Tuesday, October 16, 2012

ஏலேய் !- வளர்ந்து வரும் செவக்காட்டுப் பன்முகத் திறனாளி ! வே.இராமசாமி !.

சத்தியமிக்க கவிதைகளுக்கான முன் மொழிவு

 பெரும்பாலும் கவிதைகளை விரும்பிப் படிப்பவர்கள் அல்லது எழுதுபவர்கள் தேவையான கல்வி அறிவும், தமிழ் இலக்கிய அறிவும் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தின் ஏதாவதொரு பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். குறைந்த அளவிற்கேனும் இவர்களுக்கு வாழ்க்கை வசதிகள் இருக்கின்றன. இவர்கள் நேர்மை, நியாயம், உன்னதம், நீதி என்றெல்லாம் பேசக்கூடியவர்கள். காலைக் கதிரவன், மாலை மதியம், ஆறுகள், கடல்கள், மலர்கள், பறவைகள் என்ற முறையிலே தமக்குள் சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு அழகு ரசனை உண்டு. ஆனால், உழைக்கும் மக்களோடு உறவு குறைவு. தம்மை விட வாழ்க்கைத் தரத்தில் தாழ்ந்தவர்களை இவர்கள் பெரும்பாலும் மதிக்க மாட்டார்கள்.

இராமசாமியின் கவிதைகளில் தெரியவரும் மனிதர்களுக்கும், அவர்களின் வாழ்வியலுக்கும் இடையில் எவ்வகை உறவும் இல்லை. காலச் சூரியனையும்  மாலை மதியத்தையும் பார்க்கும் இவர்களால் அவற்றை நிதானமாக ரசிக்க முடியுமா? இவர்களுக்குள் இருப்பவை எளிய கவிதைகள். இந்தக் கவிதைகளைத்தாம் இராமசாமி பதிவு செய்கிறார்.

இவருக்குத் தமிழ் தெரியும். தமிழின் வளமும் தெரியும். கற்பனைத் திறத்திலும் வல்லவர். எனினும், இவரிடம் வெற்றுக் கற்பனைகள் இல்லை. வெயிலில் வந்தவர் இவர். உழைப்பில் உரம் ஏறியவர். ஆகவே, இவரின் கதைகளில் கனல் ஏறியிருக்றது. இவரின் கவிதைகளைப் படிக்கும்போது சங்க இலக்கியத்தின் பாலைத் திணைக் கவிதைகள் நம் நினைவுக்கு வருகின்றன.

உழைக்கும் அடித்தள மக்களின் வாழ்வு என்றைக்கும் பாலைத் திணைக்கு உரியது. பாலைத் திணையிலும் அன்பின் மலர்ச்சிக்கு இடம் உண்டு. உண்மையில் இத்தகைய வறண்ட வாழ் நிலையிலும் அன்பு செய்ய முடியும் என்பதுதான் மனித வீறு. இதைப் பதிவு செய்பவை அற்புதமான கவிதைகள். செல்வச் செழிப்பில் திளைப்போருக்கு இந்த அன்பு தெரியாது.

துயரப்படுவோர் பாக்கியவான்கள் என்று விவிலியம் கூறுவது முற்றிலும் உண்மை. வறுமை நிலையிலும் செம்மையோடு வாழ்கிறவர்கள்தாம் அழகிய மனிதர்கள். இவர்களைப் பதிவு செய்வதன் மூலமே கவிதை தன்னை நிறுவிக்கொள்கிறது. இராமசாமி இதைச் செய்திருக்கிறார். அவரின் கவிதையை நான் கொஞ்சம் தொட்டுப் பார்த்திருக்கிறேன். நண்பர்கள் இன்னும் கை நிறைய, நெஞ்சு நிறைய அள்ளிக் கொள்வார்களாக !
                                                                              
                                                                                                                               - கோவை ஞானி

ஏலே.... உங்க எழுத்த நீங்க எழுதிக்கிங்கடா
எங்க எழுத்த எங்கள எழுத வுடுங்கடா.......

வேர்கள் இறக்கி ...வீரனார்க்கோயில்
காடுமாதிரி பச்ச கட்டி பம்மி நிக்குற
இந்த எழுத்துக்குள்ள நொழஞ்சி பாருங்க
வெளிய வர்ற வழி ந்தெரியாம விழிபிதுங்கிப் போய்யிடுவீஙக...

                                                                                                                                      - அறிவு மதி 

    

ஒருசொல்
பூர்வீகத்தின் படையைத்
திரட்டி வருகிறது

தொன்மங்களைப்
புளிபோட்டுத் துலக்குகிறது

உச்சரிப்பில்
அறத்தின் கனிகளைப்
பழுத்துத் தொங்கவிடுகிறது

அதன்
மாத்திரை நொடிகள்
நிலத்தின் காதுகளில்
இசையை நிகழ்த்துகிறது

பட்டாம் பூச்சிகளை
பட்சி, தும்பிகளை
மொழியின்
அங்கத்தினராக்குகிறது

ஒருசொல்
ஊரின் கேடுகளைத்
துரத்திக் கொண்டிருக்கிறது

பூமியின் மடியில்
வசந்தத்தைக் கையளிக்கிறது

ஆயுளில் திரட்டிய
கனிவையெல்லாம்
நிமிடத்தில் கொட்டி
மூழ்கடிக்கிறது

ஒலிக்கும் ஓரோர் கணத்திலும்
ஒரு சொல்
அன்பின் கர்ப்பம்
தரிக்கிறது

ஆமணக்கு
முத்துப் போலும்
பொடித் தவளை

சிறு நத்தை

பெருவிரல் நகமாய்
சின்ன நண்டு

பலசரக்குக்
கடைக்காரன்
தூக்கி எறிந்த
எலிக்குஞ்சு

தாவரமெதுவானாலும்
தளிர்

பிறந்த குழந்தை

முட்டையோட்டின்
ஈரங்காயாத
கோழிக்குஞ்சு

கவிதை.          

வே.   ராமசாமி
                                       
          9444 838389                    









0 comments:

Post a Comment

Kindly post a comment.