Friday, November 2, 2012

எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்-30-10-2012- மாலைமலர்- காலப் பெட்டகம் :-




எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28.4.1986ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18.1.1987ல் (2வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 9.1.1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.

சென்னை இராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களைப் படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் இராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:-

செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல் அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.

எனக்குக் குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.

சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.

அவர்கள் காலத்திற்குப் பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்குச் சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்தப் பாகமும், எந்த உரிமையும் கிடையாது.

1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.

2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.

3) சென்னை சாலிக்கிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.

4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43 ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.

5) நான் குடியிருக்கும் இராமாவரத் தோட்டப் பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்புச் சாமான்கள், வெள்ளிப் பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.

6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.

7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாகப் பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் இராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாகக் கொடுக்கவோ உரிமை கிடையாது.

என் மனைவி காலத்திற்குப் பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.

அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்குப் பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.

அந்த ஏழைகள் இலவசமாகத் தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாகக் கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்குச் சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றைச் செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதரச் செலவுகளுக்கும் சாலிக்கிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவைச் செய்யவேண்டியது.

என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்குப் பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்.

என் நினைவு இல்ல பராமரிப்புகளைச் சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.

இந்த இல்லத்தின் பராமரிப்புச் செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன.

அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும். சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான "சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை" என்று பெயர் வைக்கவேண்டும்.

என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.

இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும்.

இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார்......

பின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்....

அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

"இந்தத் தலைமை கழகக் கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதைக் கட்சிக்காகப் பரிசாகக் கொடுத்துப் பதிவு செய்துவிட்டார்."                                                                                                   

நன்றி :- மாலை மலர், காலப் பெட்டகம்.




0 comments:

Post a Comment

Kindly post a comment.