Saturday, November 17, 2012

ஒபாமாவின் சம்பளம் 4 லட்சம் டாலர்: பயணப்படி 1 லட்சம் டாலர்

அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும், அலுவலகமாகவும் 132 அறைகள், 35 குளியல் அறைகளுடன் 18 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட வாஷிங்டன் வெள்ளை மாளிகை விளங்குகின்றது. விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர வாஷிங்டனில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் கேடோக்டின் மலையில் அமைக்கப்பட்டுள்ள 'கேம்ப் டேவிட்' ஓய்வு இல்லத்திலும், 70 ஆயிரம் சதுரடி நிலப்பரப்பில் 20 படுக்கையறைகள், 35 குளியல் அறைகள் உள்பட 119 அறைகள் கொண்ட, வெள்ளை மாளிகையைவிட அளவில் பெரியதான 'ப்ளெய்ர்' இல்லத்திலும் ஒபாமா தங்கிக் கொள்ளலாம்.

தொலைதூர வெளிநாட்டுப் பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'ஏர் ஃபோர்ஸ் ஒன்'  விமானத்திலும், குறைந்த தூரம் கொண்ட பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட 'மெரைன் ஒன்' ஹெலிகாப்டரிலும் அவர் பயணம் செய்யலாம். இவை இரண்டுமே 70 பேரை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டவை. அதிபருக்கு என 2008-ம் ஆண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட போயிங்-747 ரக விமானத்தின் 'காக் பிட்'டில் அமர்ந்திருக்கும்போது, விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் எந்த மாற்றமும் உணரப்படுவதில்லை. இவ்வேளைகளில் பயணம் செய்பவர்கள் தடுமாற்றமின்றி நடந்துகூட செல்லலாம்.

ஏறும்போது, அதிபர் உபயோகிக்கும் மேஜை எதிர்விசையில் இயங்கி எப்போதுமே சம நிலையில் உள்ளது போல் இருக்கும். அவசர சிகிச்சைக்கு என தயார் நிலையில் மருத்துவ அறையும் விமானத்தினுள் உண்டு.

அதிபர் பயணம் செய்யும்போது, உள்ளே இருக்கும் லெதர் சோபாவில் எப்போதுமே 5 நாளிதழ்கள் வைக்கப்பட்டிருக்கும். பயணத்தின்போது ஈ.எஸ்.பி.என். உள்ளிட்ட செய்தி சேனல்களை பார்ப்பதில் ஒபாமா, அதிக ஆர்வம் காட்டுகின்றார்.

நாட்டு மக்களிடையே விமானத்தில் இருந்தபடியே பேசுவதற்கு வசதியாக, அனைத்து நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் செய்யப்பட்டுள்ளது. அதிபர் பயணிக்கும்போது, விமானிகளிடமிருந்து எந்த அறிவிப்பும் ஒலிபரப்பப்பட மாட்டாது. அதிபரின் மரணத்திற்கு பின்னர் அவரது சவப்பெட்டியை விமானத்தில் கொண்டு செல்ல நேர்ந்தால், அதற்கேற்ப உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றம் செய்ய முடியும். விமானத்தின் நடுப்பகுதியில், அதிபரின் சவப்பெட்டியை ஏற்றி, இறக்கும் அளவிற்குப் பெரிய கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிபரின் சாலைவழிப் பயணத்துக்கென 'கெடிலாக் ஒன்' என்றழைக்கப்படும் சிறப்புக் கார் உபயோகிக்கப்படுகிறது. நவீன தொலை தொடர்பு சாதனங்கள், தீயணைப்புக் கருவி, ஆக்ஸிஜன் செலுத்தும் கருவி போன்ற வசதிகள் இந்த காரினுள் உள்ளன. டயர் பஞ்சரான நிலையிலும் நிற்காமல் ஓடும் வகையில், இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு கண் விழிக்கும் ஒபாமா, 7.30 மணிக்கு 'ஜிம்'மில் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். குளியலுக்குப் பின், காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு எல்லா நாளிதழ்களையும் புரட்டி, நிகழ்வுகளை அறிந்து கொள்கிறார்.

லிப்ட் வழியாக முட்டை வடிவ அலுவலகத்திற்கு (ஓவல் ஆஃபீஸ்) வந்து சேரும் ஒபாமா, பாதுகாப்புத் தொடர்பான செய்திகளை முதலில் அறிந்துக் கொள்கிறார். பதவியேற்ற ஆரம்ப நாட்களில் ரகசிய செய்திகளை கேட்டு ஆச்சரியமடைந்த அவர், இப்போதெல்லாம் முன்னர் போல் ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதில்லை.

