Friday, November 23, 2012

ஐந்து பெண்களில் யாரால் ஆபத்து ? மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாறாம் மகிந்த ராஜபக்சே !


நவநீதம் பிள்ளை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையரான தென்னாப்பிரிக்கத் தமிழரான நவநீதம் பிள்ளை. மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் இலங்கையைச் சர்வதேச முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடிப்பது போல் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பெண்மணி. இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் என்றாலே கிலி பிடித்து ஆட நவநீதம் பிள்ளையின் கடுமையான நிலைப்பாடுதான் காரணம். மகிந்த ராஜபக்சே ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை தரக்கூடியவர்களின் முதன்மையான பெண் நவநீதம் பிள்ளை

சூசன் ரைஸ்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவுக்கான தூதர் சூசன் ரைஸ். இவரது பணிக்காலத்தில்தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. இப்பொழுது இவரை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஒபாமா நியமிக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. அப்படி சூசன் ரைஸ் மட்டும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகிவிட்டால் மகிந்த ராஜபக்சேவுக்கு சுத்தமாக தூக்கமே வராது. இலங்கை மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்னும் கடுமையானதாக இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.


சமந்தா பவர்

சூசன் ரைஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகிவிட்டால் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்படக் கூடியவர் சமந்தா பவர். சூசன் ரைஸால் அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கை மீதான கொள்கையைக் கடுமையாக்க முடியுமேயானால் சமபந்தா பவர், அப்படியே நடந்தாக வேண்டும். அப்படியானால் இனிவரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை என்பது இலங்கைக்கு எரிச்சலூட்டக் கூடிய ஒரு அமைப்பாகவே இருக்கும். இன்னும் எத்தனை கண்டனக் கணைகள் ஐ.நா.விலிருந்து வருமோ? என்று கலங்கிக் கிடக்கிறார் மகிந்த ராஜபக்ச.

ஷிராணி பண்டாரநாயக்கே

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே. இவர் மீது இம்பீச்மெண்ட் எனப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் விவகாரம் சர்வதேச விஷயமாகிப் போனது. ஐக்கிய நாடுகள் சபையும் ஷிராணி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கண்டித்தது. உலக நாடுகள் பலவும் இலங்கையின் நீதித்துறை சுதந்திரமற்றுக் கிடப்பதையே ஷிராணி பண்டாரநாயக்கே விவகாரம் வெளிப்படுத்துகிறது என்று கையில் சாட்டையை எடுத்து சுழற்ற ஆரம்பித்தன. அனேகமான ஷிராணி விவகாரம்தான் மகிந்த ஆட்சிக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்க வைத்த முக்கிய விவகாரமும் கூட.

சோனியா காந்தி....

இவரால் நேரிடையாக மகிந்த ராஜபக்சேவுக்கு ஆபத்து இல்லை என்று தோன்றலாம். ஆனால் இந்திய அரசியல் சூழல், அமெரிக்காவின் நிலைப்பாடு, தமிழக அழுத்தம் இவற்றினால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாடு எடுக்க சோனியாவே காரணமாக இருக்கலாம். குறிப்பாக இந்தியா வலியுறுத்தி வரும் டிஏ 13-வது அரசியல் சாசனத் திருத்தத்தை மகிந்த ராஜபக்சே கைவிட்டால் இந்தியா கடும்போக்கை மேற்கொள்ள சிக்னல் கொடுக்கக் கூடியவராக சோனியா காந்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆக 5 பெண்களால் தூக்கத்தை தொலைக்கிறார் மகிந்த என்கின்றனர் இலங்கை ஊடகவியலாளர்கள்

சோதிடமும் அப்படித்தானாம்
சோதிடத்தை அப்படி நம்புகிறவர்கள் இலங்கைவாசிகள். மகிந்த ராஜபக்சேவும்கூட அப்படித்தான். அப்படித்தான் அண்மையில் சோதிடம் பார்த்தபோது அவரது ஆட்சிக்கு ஒரு பெண்தான் சூனியம் வைக்கப் போகிறார் என்று சொல்ல வெளவெளத்துப் போயிருக்கிறாராம்

மகிந்த. இந்த 5 பேரில் யாரால் நமக்கு ஆபத்து என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறாராம் மகிந்த ராஜபக்சே.                                                      
நன்றி :- ஒன் இந்தியா, 23-11-2012                                            





0 comments:

Post a Comment

Kindly post a comment.