Thursday, November 22, 2012

தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பு வரலாற்றில் இலக்கியவாதி வ.உ.சி. !!


வ.உசி. என்னும் பதிப்பாளன்

கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஐ.எஸ்.பி.என். நம்பரோடு கூடிய நூலை வெளியிட்டிருந்தால் தகுதியாளர் என்று அரசு அறிவிப்பு வந்தவுடன், அடுத்தவர் எழுதிய நூலைக்கூடத் தன் பெயரில் அச்சிட்டுக்கொள்ளப் பதிப்பகத்தைத் தேடி அலையும் பலருக்கு வ.உ.சிதம்பரனாரின் பதிப்புப் பணியைத் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு இல்லை.

சுயநல உணர்வில் தன் மரபையே மறந்துபோன தமிழனுக்கு வ.உ.சி.யின் பதிப்புப் பணியை மறந்து போயிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. வ.உ.சி.யின் மாபெரும் அரசியல் சாதனைகள் மறக்கப்படும் நிலையில், அதிகம் மறியப்படாதவையான அவருடைய தமிழ்ப் பணியின் ஒரு பகுதியாக உள்ள பதிப்புப் பணியின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை.

தமிழன் என்றுமே வரலாற்ற மறந்து போகக் கூடியவன் என்பதற்கு,

        நாட்டுப்பற்றால் முன்னே நாய்படாப் பாடுபட்ட
        ஓட்டப் பிடார ஒளிர்மறவன் - மாட்டன்று
        நன்றி பாராட்டாத நாடொரு நூற்றாண்டு
        சென்றபின் செய்யும் சிறப்பு.
என்று, வ.உ.சி. நூற்றாண்டு விழா நேரத்தில் பாவாணர் சொன்ன மேர்கண்ட பாடல் சிறந்த சான்றாக உள்ளது.

பலரின் தமிழ்நூல் பதிப்புப்பணி, வரலாற்ரில் பரந்து காணப்பட்டாலும், வ.உ.சி.யின் பதிப்புப் பணியை வியந்து பார்ப்பதற்குக் காரணங்கள் பல உண்டு. கோவை சிறையில் செக்கிழுத்த சூழலில் தொல்காப்பியத்தை முழுமையாக வாசித்து அதன் பெருமையை உணர்ந்தநிலையில், எளிய உரையொன்று எழுதிப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வ.உ.சி. முடிவு செய்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை பொதுவெளிக்கு வராது ஓலைச்சுவடிகளில் முடங்கிக் கிடந்த தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரைச் சுவடியை அச்சிட்டுத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியவர் வ.உ.சி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எழுத்ததிகார, சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையுடன் கூடிய பதிப்புக்கள் வெளிவந்துவிட்டன. 1920-ல் கா.நமச்சிவாய முதலியார் பொருளதிகார அகத்திணை, புறத்திணையியலை இளம்பூரணர் உரையுடன் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். என்றாலும், பொருளதிகாரம்- இளம்பூரணர் உரையை முழுவதுமாக முதன்முதலில் வ.வு.சியே பதிப்பித்து வெளியிட்டார்.

1910-ஆம் ஆண்டு கோவைச் சிறையில் இருந்த நேரத்தில் தொல்காப்பியத்தை முழுவதுமாக வாசித்ததன் பயனாகப் பழைய உரைகளின் கடுநடையை வ.உ.சி. உணர்ந்துள்ளார். இதனால் எளிய உரை எழுத எண்ணியிருக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்தபின்னர் எளிய உரையையும் எழுதியுள்ளார். சென்னை எழும்பூரில் வசித்த காலத்தில் தான் எழுதிய உரையைப் பூர்த்தி செய்யக் கருதி தி.செல்வகேசவராய முதலியாரிடம் எடுத்துச் சென்று சரிபார்த்துள்ளார். அப்பொழுது த.கனக சுந்தரம் பிள்ளையிடமிருந்து கிடைத்த தொல்காப்பிய இளம்பூரண அச்சுப் புத்தகமும், சொல்லதிகார ஏட்டுப் பிரதியும், பொருளதிகார ஏட்டுப்பிரதி சிலவும், வ.உ.சி.க்குக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் அவற்றைப் படித்துப் பார்த்த சூழலில் இளம்பூரணரின் எளிய உரையைக் கண்டு தாம் உரை எழுதும் நோக்கத்தைக் கைவிட்டுள்ளார். இதன் பின்னரே தொல்காப்பியம்-இளம்பூரணர் உரைச் சுவடியைப் பதிப்பிக்கும் பணியை அவர் தொடங்கியுள்ளார்.  

1920-ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் அச்சிடத் தொடங்கியுள்ளார். 1921-ல் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரண்டு இயல்களைக் கொண்ட முதல் தொகுதியை வெளியிட்டுள்ளார். 1928-ல் எழுத்ததிகார இளம்பூரணர் உரையை வெளியிட்டுள்ளார். பொருளதிகார இளம்பூரணர் ஏடுகளை எஸ்.வையாபுரிப் பிள்ளை, தி.நா. சுப்பிரமணிய ஐயர், த.மு.சொர்ணம் பிள்ளை ஆகியோரிடமிருந்து வ.உ.சி.பெற்றுள்ளார்.

