Friday, November 16, 2012

புதுவை பாரதியார் இல்லம் புத்துயிர் பெற வேண்டு(வோ)ம் !


"புதுவையிலுள்ள பாரதியார் இல்லம் செப்பனிடப்படாமலும், பாதுகாக்கப்படாமலும் கிடக்கிறது. கேள்வி கேட்பாரில்லை. திருவல்லிக்கேணி பாரதியார் இல்லம் முழுமையான நினைவகமாகச் செயல்படுகிறதா என்றால் இல்லை.

கவிஞர் அமுதபாரதி குறிப்பிட்டவாறு, காசியில் பாரதி வாழ்ந்த இடமும், பயன்படுத்திய பொருள்களும் இருப்பது தெரிகிறது. பாரதியின் சகோதரர் விஸ்வநாத ஐயரின் மருமகன் பேராசிரியர் கிருஷ்ணனின் (86) காலத்துக்குப் பிறகு அவையெல்லாம் என்னவாகப் போகிறதோ? மூச்சுக்கும் பேச்சுக்கும் பாரதியை மேற்கோள் காட்டும் பாரதி அன்பர்கள் ஏன் பாரதியின் நினைவிடங்களைப் பராமரிப்பது பற்றி அக்கறை காட்டுவதில்லை?'' - என்ற கலாரசிகனின் நியாயமான கோபமும், ஏக்கமும் அத்தகைய ஆவணங்கள் காலத்தால் அழிந்துவிடக்கூடாதே என்கிற அவரது தவிப்பும் "தமிழ்மணி-இந்தவாரம் பகுதி, 5.8.12' தேதியிட்ட நாளிதழில் பளிச்சென வெளிப்பட்டிருந்தது.

கலாரசிகனின் இந்த ஏக்கத்தின் எதிரொலியாக அடுத்த வாரமே மூத்த தமிழறிஞர் கி.ராஜநாராயணனின் அறைகூவல் ஒன்று தினமணி கடிதப் பகுதியில் ஒலித்தது. 14.8.12 அன்று கி.ரா.விடுத்த அறைகூவல் இதுதான்:

"புதுவையிலுள்ள பாரதி வாழ்ந்த இல்லத்தின் சோகம் வேறு மாதிரியானது. அது இடிந்து விழுந்து எப்படியும் போகட்டும் என்று பாராமுகமாக இந்த அரசு இருக்கிறது என்று தெரிந்துவிட்டது. ஒரு உண்ணாவிரதமோ, கொடி பிடித்துத் தெருவில் இறங்கிச் செய்யும் ஆர்ப்பாட்டமோ, தக்கவர்களையும் சேர்த்துக்கொண்டு மனு எழுதித் தருவதோ பயன்தரப் போவதில்லை. எல்லா முறைமைகளும் செய்து பார்த்தாகிவிட்டது. கல்லுப் பிள்ளையாராவது அசையும்; இந்தப் பிள்ளையார் அசையாது. குயில்தோப்பு விஷயத்தில் இதெல்லாம் பார்த்தாகிவிட்டது. கலாரசிகனின் கேள்வி நியாயமானதே! இந்தக் கேள்வி உலகம் முழுவதிலும் உள்ள பாரதி அன்பர்களிடம் ஓர் அறைகூவல் போலப் போய்ச் சேரட்டும்'.

கி.ரா.வின் அறைகூவலுக்குப் பிறகு, கவிஞர் கடல் நாகராசன் என்னும் வாசகர் ஒருவர் "தினமணி' அலுவலகத்துக்கு மடல் எழுதியிருந்தார். ""பாரதி வாழ்ந்த காலத்தில்தான் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளானார். அவரது நினைவு இல்லமும் இப்படி பாழாகிக்கொண்டு வருகிறதே! புதுவை அரசு ஏன் இப்படி மெத்தனமாக இருக்கிறது. நல்லவேளை,

பக்கத்து ஊரான எங்கள் கடலூரில் பாரதியார் 1918-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் இங்குள்ள கேப்பர்மலை மத்திய சிறைச்சாலையில் 25 நாள்கள் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். அப்போதுதான் அவர் "பாஞ்சாலி சபதம்' எழுதினார் என்று சொல்கிறார்கள். இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள், அவர் சிறை இருந்த அந்த அறையைக் கைதிகள் பயன்படுத்தும் நினைவு நூலகமாக மாற்றியுள்ளனர்.

அத்துடன் அவரது படைப்புக்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளன. சிறை வாயிலில் அவரது மார்பளவு உருவச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அங்கு சென்று அவரது பிறந்த நாளையும், நினைவு நாளையும் தவறாமல் நாங்கள் கைதிகளுடன் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம்'' என்று அக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் காவல்துறையிடம் சிக்கி சிறைப்பட்டு, முடங்கிப் போகாமல் இருக்க, பாரதியார் 1908-ஆம் செப்டம்பரில் புதுச்சேரிக்குச் சென்றார். முதலில் குப்புசாமி அய்யங்கார் வீட்டில் குடியேறினார். ஆனால் பிரிட்டிஷ் காவல்துறை, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் காவல்துறை மூலம் குப்புசாமி அய்யங்காருக்குத் தொல்லை கொடுத்ததால் பாரதி வேறு வீட்டுக்குக் குடியேற வேண்டி வந்தது. 

