அர்ச்சகர்களுக்குப் பஞ்சக்கச்சம், குடுமி 'கம்பல்சரி'... இந்து அறநிலையத்துறை உத்தரவு !
சேலம்: கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், உடை, சிகை அலங்காரம் போன்றவற்றில் ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ஒன்றை இந்து அறநிலையத்துறை ஆணையர் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபை நிறுவனத் தலைவர் ஆ.இராதாகிருஷ்ணன் அரசுக்கும், சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் 25 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அனுப்பினார். அதில் ஒன்று, திருக்கோவில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றிப் பூஜையில் ஈடுபடுபவர்கள், இந்து கோவில்களில் ஆச்சாரப்படி உடை, சிகை அலங்காரம் செய்வதில்லை என்றும், அதை ஒழுங்குபடுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஆய்வு செய்த சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் தமிழகத்தில் உள்ள அனைத்துத் திருக்கோவில்களின் இணை ஆணையர்கள், செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் ஆகியோருக்குச் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில்,
தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் இராதாகிருஷ்ணன் என்பவர் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனு அளித்துள்ளார். அந்தக் கோரிக்கைகளில் ஒன்றாக அனைத்துத் திருக்கோவில்களிலும் ஆச்சாரப்படி உடை (பஞ்சக் கச்சவேட்டி), சிகை (குடுமி போடுதல்) அலங்காரம் செய்த அர்ச்சகர்களை மட்டும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் தங்கள் திருக்கோவில்களின் பழக்க வழக்கப்படி ஆச்சாரப்படி உடை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சிகையினையும் அந்தந்த திருக்கோவில்களின் வழக்கப்படி அனுசரித்துச் சிகை தரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக அந்தந்தத் திருக்கோவில்களின் பழக்க வழக்கங்களின்படி நடைமுறைப்படுத்திக் கண்காணித்து வர அனைத்து சார்நிலை அலுவலர்களையும் அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :- ஒன் இந்தியா, 29-10-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.