Saturday, November 24, 2012

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் பெயர்கள் ஆங்கிலப் பள்ளிகள் எனப்பெயர்மாற்றிடல் வெண்டும் !

மெட்ரிக்குலேஷன் என்னும் பெயரை மாற்ற வேண்டுமா? ஏன்? எதற்காக? இப்பள்ளிகளின்  தொன்மை என்ன? புகழ் என்ன? இதில் படித்தவர்கள் யார் யார்? எப்படிப்பட்டவர்கள்? அப்படிப்பட்ட பள்ளிப்பெயரைத் தற்போது மாற்றிக்கொள்ள முடியுமா? இது தேவைதானா?

இந்தியாவின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக் கழகம், நாட்டிலேயே தனித்தன்மைபெற்ற வகையில், நமது மாநிலத்தில் பல ஆண்டுகளாக இடைநிலைக் கல்வியையும் நிர்வகித்து வந்தது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என  வழங்கப்பட்ட இப்பள்ளிகளின் கடைசி மூன்றாண்டுகளுக்குரிய பாடத்திட்டத்தைப் பல்கலைக்கழகமே வடிவமைத்ததுடன், மொழிப்பாட நூல்களையும் வெளியிட்டது.

பதினொன்றாம் ஆண்டிறுதியில், பல்கலைக் கழகமே தேர்வு நடத்தி, "மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் லீவிங் சர்டிபிகேட்' என்னும் சான்றிதழ்களை வழங்கியது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரிகளில் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் மாநிலக் கல்விப்பிரிவில் உயர்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் அரசுத் தேர்வு நடத்தப்பட்டு, இடைநிலைப் பள்ளி  இறுதி வகுப்புச் சான்றிதழ்கள் (எஸ்.எஸ்.எல்.சி) வழங்கப்பட்டன.

இவர்களும் கல்லூரிகளில் படிப்பைத் தொடர்ந்தனர். அந்த காலகட்டத்தில் வேலை வாய்ப்பிற்கும் உயர் கல்வி பெறவும் மெட்ரிக்குலேஷன் தேர்ச்சியே அடிப்படைக் கல்வித் தகுதியாக இருந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி அதற்குச் சமமானது என்றுதான் விளம்பரப்படுத்தப்பட்டது.

1975-இல் தமிழ்நாடு, புதுச்சேரிப் பகுதிகளில் முப்பது மெட்ரிக்குலேஷன் பள்ளிகளே இருந்தன. இவற்றை இயக்கிவந்த சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட், அவ்வாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதன்படி பல்கலைக் கழகம், உயர்கல்விச் செயல்முறைகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால். இடைநிலைப் பள்ளிகள், அதற்குரிய பாடதிட்டங்கள், பொதுத் தேர்வுகள் ஆகியவற்றை நடத்தவும் கண்காணிக்கவும் போதுமான அடிப்படை வசதிகளைப் பெற்றிருக்கவில்லை எனக் காரணம்காட்டி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்தது.

அரசு அதனை ஏற்றுக்கொண்டு, 1976-இல் பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் மெட்ரிக்குலேஷன் போர்டு அமைத்து, அப்பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் கொண்டு வந்து ஆணையிட்டது.

இதன்பின்னர் மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தத் தொடங்கியது. இவ்வாறு பல்கலைக் கழகத்தின் மேலாண்மையிலிருந்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்து சேர்ந்தன.

வந்த வேகத்தில் மெட்ரிக்குலேஷன் நிர்வாகங்கள் தங்களுக்கென்று தனி இயக்குநரகம் அமைக்கக் கோரின. மாநிலக் கல்வி வாரியத்தில் இணைந்துவிட்டால், 1975-ஆம் ஆண்டு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதாலும் அதன்மூலம் ஆசிரியர் நியமனம், கட்டண முறைகளில் நிர்வாகச் சிக்கல் ஏற்படும் என்பதாலும் தனித்து இயங்குவதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தன. தமிழ்நாடு அரசு 2001-இல் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்காகத் தனி இயக்குநரகத்தை உருவாக்கியது.

பத்தாம் வகுப்புக்குப் பாடத்திட்டம் தயாரித்தலும் பள்ளி அங்கீகாரம் வழங்குவதுமே இதன் முக்கியப் பணிகளாக இருந்தன. பல்கலைக் கழகத்தின் கடுமையான விதிகளிலிருந்து விடுதலையான அதேசமயம், தனி இயக்குநரகமும் கிடைத்ததால் புற்றீசலாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் முளைக்கத் தொடங்கின. இப்போது தமிழகத்தில் ஏறத்தாழ 4,100 பள்ளிகள் உள்ளன.

