ந்த நாடு. உதாரணத்திற்கு அறிஞர் சாக்ரடீûஸ கூறலாம். அவர் கூறுவது போல் "ஒன்திங் ஐ நோ, ஐ நோ நத்திங்' (எனக்கு எதுவும் தெரியாது என்பது மட்டும் எனக்குத் தெரியும்). இந்த வாசகத்தைக் கேட்கும்போது வேடிக்கையாக இருந்தாலும் இதுதான் உண்மை.
நீங்கள் என்னிடம் பிரம்ம தத்துவம் குறித்துப் பேசினால், நீங்கள் அதை விளக்க முடியாது. நீங்கள் ஒன்றினைப் பார்க்காவிட்டால், அதற்கும் அப்பால் எதையும் பார்க்க இயலாது. யதார்த்தத்தை நாம் உருவகப்படுத்த முடியாது. இது அருளால் வருவது, நாம் எல்லோரிடத்திலும் அது இருக்கிறது. நாம் அதைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறோம். அதிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது. இந்த உண்மையைப் புரிந்துகொள்வதற்குத்தான் ஞானிகள் தேவைப்படுகின்றனர். நான் கூறுவது ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைதம் போன்றது. இது நமக்குத் தெரியாத ஒன்று. நாம் அறிய முயற்சிக்கும் ஒன்று. இதற்கு இதுதான் என்று பெயரிட முடியாது. அது பெயரிடுவதற்கும் அப்பாற்பட்டது.
நீங்கள் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரைச் சந்திக்கும் போது ஏற்பட்ட, உணர்ந்த ஆன்மிக அனுபவங்கள்?
ஸ்ரீ மகா பெரியவரை முதல் முறையாக நானும், எனது தாயார் ஃபிரெடெரிக்கும் ஸ்ரீ காளகஸ்தியில் 1966-ம் ஆண்டு சந்தித்தோம். நாங்கள் அப்போது அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தோம். இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து தந்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.
காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரைச் சந்தித்த முதல் நொடியிலேயே நான் பிரமித்தேன். காரணம், அத்துணை எளிமை. அதைவிட எளிமையைப் பார்க்க முடியாது. சொல்லப்போனால், அவரது வருகைக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தோம். அவரோ, சிறிது நேரத்திற்கு முன்பாக அந்தக் கோயிலின் மூலையில் தரையில் வந்து அமர்ந்திருந்தார். அதுகூட எங்களுக்குத் தெரியவில்லை. பிறகு, அறிந்தபோதுதான் அவரது எளிமையைக் கண்டு மனம் சிலிர்த்துப் போனேன். அவர் சற்றும் எதிர்பாராத வகையில் அமைதியுடன் காணப்பட்டார். அவர் அதிகம் பேசவில்லை. அவர் எனது கண்களுக்கு மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மாமனிதராகத் தெரிந்தார். நான் (இதைச் சொல்லும்போது இளவரசி ஐரீன் முகபாவனை உணர்ச்சியால் மாறுகிறது) தத்துவ விசாரத்தை உணர்ந்த நொடிகள் அவை.
பிரச்னைகளுக்குத் தீர்வாக இரு நாடுகளின் தத்துவ விசாரம் எப்படி இருக்கமுடியும்?
அதிகப் பணம், அதிக உணவு ஆகியவற்றுக்காக மனம் அலையும்போதுதான் கட்டுப்பாட்டை இழக்கிறோம். இப்போதுதான் தத்துவம் மிகவும் அவசியமாகிறது. எப்படி நாம் செயல்பட வேண்டும் என்பதை நெறிப்படுத்துகிறது. இதை இந்தியாவில் நான் கற்றுக் கொண்டேன். மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை இந்திய தத்துவங்கள் எடுத்துக் கூறுகின்றன. நாம் தத்துவம் படிக்க வேண்டும் என்றால் தர்க்கத்திலும் ஈடுபட வேண்டும். இது விவாதிக்க உதவிடும். எதற்கும் ஓர் ஒழுங்கு வேண்டும். அது பணம் சம்பாதிப்பதாக இருந்தாலும், வீணை வாசிப்பதாக இருந்தாலும் எதற்கும் அவசியமாகிறது. இதற்கு பயிற்சி அவசியம். யோகா, தியானம் உதவுகின்றன. இந்த விஷயத்தில் நான் ஞானி அல்ல. நான் எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் கூறுகிறேன்.அவ்வளவுதான்.
