லஞ்சம் வாங்காமலும்/ கொடுக்காமலும் இருந்திட, தீபாவளித் திருநாளில் சபதமேற்போம் !
எங்கும் லஞ்சம் பெருகிவிட்டது.பேருந்துப் பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் மக்கள் லஞ்ச ஊழல் பற்றித்தான் பேசுகிறார்கள். நாள்தோறும் பக்கம் பக்கமாகப் பத்திரிகைகள் லஞ்ச ஊழலைப்பற்றித்தான் எழுதுகின்றன. ஊடகங்கள் அதைத்தான் ஆங்கிலத்திலும் தமிழிலும் விவாதிக்கின்றன.
லஞ்சம் ஒழிந்த இந்தியாவை நிர்மாணிக்கும் பணியில் நம் பங்குதான் என்ன ?
1. அதர்மத்தை எதிர்ப்பது ஒன்று.
2. தர்மத்தை நிலைநிறுத்துவது என்பது ஒன்று.
இந்த இரண்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்தியாவசியத் தேவைகள்.
பொதுமக்கள் அதர்மத்தைத் தட்டிக்கேட்டு எதிர்க்கும் வகையில் இன்று சூழல் இல்லைதான். அதை அவ்விதம் செய்ய வல்லவர்கள் யார்யாரோ அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். சராசரிக் குடிமகனால் அது இயலாது. வீடு தேடிக் கருவி வந்தால் அவன் வாழ்க்கை தாங்காது.
ஆனால் தருமத்தை நிலைநிறுத்தும் செயலை எந்தக் குடிமகனும் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவரும் தான் எந்தப்பணியில் இருந்தாலும் லஞ்சம் வாங்காதிருக்கலாம்.
நாம் இந்தியன்.எனவே லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி மேற்கொள்ளலாம்.
அதுபோலவே சொந்தக் காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்றும் ஓர் உறுதி மேற்கொள்ளலாம்.
காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல், லஞ்சம் கொடுக்காமலே செயல் நடக்கும் வரையில் பொறுமையாகக் காத்திருக்கலாம்.
‘பல கோடிகள் லஞ்சம் வாங்குகிறார்களே, நான் ஒரு சிறிய தொகையை அன்பளிப்பாகப் பெற்றால் என்ன தவறு ?’ என்ற எண்ணம் எந்தத் தனிமனிதன் உள்ளத்திலும் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவ்வித எண்ணம் இன்று பலரிடம் மெல்லத் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் எதிர்காலம் இன்னும் சிக்கலாகும்.
எதற்கும் எதன் பொருட்டும் நான் ஊதியம் பெறுவேனே அல்லாமல் குறிப்பிட்ட பணியைச் செய்து கொடுத்ததற்காக சம்பந்தப்பட்டவரிடம் லஞ்சம் வாங்க மாட்டேன் எனத் தன்னுறுதி கொள்ளும் சுய மரியாதையை நாம் இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும்.
அத்தகைய இளைஞர்கள் பெருகும்போது எதிர்கால இந்தியா காப்பாற்றப்பட்டுவிடும்.
நாம் செய்யும் சிறிய அநியாயத்திற்கான அனுமதியை, அடுத்தவர் செய்யும் பெரிய அநியாயத்தால் ந்ம் மனம் ஏற்றுக் கொள்ள நாம் அனுமதிக்கலாகாது.அத்தகைய கீழான எண்ணம் நம் மனதில் நுழைதலே தகாது.
எனவே, ஒரு சிறிதும் லஞ்சம் வாங்காதிருப்போம்., ஒரு சிறிதும் லஞ்சம் கொடுக்காமலும் இருப்போம். என இந்தத் தீபாவளித் திருநாளில் உறுதி மேற்கொள்வோமாக.
வந்தே மாதரம் ! வாழ்க பாரதம் !
அமுதசுரபி 2012, தீபாவளி மலரில் அதன் ஆசிரியர், திருப்பூர் கிருஷ்ணன், லஞ்சத்தை ஒழிப்போம் என்னும் தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தின் ஒரு பகுதி.
0 comments:
Post a Comment
Kindly post a comment.