Tuesday, November 20, 2012

ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டா மட்டுமல்ல, 'லைக்' கொடுத்தா கூட கைதாகலாம்!



மும்பை: ஃபேஸ்புக்கில் ஏதாவது கமெண்ட் போட்டாலோ, ஏன் அதற்கு லைக் கொடுத்தாலோ கூட கைது செய்யப்படலாம் என்ற நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தபோது மும்பையில் நடந்த பந்த் குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய 21 வயது பெண் ஷாஹீன் மற்றும் அதற்கு லைக் கொடுத்த ரேணு ஸ்ரீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

''மரியாதை என்பது ஒருவர் சம்பாதிப்பது, கட்டாயப்படுத்திப் பெறுவதில்லை. இன்று (நேற்று முன்தினம்) மும்பையில் முழு பந்த் நடப்பதற்கு காரணம் மரியாதை அல்ல பயம்'' என்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஷாஹீன் தெரிவித்திருந்தார். அதற்கு ரேணு லைக் கொடுத்திருந்தார். உடனே இது குறித்து சிவசேனா தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் ஷாஹீன் மற்றும் ரேணுவைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஷாஹீனின் உறவினர் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் பகுதியில் வைத்துள்ள கிளினிக்கைச் சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

ஆனால், இவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்விகள் குவியவே, இப்போது இதில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டதற்காக 2 பெண்களைக் கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ மகாராஷ்டிரா முதல்வர் பிரி்த்விராஜ் சவானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் 2 பெண்களைக் கைது செய்தது சட்டவிரோதமானது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கைது நடவடிக்கைக்கு அன்னா குழு உறுப்பினரான கிரண் பேடி மற்றும் ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவை விட அதிகச் சொத்து வைத்துள்ளார் என்று டுவிட்டரில் தெரிவித்த புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் எதையும் கமெண்ட் போடும் முன் யோசித்து செய்யவும்.

சைபர் கிரைமை பொறுத்தவரை, அதிகார வர்க்கத்தினர் நினைப்பதே சட்டம் என்றாகி வருவது நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல! 

நன்றி:- ஒன் இந்தியா, 20-11-2012

1 comments:

Kindly post a comment.