வாஷிங்டனில் இருக்கும்போது அரைநாள் பொழுதைத் தனது அலுவலகத்தின் உள்ளேயே செலவிடுகிறார். முதன்முறையாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்-ஷை சந்திக்க இந்த அலுவலகத்தினுள் நுழைந்த அவர், இரண்டாம் முறையாக, அதிபராக பதவியேற்ற பின், தனது முதல் பணி நாளின்போதுதான் மீண்டும் இந்த அலுவலகத்திற்குள் வந்தார்.

அவர் பதவியேற்ற பிறகு ஜார்ஜ் புஷ் காலத்தில் வைக்கப்பட்டிருந்த 'ஆயில் பெயிண்டிங்' படங்களை எல்லாம் அகற்றி விட்டு, தன் ரசனைக்கேற்ப அலுவலகத்தில் மெதுமெதுவாக சில மாற்றங்களைச் செய்தார். அவர் பதவியேற்ற வேளையில் அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு வரை உள்ள நேரத்தை தனது குடும்பத்தாருடன் கழிக்கும் ஒபாமா, பின்னிரவு 1 மணியளவில் தூங்குகிறார். 6 மணி நேர உறக்கத்திற்கு பின்னர், மீண்டும் மறுநாளுக்கான அலுவல்கள் காலை 7 மணியில் இருந்து தொடங்குகின்றன.

உறங்கும்போது, அவரை எழுப்பி யாரும், எந்த தகவலும் சொல்வதில்லை. அவசரத் தகவல்கள் ஏதுமிருப்பின், அவரது முதல் நிலை உதவியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். சூழ்நிலைக்கேற்ப அவர்களே முடிவெடுப்பார்கள்.

உறக்கத்தில் இருந்த ஒபாமாவை, அவரது உதவியாளர்கள் ஒரேயொரு முறை மட்டும், ஒரு முக்கிய தகவலைக் கூறுவதற்காக எழுப்பியுள்ளனர்.

2009-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9ம் தேதி, அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை உதவியாளர்கள் அவருக்கு தெரிவித்தனர். இதில் ஏதோ குறும்புத்தனம் உள்ளது என அவர் முதலில் கருதியதாகத் தெரிகிறது.

ஒபாமா அதிகமாக பேசும் பழக்கம் இல்லாதவர். அவரது பேச்சுக்கள் ரத்தின சுருக்கமாக அமைந்திருக்கும். அடுத்தவர்களைப் பேசவிட்டு, அதிலிருக்கும் நல்ல கருத்துகளைத் தேர்வு செய்து கொள்வார். அவருடன் சரிசமமாக அமர்ந்து பேச வாய்ப்பில்லாத இரண்டாம் நிலை அதிகாரிகளின் கருத்துகளையும் அவர் கவனமாகக் கேட்பதுண்டு.

பல்வேறு சாதக-பாதகங்களை சீராய்ந்து முடிவெடுப்பதையே அவர் அதிகம் விரும்புகிறார்.

வெள்ளை மாளிகையில் உள்ள 'ட்ருமேன் பால்கனி', தெற்கே உள்ள பசுமையான புல்வெளி, ஜெஃபர்ஸன் நினைவகத்தின் எதிரே உள்ள வாஷிங்டன் நினைவிடம் ஆகியவை ஒபாமாவுக்கு மிகவும் பிடித்தமான சில இடங்கள்.

அமெரிக்க அதிபருக்கு சம்பளமாக ஆண்டுக்கு 4 லட்சம் டாலர்கள் வழங்கப்படுகின்றது. மேலும் பயணப்படிக்கென 1 லட்சம் டாலர்களும், அலுவலக விழாக்களுக்கென 19 ஆயிரம் டாலர்களும் உண்டு. சம்பளப் பணத்திற்கு மட்டும் வரிப்பிடித்தம் செய்யப்படுகின்றது. மற்ற படிகளுக்கு வரி கிடையாது.

2008-மார்ச் மாத நிலவரத்தின்படி, முன்னாள் அதிபர்களுக்கு ஆண்டுதோறும் ஓய்வூதியமாக 1 லட்சத்து 91 ஆயிரத்து 300 டாலர்கள் தரப்படுகின்றது. அவர்களின் அலுவலகத்திற்கான இடமும், ஊழியர்களுக்கான சம்பளமும், அலுவலக செலவினங்களுக்கான நிதியும், பயணப்படியும் அமெரிக்க அரசு வழங்குகின்றது.

2003-ஆம் ஆண்டிலிருந்து, அதிபரின் பாதுகாப்புப் பணிக்கு அமெரிக்க ரகசிய போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பையும் இவர்கள் தான் நிர்வகித்து வருகின்றனர்.

என்ன தான்... கை நிறையச் சம்பளம், வெள்ளை மாளிகை வாசம் என்றிருந்தாலும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 500 கொலை மிரட்டல்களை அமெரிக்க அதிபர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.                                                      

 நன்றி :-மாலை மலர் :-17-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.