Monday, November 12, 2012

மாநகராட்சி சொத்து வரி: விரிவாக்கப் பகுதியினர் அவதி !




சென்னை மாநகராட்சி சொத்து வரியை செலுத்துவதில் விரிவாக்கப் பகுதிகளில் இருப்பவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

சென்னையில் வீடு மற்றும் இடம் வைத்திருப்பவர்களிடம் இருந்து ஆண்டுதோறும் சொத்து வரியை மாநகராட்சி வசூலித்து வருகிறது. இந்த வரியை வசூலிக்க மாநகராட்சி பல்வேறு புதிய முறைகளை தொடங்கியுள்ளது. ஆனால் இந்த புதிய முறைகளைப் பயன்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகளைப் பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர்.

விரிவாக்கப் பகுதிகள்: சென்னையுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து வரி வசூல் செய்யும் மையங்கள் முழுமையாகக் கணினிமயமாக்கப்படவில்லை. இதனால் பல பகுதிகளில் பழைய முறையிலேயே வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இணையதள வசதி உள்ள மையங்களில் பழைய வரி பாக்கியைக் கணினி மூலமே பெறலாம். ஆனால் சில விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பழைய ரசீதை அதிகாரிகள் கேட்கிறார்கள். இது குறித்துக் கேட்டால், பழைய பாக்கி ஏதேனும் உள்ளதா என்பதைச் சரிபார்க்க ரசீது தேவைப்படுகிறது என்கின்றனர் அதிகாரிகள்.

ஓராண்டுக்கு முன்பு செலுத்திய வரிக்கான ரசீது கிழிந்தோ அல்லது தொலைந்தோ விடுகிறது என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

மேலும் சில பகுதிகளில் இணையதளம் மிகவும் மெதுவாகச் செயல்படுவதால், வரி செலுத்துவோர் ஒவ்வொருவரும் குறைந்தது 15 நிமிடம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அண்மையில் வீடு வீடாகச் சென்று வரி வசூல் செய்யக் கையடக்க இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த கருவிக்கும் பற்றாக்குறை உள்ளது.

சில வங்கிகளில் சொத்து வரியைச் செலுத்தும் முறை புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில வங்கிகளில் இந்த வசதி தொடங்கப்படவுள்ளது.

சில மாதங்களாக நடைமுறையில் இருக்கும் இந்தப் புதிய முறையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வரி செலுத்தியுள்ளனர்.

வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தவறான முகவரிகள் அச்சடிக்கப்பட்டுத் தரப்படுகின்றன. இதனால் பலரும் குழம்பி உள்ளனர்.

இது குறித்து மாதவரத்தைச் சேர்ந்த விஜயகுமார் கூறியது: சொத்து வரி செலுத்தியதற்கான ரசீதில் என்னுடைய பெயர் மட்டும் சரியாக இருக்கிறது. ஆனால் முகவரி தவறாக உள்ளது. ரசீதை மாற்றித் தரும்படி அதிகாரிகளை அணுகினால், அதற்குத் தனியாக விண்ணப்பம் அளிக்கவேண்டும் என்கின்றனர். ஒரு வேலைக்கு இரு வேலைகளை செய்ய வேண்டியுள்ளது என்றார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: இணைய தள வசதியும், கையடக்கக் கருவி வசதியும்கூடிய இயந்திர வசதியும் விரைவில் செய்து கொடுக்கப்படும். வங்கிகளில் வரி செலுத்தும் வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்தினால் பாதிச் சிரமங்கள் குறையும்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி ;-தினமணி, 12,நவம்பர், 2012                                                                                         

மாநகராட்சி மையங்களில் நேரடியாகக் கணினி மூலம் வரி செலுத்தும் முறைகளைக் கையாளுவதே எல்லாவற்றிற்கும் சரியான முறையாக இருக்கும். இல்லை என்றால் செலுத்திய வரியையே மீண்டும் செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குப் பொதுமக்கள் ஆளாக்கப் படுவார்கள்.இதுதான் முந்தைய அனுபவங்கள்.

வங்கிகள் மூலம் பணம் செலுத்துவதென்றால், அதற்கான வங்கிக் கிளைகளை மாநகராட்சிக் கட்டிடங்கள் உள்ள வளாகங்களுக்குள்ளேயே அமைத்திடல் வேண்டும்.

இல்லை என்றால் குழப்பங்களே தொடர்கதைகளாகும்.                                                                          


0 comments:

Post a Comment

Kindly post a comment.