Monday, November 26, 2012

உலகக் கழிப்பறை தினம்- 19-11-2012..-கே.ஆர்.இரமேஷ், கீரனூர்.



வீதிக்கு வீதி வகைவகையான உணவகங்கள், கடைகள் இருக்கின்றன. கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை.கழிப்பிடத் தேவையில் தன்னிறைவு அவசியம் !


உலகமெங்கும் 250 கோடி மக்கள் நல்ல கழிப்பறை வசதிகள் இல்லாதவர்களாகவும், அதில் 120 கோடி பேர் கழிப்பறை வசதியே இல்லாதவர்களாக, திறந்தவெளியையே கழிப்பறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிற மக்கள் அதிகம் வசிக்கும் 13 நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. ஜார்கண்ட், ஒரிசா, பிகார், தமிழ்நாட்டில்தான் இது அதிகம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னையில் 95 சதவீதமும், கன்னியாகுமரியில் 87 சதவீதமும் கழிப்பறையைப் பயன்படுத்துகின்றார்கள். மாறாக அரியலூர், தருமபுரி மாவட்டங்களில் திறந்த வெளியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.

இந்தியாவில் (அறுபது கோடி மக்கள்) 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25,000 கிராமங்கள் மட்டுமே கழிப்பறை வசதி கொண்டவையாக உள்ளன.. ஒருபோர் விமானம் வாங்கச் செலவிடும் பணத்தைக் கொண்டு 1,000 கிராமங்களுக்குக் கழிப்பறை வசதி ஏற்படுத்த முடியும்).

கழிப்பறை வசதி இன்மையால் சுகாதாரக் கேடுகள், தொற்றுநோய்கள், அவற்றுக்கான சிகிச்சைகள், மனிதசக்தி இழப்பு, உற்பத்திக் குறைவு என்ற வகையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் கோடியை நாம் இழக்கிறோம் என்கிறது யூனிசெப் நிறுவனம். அந்தப் பணத்தைக் கழிப்பறைகள் கட்டுவதற்கான பணிகளில் செலவழித்தால் கழிப்பறை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்கிறார்கள் சுகாதார வல்லுநர்கள்.

2011 ஆண்டு மக்கள் தொகையின்படி இந்தியாவில் படித்த பெண்கள் 65 சதவீதமாகும். 2001ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகமாகும். அதே சமயம் எட்டாம் வகுப்பில் பள்ளியை விட்டுவிலகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இதற்கு பள்ளிகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான கழிப்பறையும், தண்ணீரும் இல்லை என்பதே காரணமாகும் என்கிறது உலக வங்கியின் ஆய்வு.  இந்தியாவில் உள்ள 51 சதவீதம் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. 74 சதவீதம் பள்ளிகளில் தண்ணீர் இல்லை.

தொடக்கப்பள்ளியிலிருந்து மாணவர்களுக்குக் கழிப்பறைப் பயன்பாடு மற்றும் அது குறித்த சுகாதாரக் கல்வியை பள்ளிகள் வழங்கத் தவறியதன் விளைவு பொது இடத்தில் அருவெறுப்பு இல்லாமல் சிறுநீர் கழிப்பது, திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்கதையாக உள்ளது. 

60 கோடி இந்தியர்கள் சாலையோரங்களிலும், ரயில்தண்டவாளத்தின் இருபுறங்களிலும் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்கின்றனர்.

பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி என்கிற ஷரத்துக்கு புறம்பானது என்றும், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த 6 மாதங்களுக்குள் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தரவேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர் போன காலனித்துவ ஆட்சியாளர்களையே  தலைவணங்க வைத்த தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் தாமே, கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, கழிப்பிடப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மற்றவருக்கு முன்னோடியாக விளங்கினார். 

சர்வதேச அளவில் கழிப்பறைப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் பொருட்டு 2001 ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் "உலக கழிப்பறைக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டது. சிங்கப்பூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த சர்வதேச அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19}ம் தேதி அனைத்து நாடுகளிலும் உலகக் கழிப்பறை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். 

2025 ஆம் ஆண்டுக்குள் கழிப்பறை பிரச்னைக்குத் தீர்வுகாண ஐ.நா. சபையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.                                                       

நன்றி :- கருத்துக்களம், தினமணி, 26-11-2012                                              

0 comments:

Post a Comment

Kindly post a comment.