Friday, November 30, 2012

"ஜகோ கிரஹக் ஜகோ'- நுகர்வோர் நலனுக்கான சிறப்புத் தபால் தலை !



நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், சிறப்புத் தபால் தலையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வெளியிட்டார்.

நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதில் அரசு மேற்கொண்டு வரும் சாதனைகளை சித்திரிக்கும் வகையில் அந்த தபால் தலை ரூ.5 மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் "ஜகோ கிரஹக் ஜகோ' என்ற நுகர்வோர் விழிப்புணர்வு பிரசார வாசகம் இடம்பெற்றுள்ளது. நுகர்வோர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

இவ்வகைச் சிறப்பு தபால் தலைகள் மொத்தம் 4 லட்சம் அச்சிடப்பட்டுள்ளன.

தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியது:

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள அம்சங்கள் மட்டும் போதாது. இந்தச் சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

இதன்படி, "ஜகோ கிரஹக் ஜகோ' என்ற பெயரில் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ரயில் டிக்கெட், பயன்பாட்டு ரசீது மற்றும் அஞ்சல் அட்டை ஆகியவற்றில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான பிரசாரம் செய்யப்படுகிறது.

மேலும், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏஜென்டுகளின் முறைகேடுகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் தாமஸ்.

 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நுகர்வோரின் குறைகளுக்கு விரைவாகவும், செலவின்றியும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கம்.

நுகர்வோர் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய இழப்பீடு பெறவும் இது வகை செய்கிறது.                                                                                                                              

நன்றி :- தினமணி, 30-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.