Sunday, November 4, 2012

முதன்முறையாக 1330 குறட்பாக்களும் இசை வடிவில் !02 May 2009 21:14 - பனைநிலம் !

”பனைநிலம் நாடுகளையும், 

மதங்களையும் கடந்து, 

தமிழால் இணைந்திருக்கும் ஒரு சங்கம்.

http://panainilam.blogspot.com/feeds/posts/default




திருக்குறளுக்கு விளக்கவுரைகள் எழுதியோர் பலர். ஆனால் எத்தனை பேருக்குக் குறளை முழுமையாகப் படிக்க முடிந்திருக்கிறது? நாம் திரைப்படப் பாடல்களை எவ்வாறு மனப்பாடம் செய்கிறோம்? பாட்டுப் புத்தகத்தை வாங்கியா படிக்கிறோம்? இல்லையே, கேட்பதனாலேயே பாடல்கள் நமக்கு மனதில் பதிகின்றன.  அதனைப் போலவே பலவிதமான பாடல்களும் நாம் கேட்பதன்மூலமாகவே நன்கு மனதில் பதிகின்ற.. படிக்கும் வரிகளை மனதில் பதிப்பதும், மீண்டும் நினைவுபடுத்தி எடுப்பதும் சற்றே கடினம். ஆனால் கேட்கின்ற வரிகளைச் சுலபமாக நினைவில் ஏற்றிக் கொள்ளலாம், அதே போல மீண்டும் ஞாபகப்படுத்துவதும் சுலபம். குழந்தைகள் கற்பதற்கு வெகு முன்னமேயே கேட்கத் தொடங்கி விடுகின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதனாலேயே கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள். திருவள்ளுவரும் "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றார்.                 








எப்படிப் பார்க்கும்போது, எத்தனைத் தமிழ் நூல்களை நாம் இசை வடிவில் பதிவு செய்திருக்கிறோம்? தமிழ் நூல்களையும், இலக்கியங்களையும் பரப்ப முன்வரும் பலரும் அதனை ஏட்டிலும், எழுத்திலுமே பதிய முற்படுவதைக் காண்கிறோம். பத்திரிகையாக இருக்கட்டும், மின் பக்கங்களாக இருக்கட்டும் அவை பெரும்பாலும் எழுத்திலேயே முன்வைக்கப்படுகின்றன.

மதுரைத் திட்டம் போன்றவை அரும்பெரும் முயற்சிகள். ஆனாலும் அவை இன்று எத்தனைத் தமிழர்களைச் சென்றடைந்திருக்கின்றன? கணினி இருந்தாலுமே அத்தகைய பக்கங்களை அடிக்கடி எடுத்துப் பார்க்கின்றோமா?

அதே நேரத்தில்,திரைப்பாடல்களைப் பாருங்கள். அவை இசை வடிவில் வந்ததனாலேயே புகழ்பெறுகின்றன. இசையின் மூலமே நல்ல பல இலக்கியங்களை மக்கள் மத்தியில் பரப்ப இயலும். இந்த நோக்கில் தொடங்கப்பட்டதுதான் எங்களது பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறளை இசைவடிவில் பதியும் திட்டம்.                                                                                                   

                                                                           


இத்திட்டத்துக்கான தொகைகளை அளித்து ஊக்குவித்த புரவலர்கள் அகஸ்டாவிலிருக்கும் முனைவர் சிவக்குமார் ஜெயபாலன்-மருத்துவர் ஜானகி நடராஜா மற்றும் சார்லஸ்டனிலிருக்கும் முனைவர் தண்டபானி குப்புசாமி-வளர்மதி குப்புசாமி ஆகியோர். இதில் பங்குகொண்ட அனைவரும் அமெரிக்காவின் தென்கரோலின மாநிலத்தில் இருக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள். இளைய தலைமுறையினர்!                                              

          



ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியிருக்கிறோம். எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை அன்புகூர்ந்து வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த தமிழ்த்திரு அய்யா இளங்குமரனார் அவர்கள். இத்திட்டத்தில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திருக்குறள்  மறைமொழியின் முதல் அதிகாரத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.                                                                




"திருக்குறள் மறைமொழி" என்ற இந்த MP3 குறுந்தகட்டினைக் கடந்த ஜனவரி 24ம் தேதி நிகழ்ந்த எங்களது தமிழ்ச்சங்கப் பொங்கல் விழாவில் வெளியிட்டோம். இக்குறுந்தகடு விற்பனைக்குத் தயாராக உள்ளது. எங்கள் வலைப்பதிவின் இடப்புறம் இருக்கும் "Buy Now! Thirukkural Maraimozhi MP3 CD" என்ற பொத்தானை அழுத்தி, Google Checkout மூலம் இதனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் விற்பனை முகவர்கள் தேவை! திருக்குறளை இந்தப் புதிய இசை வடிவில் பரப்ப முன் வாருங்கள்!  ஒவ்வொரு குறுந்தகடும் 5 அமெரிக்க டாலர்கள். இதிலிருந்து வரும் தொகை முழுவதும், எங்களது அடுத்த இசைத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும்.






இக்குறுந்தகடு இலாப நோக்கில் தயாரிக்கப்பட்டதன்று. இதனை வாங்கிக் கேட்பதும், பரப்புவதும் தமிழரிடையே திருக்குறள் பரவ உதவும். திருக்குறளில் இருக்கின்ற எண்ணற்ற அரிய கருத்துக்களை இத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவராலும் பாட்டுப் பயிற்சிகளின்போதும், ஒலிப்பதிந்து திருத்தும்போதும் உணர்ந்துகொள்ள முடிந்தது. எங்கள் தமிழ்ச் சங்கத்தினரின் குடும்ப விழாக்களிலும், தமிழ்ப் பள்ளியிலும், சங்க விழாக்களிலும், கார்ப் பயணங்களிலும் திருக்குறள் ஒரு இனிய இசையாக ஒலிக்கப்படுகிறது, ஓதப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் தமிழர் கூடும் இடங்களிலெல்லாம் திருக்குறள் ஒலிக்க வேண்டும் என்பது எம் அவா. அது வாழ்க்கைக்கான அத்தனைப் பாடங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றது. அய்யா இளங்குமரனார் கூறியிருப்பதுபோல், திருக்குறளைப் படிப்போம், கேட்போம், சிந்திப்போம், சீர்த்தி பெறுவோம், பிறவிப் பயனை அடைவோம்! வாழிய நலனே, வாழிய நிலனே!எதை எழுத



நமது துத்துக்குடி வலைப்பதிவு அன்பர் ந.உ.துரை அவர்களது, திருக்குறளுக்குத் திருக்குறள் வடிவிலேயே கருத்துரை என்ன்னும் நூலினை வெளியிடத் துவங்க முற்பட்டபொழுது, கிடைத்த அதிசயத் தகவலே இந்தப்பதிவு.

அடுத்ததாகத் துரை ம்செல்லவேண்டிய இடம்,  திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த தமிழ்த்திரு அய்யா இளங்குமரனார் அவர்கள்

எல்லோரும் ஆளுக்கொரு திருக்குறள்  குறுந்தகட்டினை வாங்குவோம் !
தமிழ் நாட்டில் தமிழரென்று சொல்லிக்கொண்டு வாழ்வோர் செய்யாத

அருஞ்சாதனையை நிகழ்த்தியுள்ள,
அந்நியதேசத்தில் வாழும் ,
பனைநிலத்தவரின்,
முயற்சியை ,
வெற்றிபெறச் செய்வது,
 நமது கடமையன்றோ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.