பொருளதிகாரத்தின் எஞ்சிய ஏழு இயல்களை வையாபுரிப்பிள்ளையுடன் இணந்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார். 1938-ல் களவியல், கற்பியல், பொருளியல் என்னும் மூன்று இயல்களை மட்டும் தனி நூலாக வெளியிட்டுள்ளார். பின்னர் 1936-ல் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் பகுதிகள் கொண்ட தனி நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இந்த ஏழு இயல்களில் மட்டும்878 பாட வேறுபாடுகளை வ.உ.சி. சுட்டிக்காட்டியுள்ளார். வையாபுரிப் பிள்ளையுடம் இணந்து செயல்பட்டு இவ்வகையான கடினமான பணியை வ.உ.சி. சாத்தியப்படுத்தியுள்ளார்.


இந்தப் பொருளதிகாரப் பதிப்பாக்கத்திற்குத் த.மு. சொர்ணம் பிள்ளையின் கடிதப் பிரதி, தி.நா.சுப்பிரமணிய ஐயர் கடிதப்பிரதி, எஸ்.வையாபுரிப்பிள்ளையின் ஏட்டுச் சுவடி ஆகியன உதவியதாக வ.உ.சி. குறிப்பிடுகின்றார். இதுமட்டுமல்ல, வாவிள்ளா இராமஸ்வாமி சாஸ்த்ருலு பொருளுதவி புரிந்ததாகவும் வ.உ.சி. முன்னுரையில் குறிப்பிடுகிறார். தனக்கு உதவியவர்கள நன்றி உணர்வோடு பதிவு செய்கின்ற உயரிய வழக்கத்தை அவர் பின்பற்றியுள்ளார்.

தொல்காப்பிய எழுத்து, சொல், பொருள் மூன்று அதிகாரத்திற்குமான நச்சினார்க்கினியர் உரைப் பதிப்பைச் சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்து வெளியிட்டதப்போன்று, தொல்காப்பியம் முழுமைக்குமான இளம்பூரணர் உரையைப் பதிப்பிக்க வ.உ.சி. எண்ணியிருக்கிறார். ஆனால், எழுத்து, பொருள் எனும் இரண்டு அதிகாரங்களை மட்டுமே பதிப்பித்து வெளியிட அவரால் முடிந்தது.சொல்லதிகார இளம்பூரணர் உரையைக் இறுதிவரை அவரால் பதிப்பிக்க முடியாமலேயே போனது.

தொல்காப்பியம் பொருளதிகார இளம்பூரணர் உரையை மட்டுமல்ல, திருக்குறள் மணக்குடவர் உரையை முதன் முறையில் அச்சிட்டு வெளியிட்டவர் வ.உ.சி. அது 1917-ல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னிலைக்கும் விருத்தியுரை எழுதி அவர் வெளியிட்டார்.

வ.உ.சி. பதிப்புக்களின் சிறப்புக் கூறுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று ஏட்டுப்பிரதிகளிலும், அவருக்கு முந்தைய பதிப்புக்களிலும் நூற்பாவுக்குத் தரப்பட்டிருந்த பொழிப்புரைக்கு மாற்றாகப் பதவுரை எழுதிப் பதிப்பித்தது. மற்றொன்று உரைவேறுபாடு காட்டல். உதாரணமாக நூன்மரபு 14-ஆவது நூற்பாவிற்கு,
                                                
புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளத்தாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவம் என்ற இளம்பூரணர் உரையை  மறுத்து உள்ளாற் பெறும் புள்ளி  குறுகிய மகரத்திற்கு வடிவம் என்பதே இச்சூத்திரத்திற்குச் சரியான உரை எனக் குறிப்பிட்டுப் புறத்தாற் பெறும்புள்லி என்னும் சொற்றொடரைத் தேவையற்ரதாக்கி உரை வேறுபாடு காட்டுகிறார். ( 1928 )

அரசியல் போராட்டப் பின்புலத்தில் வாழ்ந்த வ.உ.சியால் எப்படி நூல் பதிப்புப் பணியில் ஈடுபட்டுச் செயபட முடிந்தது என்பது வியப்பான வரலாறாகும். இதற்கான காரணங்கள் சில அவரது வரலாற்றில் காணப்படுகின்றன.அவரிடம் இயல்பாக இருந்த தமிழார்வமும், 1912-ல் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் திருமணம் செல்வகேசவராய முதலியார் , எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றோரிடத்து ஏற்பட்ட தொடர்புகளையும் முக்கியமானவைகளாகச் சொல்லலாம்.

