Friday, November 23, 2012

டிசம்பர் 3-ல் பூமிக்கு அருகில் வருகிறது வியாழன் ம்!

டிசம்பர் 3-ம் தேதி பூமிக்கு வெகு அருகில் வியாழன் கோள் வரும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.



 சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரியது வியாழன். பூமியின் வட்டப் பாதைக்கு வெளியே சுற்றி வரும் கோள்கள் "சுப்பீரியர்' கோள்கள் எனப்படுகின்றன. "சுப்பீரியர்' கோள்களில் ஒன்றான வியாழன், பூமிக்கு வெகு அருகில் டிசம்பர் 3-ம் தேதி வருகிறது.

இது குறித்துத் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: பூமி மற்றும் சூரியனுக்கு 180 டிகிரி நேர்கோட்டில் வியாழன் கோள் டிசம்பர் 3-ம் தேதி வருகிறது. அப்போது வியாழன் மற்றும் சூரியனுக்கு இடையில் பூமி இருக்கும்.

இந்த நிகழ்வின்போது பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயான தொலைவு 61 கோடி கிலோமீட்டராக குறையும். இதுவே இந்த இரு கோள்களுக்கும் இடையே ஏற்படக் கூடிய குறைந்தபட்சத் தொலைவு. பூமிக்கு அருகில் வியாழன் வருவதால், அந்தக் கோள் மிகப் பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும். இந்த கோள்களுக்கு இடையே உள்ள சராசரி தொலைவு 92.8 கோடி கிலோமீட்டர்.

டிசம்பர் மாதம் முழுவதும் கிழக்கு திசையில் வியாழன் கோள் தெரியும். இது டிசம்பர் 3-ம் தேதி தெரிவதை போல ஏறத்தாழ ஒரே அளவிலும் பிரகாசமாகவும் தெரியும். இதனை மாலை 6 மணிக்கு மேல் கிழக்கு திசையில் காணலாம்.

இது 398.9 நாள்களுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வாகும். இது மீண்டும் 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நிகழும்.

இதனைப் பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனை டிசம்பர் 3-ம் தேதி மாலை 6.30 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் இலவசமாகக் காணலாம்.                                                                                                                
நன்றி :- தினமணி, 23-11-2-12                                                                                                                     





0 comments:

Post a Comment

Kindly post a comment.