1978-இல் தமிழ்நாட்டில் 10+2+3 என்னும் நாடு தழுவிய கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தது. பள்ளிக் கல்வியில் இடைநிலைக் கல்வியாகிய பத்தாண்டுப் படிப்பிற்குப் பின்னர் இரண்டாண்டு மேனிலைக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இறுதிவகுப்பும் பத்தாண்டுகளாகக் குறைந்தது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பத்தாண்டு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மேனிலைக் கல்விக்காக மாநிலக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, அதற்குரிய

பொதுத் தேர்வில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் 10+2+3 பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததன் விளைவு, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகக் கல்லூரிக்கு அனுப்பும் தகுதியை இழந்தன.

இந்த நிலையில் மெட்ரிக்குலேஷன் என்னும் சொல்லைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும். மெட்ரிக்குலேஷன் என்பது ஒரு தேர்வு. இந்த ஆங்கிலச் சொல்லுக்கு, "பல்கலைப் படிப்பிற்கான நுழைவு உரிமை' என்றுதான் சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில அகராதி பொருள் கூறுகிறது. 1977-78 ஆம் கல்வியாண்டு முடிய மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாகக் கல்லூரிப் படிப்பிற்குச் சென்றனர். அந்நிலையில் இச் சொல்லுக்குப் பொருள் இருந்தது. பல்கலைக் கழகப் படிப்பிற்கு மாணவர்களை அனுப்பாத பள்ளிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எனப் பெயர் வழங்குவது தவறாகாதா?

இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க், கனடா போன்ற மேலை நாடுகளில் கல்வியாண்டின் தொடக்கத்தில் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் மெட்ரிக்குலேஷன் விழா கொண்டாடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் தேர்வு முடித்த மாணவர்களைக் கல்லூரிக்கு வரவேற்கும் விழாவாகத்தான் அது நடத்தப்படுகிறது.


தமிழார்வலர்கள் சிலர் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் என்பதைப் "பதின்மப் பள்ளிகள்' எனத் தமிழில் வழங்குகின்றனர். இது தவறான மொழி பெயர்ப்பாகும். தமிழ்நாட்டில் எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் பத்து வகுப்புகள்தாம் உள்ளன. அவை பதின்மப் பள்ளிகள் ஆகமாட்டாவா? "மேட்ரிக்' என்னும் சொல்லை "மெட்ரிக்' என முற்றிலும் மாறுபட்ட சொல்லோடு இணைத்துப் பொருள் கொள்வது சரியாகாது.

இரண்டாவது நிலையில், தமிழ்நாட்டில் 2009-இல் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர்க் கல்விமுறையால் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் அடிப்படை வடிவமைப்பு முற்றிலுமாக மாறியுள்ளது. சமச்சீர்க் கல்விமுறை இப்போது பொதுப்பாடத் திட்டம் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இத்திட்டத்தின்படி, மாநிலக் கல்வி வாரியப் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகிய நான்குவகைப் பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்னும் அடிப்படையில் இயங்கிவருகின்றன.

2011-12ஆம் கல்வியாண்டில் பொதுப்பாடத் திட்டத்தின்படி நான்குவகைப் 

பள்ளிகளிலும் முதன்முதலாக ஒரே பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 

 மெட்ரிக்குலேஷன் பள்ளி  மாணவர்களுக்கு முன்பு போலன்றி, 

இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ்கள்தாம் (எஸ்.எஸ்.எல்.சி) 

வழங்கப்பட்டுள்ளன. இச்சான்றிதழ் பெற்றவர்கள் பள்ளிகளில் மேனிலைக் 

கல்வியைத் தொடரலாமே ஒழிய, கல்லூரிகளில் சேர இயலாது.

பள்ளி நிர்வாகங்கள் மெட்ரிக்குலேஷன் என்னும் பெயரைச் சேர்த்துக்

கொள்வதால் பெருமைப்படலாம். ஆனால் அது பொருட்பிழை உடையது,

முரணானது என்பதை உணர வேண்டும். இது அறிவுடைமையாகாது. எனவே,

இப் பள்ளிகள் இனி ஆங்கிலப் பள்ளிகள் எனப் பெயரை மாற்றிக் கொள்வதில்

தவறேதுமில்லை. அதேபோல இயக்குநரகமும் ஆங்கிலப் பள்ளிகளின்

இயக்குநரகம் ஆகலாம். அரசும் கல்வியாளர்களும் இதுபற்றிச் சிந்திப்பது

நல்லது. பிழைக்கும் பழிக்கும் நாணுவது தமிழர்களின் மிக்குயர்ந்த பண்பாம்.

By தமிழ்ப்பெரியசாமி, தினமணியில் எழுதிய கட்டுரை.

First Published : 24 November 2012 01:34 AM IST

0 comments:

Post a Comment

Kindly post a comment.