இந்த உலகத்தில் மதத்தின் பெயரால் மோதல்கள் நடைபெறுகின்றன. இதை எப்படித் தடுக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தத்துவங்களைப் பயில்வதன் மூலம், அறிவதன் மூலம், மற்றவர்களுக்குக் கிடைக்கச் செய்வதன் மூலம் இதைத் தடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
நம் மதங்கள் கூறும் கருத்துகளைப் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குத் தர்மத்தின்படி நடக்க வேண்டும். சுய கட்டுப்பாடு, இரக்கம், பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுப்பது இவையெல்லாம் முக்கியம்.
என்னுடைய மதம்தான் உயர்ந்தது என்று நினைக்கும்போதுதான் பிரச்னை வருகிறது.
இதற்கெல்லாம் "ஈகோ'தான் காரணம்.
பல்கலைக்கழகங்களின் மூலம் இரு நாட்டின் தத்துவப் படிப்புகளைப் பரஸ்பரம் மாணவர்களுக்கு சொல்லித்தரும் யோசனை உள்ளதா?
அதுபற்றி முடிவு செய்ய வேண்டியது அரசும், கல்வி நிறுவனங்களும் பேராசிரியர்களும்தான். இதில், நான் ஆலோசனை கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது என்னுடைய வேலையும் இல்லை. எனினும், தனியார் கல்வி நிறுவனங்கள் விரும்பினால் இந்த விஷயத்தில் உரிய ஏற்பாட்டைச் செய்ய முடியும். அதேபோன்று இந்திய தத்துவம் சார்ந்த படிப்புகளை ஆரம்பிப்பது குறித்து என்னுடைய விருப்பத்தைக் கிரேக்கத்தில் உள்ள எனது நண்பர்களிடம் நான் எடுத்துக்கூறுவேன்.
தமிழகத்தைச் சேர்ந்த தத்துவவியல் பேராசிரியர் மறைந்த டி.எம்.பி. மகாதேவனால் நீங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டவர். அவர் பற்றிய உங்களது பார்வை என்ன?
அவர் மிகவும் அடக்கமான மனிதர். முற்றிலும் அசாதாரணமானவர். அவர் 1966}ல் கிரேக்க தலைநகர் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற உலக கலாசாரக் கூட்டத்தில் அத்வைதம் குறித்தும், இந்திய மரபுகள் குறித்தும் ஆற்றிய உரை கேட்போரை மிகவும் ஈர்த்தது. நாங்கள் பிரமித்தோம். அவரிடம் கவர்ந்திழுக்கும் தன்மை இருந்தது. எனது தாயார் அவரை எங்கள் வீட்டுக்கு வரவழைத்துப் பேசினார்.
தற்கால இளையோருக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
இளைஞர்களும், நண்பர்களும் தங்களது கலாசாரத்தின் பொக்கிஷத்தைக் காக்க வேண்டும். எங்களது கலாசாரத்தின் மேன்மையை உணர்த்துகிறோம். தொன்மைக் கால
கிரேக்கத் தத்துவங்களை இன்றைக்கும்கூட கிறிஸ்தவர்கள் பின்பற்றி வருகின்றனர். கிரேக்கத்தின் பழமையான மதம் "கிரீக் ஆர்த்தடாக்ஸ்'. இதன் பொக்கிஷமான விஷயங்கள் கிறிஸ்தவ மதத்திலும் பின்பற்றப்படுகின்றன!
சந்திப்பு: வே. சுந்தரேஸ்வரன்,
பா. கிருஷ்ணன்
கே.டி. ராமகிருஷ்ணன் எடுத்துள்ள படம் சேலை அணிந்து பொட்டும் வைத்துள்ள கிரேக்க இளவரசியை இந்தியப் பெண்ணாகவே காட்டுகின்றது. ஆனால், அந்தப் படத்தை நகலெடுத்துக்காட்டிட இயலவில்லை.
நன்றி :- தினமணி, ஞாயிறு கொண்டாட்டம், 11-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.