பின்பு கிருஷ்ணமாச்சாரியார் உதவியால் பாரதி தங்குவதற்குப் புதுச்சேரியில் வீடு கிடைத்தது. அந்த இடத்தைத்தான் பாண்டிச்சேரி அரசு கையகப்படுத்தி வைத்திருக்கிறது. ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியில் பாரதி வாழ்ந்த வீட்டில், பாரதியின் நினைவு அருங்காட்சியகமும், ஆய்வு மையமும் அமைக்கப்பட்டது.

ஆனால் அதனுடைய நிலையை அறிந்தால் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு உள்ளது. அந்தக் கட்டடத்தின் பின்புறம் புதர் மண்டிக் கிடக்கிறது. மேல் தளம் உடைந்து, ஓடுகள் சிதைந்து கிடக்கின்றன.

மேலும் சில தகவல்கள்: 1918-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிரெஞ்ச் எல்லையைக் கடந்து தமிழக எல்லை வந்தார் பாரதி. கடலூர் சுங்கச் சாவடிக்கு வந்த பாரதியை, ஆங்கிலேயக் காவல் துறை கைது வாரண்ட் ஏதுமின்றி அவரைக் கைது செய்து, கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச்சாலையில் வைத்தது. அந்தச் சிறையில் பாரதி 25 நாள்கள் இருந்துள்ளார். அவரது கைதி எண்.253.

அங்கு இருந்தபோது தனது 36வது பிறந்தநாளை அமைதியாகவே கொண்டாடியுள்ளார் பாரதியார். 60 ஆண்டுகள் கழித்து 1978-இல் அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியாளராக இருந்த சி.கே.கரியாலியின் முயற்சியால், பாரதியார் தங்கியிருந்த அந்த அறை நினைவு அருங்காட்சியமாக மாற்றப்பட்டு, அங்கு பாரதியின் 5 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ள உருவச்சிலையும் அமைக்கப்பட்டது - என்று தெரியவந்தது.

ஆனால், புதுச்சேரியின் நிலை என்ன? இந்திய விடுதலைக்காகப் போராடி, சிறையில் வருந்தி, பல படைப்புகளை உருவாக்கிய பாண்டிச்சேரி, ஈஸ்வரன் கோயில் தெருவிலுள்ள பாரதியின் நினைவு அருங்காட்சியகமும் ஆய்வு மையமும் அதன் பின்புறம் புதர் மண்டி, மரங்கள் வளர்ந்து, மேல் தளம் உடைந்து, ஓடுகள் சிதைந்து கேட்பாரில்லாமல் கிடக்கும் காட்சி காண்போர் மனதை உருக்கவில்லையா? - வேதனைக்குள்ளாக்கவில்லாயா? 

÷"பாஞ்சாலி சபதம்' என்னும் அழியாக் காவியம் உருவான கடலூர் சிறைச்சாலையில் 25 நாள்கள் மட்டுமே கைதியாக பாரதி இருந்த இடத்தையும், இந்திய சுதந்திரத்துக்காகத் தன்னை வருத்திக்கொண்டு போராடிய பாரதி இருந்த பாண்டிச்சேரி நினைவு அருங்காட்சியகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், புதுவை அரசின் பாராமுகம் நன்றாகவே பளிச்சிடுகிறது.

இதுகுறித்து புதுவை கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கோ.மலர்க்கண்ணன் கூறியதாவது: ""பாரதி வாழ்ந்த இல்லத்தை இடித்துவிட்டுக் கட்டுவதா? அப்படியே சீரமைப்பதா என்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.  இடித்துவிட்டுத்தான் கட்ட வேண்டும் என்று பொதுப்பணித்துறை கூறியது. இடிக்காமலேயே புதுப்பிக்க வேண்டும் என்று பாரதி அன்பர்களும், பழைமையைப் பாதுகாக்கும் இன்டாக் அமைப்பும் கூறினர்.

இந்நிலையில் இந்த மாதம் 3 ஆம் தேதி பாரதி இல்லத்தைத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். இல்லத்தை இடிக்காமலேயே புதுப்பிக்கலாம் என்று கூறியிருக்கின்றனர். ஓரிரு வாரங்களில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும்'' என்கிறார் அவர். இவ்வாறு அவர் கூறியுள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது.

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?'' என வீர முழக்கமிட்டு, சுதந்திரப் பயிரைத் தழைத்தோங்கச் செய்த மகாகவி பாரதியார் வாழ்ந்த நினைவு இல்லங்கள் காலத்தால் அழியாதபடி விரைவில் புத்துயிர் பெறவேண்டு(வோ)ம்!

தகவல் உதவி: ஜீவ.ராம.சீநிவாஸன், பண்ருட்டி.

எஸ்.ஜெய்சங்கர், பாண்டிச்சேரி.

படங்கள்: சிவபாலன், கி.ரமேஷ்

இது தினமணி ஞாயிறு கொண்டாட்டம், 09-09-2012-ல் வந்தது.

தற்போதைய நிலை என்னவென்று யாருக்காவது தெரியுமா ?

தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டே இருப்போம். வெற்றி பெறும் வரை !

0 comments:

Post a Comment

Kindly post a comment.