வ.உ.சி-க்கு. தமது 40 ஆண்டுகால அரசியல் பணியை மக்கள் போதிய அளவு உணரவில்லை என்ற வருத்தம் இருந்திருக்கிறது. அவ்வருத்தத்தைப் போக்கி ஆற்றிக்கொள்ளும் துறையாக இலக்கியத்துறை அவருக்கு வாய்த்ததாகவும், அதன் மூலம் தன் துயரத்தை வ.உ.சி. போக்கிக் கொண்டதாகவும் க.ப. அறவாணன் கூறுகின்றார். (செந்தமிழ்ச் செல்வி 1972 )

விடுதலைப் போராட்ட இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய வ.உ.சியின் மாபெரும் அரசியல் பணியையும் தமிழ்ப் பணியையும் இன்று நாம் மறந்துவிட்டாலும் அவர் பதிப்பித்துச் சென்ற தொல்காப்பியப் பதிப்புக்கள் தமிழ் பதிப்பு வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன.

துணை நின்ற நூல்கள் :-

1. அரசு.மா.ரா.2005 வ.உ.சிதம்பரனார்.புதுதில்லி/சென்னை சாகித்திய அகாதெமி

2. சிதம்பரம் பிள்ளை வ.உ. (ப. ஆ.) 1928. தொல்-எழுத்து இளம்பூரணர் உரை.சென்னை: வாவிஉள்ள இராமசாமி சாஸ்த்ருலு அண்டு சன்ஸ்

இதழ் :-

1. அறவாணன். க. ப. 1972. செந்தமிழ்ச் செல்வி, செப்டம்பர், வ.உசியின் இலக்கணப் பதிப்புப் பணி.

இந்தக் கட்டுரையானது, இரா.வெங்கடேசன் எழுதியுள்ள தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள் என்ற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\

இதனை வெளியிட்டவர்கள் :- இராசகுணா பதிப்பகம், 101/ 3/3 ஜீனியஸ் சாலை, சைதாப்பேட்டை,, சென்னை-600 015. விலை ரூ.75/- கைபேசிஎண் ;- 94440 23182

நூல் விளக்கக் குறிப்புரை :-

1 .தமிழ்ப் புலமை மரபில் சிலப்பதிகாரப் பதிப்புருவாக்கம்.

2 .சமயப் பரவல் எதிர்ப்பும் ஆசாரக்கோவை அச்சுருவாக்கமும்

 3. வ.உ.சி. எனும் பதிப்பாளன் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பு வரலாறு

4. 19-ஆம் நூற்றாண்டின் நூல் பதிப்பு முறைமைகளும் தொல்காப்பியப் பதிப்புக்களும் 

5. செவ்விய நூல்கள் சந்தி பிரித்தல் குறித்த விவாதங்கள்: சாக்கை ராஜம் பதிப்புக்களை முன்வைத்து

6. உ.வே.சா.வின் புலமைச் செயல்பாடுகள் அல்லது சங்கநூல்களின் அச்சுருவாக்க வரலாறு

7. சிந்துவெளி ஆய்வுகள் :- இரண்டு தமிழ்ப் பதிப்புக்களும், இருவேறு ஆய்வு அணுகுமுறைகளும்

8. தமிழ் இலக்கண நூல்களின் பதிப்புருவாக்க வரலாறு.

பெரும்பான்மை நூல்களின் பதிப்பு வரலாறுகளை அறிவதற்குரிய ஆவணமாக இத்தொகுதிகள் விளங்குகின்றன.ஒவ்வொரு நூலுக்கும் இன்றுவரை உருவாக்கப்பட்ட பதிப்புக்கள் குறித்த விவாதத்தையும் பட்டியலையும் இந்நூல் முன்வைக்கின்றது. இது இந்நூலின் சிறப்பம்சமாகும்.

இவற்றுடன், அணிந்துரை, வாழ்த்துரை, தமிழ் நூல் பதிப்பு வரலாறு அல்லது தமிழ்ச் சமூக வரலாறு -ஆசிரியரின் தன்னுரை இடம்பெற்றுள்ளது.

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் தமிழை இன்றளவும் தொட்டுக் கூடப்பார்க்காதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். திருக்குறளைப்போன்று ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெற வேண்டிய நூல்.

இதனைத் தக்க தருணத்தில் எழுதியுள்ள பெரியவர் இரா.வெங்கடேசன், வெளியிட்டுள்ல இராசகுணாபதிப்பகத்தார் பெரிதும் பாராட்டத்தக்கவர்கள்.

மேலும் வ.உ.சி.-யின் இலக்கியப் பணிகளின் சுருக்கத்தைக் கீழ்க்கண்ட பதிவிலும் படித்து மகிழலாம்.                                                                              

http://rssairam.blogspot.in/2012/11/blog-post_6607.html 

இலக்கியத்திலும் தோய்ந்த தேசியவாதி ! தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை ! 

இப்பதிவினை முழுமையாகப் படிக்கும் வலைப்பதிவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வ.உ.ச தேசியவாதி மட்டுமல்ல, தமிழிலக்கியத்திலும் தலை சிறந்த பண்பாளர் என்பதை அறியலாம்.0 comments:

Post a Comment

Kindly post a comment.