சீனாவில் அதிகார மாற்றம்: புதிய அதிபராக ஜீ ஜின்பிங் நாளை தேர்வு !
சீனாவின் துணை அதிபர் ஜீ ஜின்பிங், அந்நாட்டின் அதிபராகப் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாத் தேர்வு செய்யப்பட உள்ளார்.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 18}வது மாநாடு இப்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு புதன்கிழமை நவம்பர் 14 அன்று நிறைவடைய உள்ளது. அப்போது ஆட்சியிலும் ராணுவத்திலும் தலைமை மாற்றங்கள் நிகழ உள்ளன.
நாட்டின் அதிபராக இருக்கும் ஹூ ஜிண்டாவோ அன்று தனது பதவியை விட்டு விலக உள்ளார். மேலும், ராணுத் தலைவர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்வார் என்று ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் "சவுத் சைனா மார்னிங் போஸ்ட்' நாளிதழ், அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளிலும் இருந்து ஓய்வு பெறுவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. ஏனெனில் ஜிண்டாவோ அதிபர் பதவியைத் துறந்தாலும் ராணுவத் தலைவர் பதவியைத் தன் வசமே வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் ராணுவத்தில் செய்யப்பட்ட மாற்றத்திலும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகளே முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.
ஹூ ஜிண்டாவின் விலகலைத் தொடர்ந்து சீனாவின் புதிய அதிபராக இப்போதையத் துணை அதிபர் ஜீ ஜின்பிங் (59) புதன்கிழமை அதிகாரப்பூர்வமாத் தேர்வு செய்யப்பட உள்ளார்.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், பிரதமர் பதவியில் இருந்து வென் ஜியாபோ விலக உள்ளார். அந்தப் பதவிக்கு துணைப் பிரதமர் லீ கேகியாங் தேர்வு செய்யப்படுகிறார்.
எனினும், இந்த அதிகார மாற்றங்கள் அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலேயே அமலுக்கு வரும்.
முன்னதாக, ஹூ ஜிண்டாவோ மற்றும் வென் ஜியாபோ ஆகியோரின் பதவிக்காலத்தில் இந்திய-சீன உறவுகள் நல்ல முறையில் மேம்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த 1962இல் நடைபெற்ற போரால் ஏற்பட்ட கசப்புகளுக்குப் பிறகு, மேற்கண்ட இருவரின் பதவிக்காலத்திலேயே வர்த்தகம் உள்ளிட்ட இரு தரப்பு உறவுகள் சீரடைந்தன.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு சீனா 2009-இல் சிறப்பு விசா அளித்ததால் ஏற்பட்ட பிரச்னையைத் தவிர இரு தரப்புக்கும் பெரிய மோதல் ஏதும் ஏற்படவில்லை.
இந்தியாவின் கடும் ஆட்சேபத்தைத் தொடர்ந்து, சிறப்பு விசா அளிப்பதையும் சீனா நிறுத்தியது.
எல்லைப் பகுதிகளில் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒப்பந்தம் உள்பட இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி :-தினமணி, 13-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.