ரூ.27,000 கோடி முதலீடு: சீனாவுடன் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்து !
புது தில்லியில் இந்திய-சீன பொருளாதார உடன்படிக்கையைப் பரிமாறிக் கொள்கின்றனர் இந்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் சீனாவின் தேசிய மேம்பாடு-சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஜாங் பிங். புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாவது இந்திய-சீன பொருளாதாரப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை ஏற்பட்டது.
புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாவது இந்திய-சீன பொருளாதாரச் சிறப்புப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன் மூலம் இந்தியாவில் ரூ. 27 ஆயிரத்து 865 கோடி மதிப்பில் சீனா முதலீடு செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய-சீன பொருளாதாரச் சிறப்புப் பேச்சுவார்த்தையில் இந்தியத் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் சீனாவின் தேசிய மேம்பாடு-சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஜாங் பிங் கலந்துகொண்டனர். இரு தரப்பில் பல்வேறு தொழில் முனைவோர் மற்றும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். இதன் முடிவில் 11 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுப் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பொருளாதாரத் திட்டமிடல், மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்திய-சீன பொருளாதார நிபுணர்கள் கூட்டு ஆய்வை மேற்கொள்வது இதில் முக்கியமானது.
ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கும் சீன நிறுவனமான குவாங்டாங் மிங்யாங் மின் நிறுவனத்துக்கும் இடையே ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் சுமார் ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் ஒன்றுக்கு சைனா டெவலப்மண்ட் பாங்க் நிதி உதவி அளிக்கும்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரதிநிதியான நாஸ்காம், சீனத் தகவல் தொழில்நுட்பத் துறைச் சங்கம் இடையே முக்கிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியது:
இந்தியாவுடன் பொருளாதார உறவை மேம்படுத்த சீனா மிகவும் ஆர்வமாக உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அந்நாட்டிலிருந்து 180 பேர் கொண்ட பெரிய குழு வந்திருந்ததே இதற்கு சாட்சியாகும். இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடுதல் முதலீடுகள் செய்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்புகின்றன என்றார்.
இந்தியா, சீனா இடையே தற்போது நடைபெறும் வர்த்தகத்தின் மதிப்பு சுமார் ரூ. 4 லட்சம் கோடியாகும். 2000 ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு சுமார் ரூ. 15 ஆயிரம் கோடி மட்டுமே
நன்றி :- தினமணி, 27-11-2012.
0 comments:
Post a Comment
Kindly post a comment.