Thursday, October 25, 2012

அப்பழுக்கற்ற நிதி அமைச்சர் இக்னேஷியஸ் ஸ்விஸ் வங்கியில் அக்கவுண்ட் ஆரம்பித்த கதை ! - ஜெஃப்ரி ஆர்ச்சர் !


ஆங்கிலத்தில் பிரபலமான படைப்பாளிகளின் கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, குறைந்த விலைப் பேப்பர்களில்,  சென்னை நடை பாதைக் கடைகளில்.கிடைத்துக் கொண்டே இருக்கின்றன, அவ்வாறு எப்பொழுதோ வாங்கப்பட்ட ஒரு புத்தகம் தான் இது.

 புத்தகத்தின் தலைப்பு “ முடிவில் ஒரு திருப்பம்.” இதனை ஆங்கிலத்தில் எழுதியவர், ஜெஃப்ரி ஆர்ச்சர். தமிழில் மொழியாக்கம் செய்தவர், பவித்ரா ஸ்ரீனிவாசன். Westland பதிப்பகம் என்று ஆங்கிலத்திலும், கிழக்கு பதிப்பகம் என்று தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளன. எப்பொழுதோ வாங்கப்பட்ட இந்தப் புத்தகம் ஒரே முழு நாவல் அல்ல.12 குறுநாவல்கள் / சிறுகதைகள் அடங்கியுள்ளன. அதில் இரண்டாவதாக எழுதப்பட்டுள்ளதன் சுருக்கமே இப்பதிவு.

வகிக்கும் பதவியில் நல்லவராகக் காட்டிக் கொண்டு, நாட்டில் எல்லோரது நன் மதிப்பையும் பெற்றுவிட்ட ஒரு நிதி அமைச்சர், புத்திசாலித்தனமாகத் தன்னிடமிருந்த கருப்புப் பணத்தைச் சுவிஸ் வங்கியில் போடும் கதை. படிப்பதற்கு மிகவும் ம்சுவையாக இருக்கின்றது. இனிமேல் நடைபாதக் கடைகளில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களின் மீதும் ஒரு பார்வையினைச் செலுத்த வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளேன் இதன் விலை ரூபாய் 195/- என்று போடப் பட்டுள்ளது. பேரம் பேசி வாங்கலாம். உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்து விலை அமையும். உலகத்தை-சுவிஸ் வங்கி விவகாரத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டியதற்கு.. கிழக்குப் பதிப்பகத்தாருக்கு நன்றி.                                  

நைஜீரியாவின்17-வது நிதி அமைச்சராக இக்னேஷியஸ் அகார்பியை நியமனம் செய்தபோது யாருமே அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. அவரது நாடாளுமன்றக் கன்னிப்பேச்சில் அனல் தெரித்தது. ”ஊழலையும் லஞ்சத்தையும் முற்றிலும் ஒழிப்பேன்.மாவீரன் ஹெர்குலிஸ் யாராலும் நெருங்க முடியாத ஆஜியன் லாயங்களைச் சுத்தப்படுத்தியது போல், நானும் நைஜீரியாவைச் சுத்தப் படுத்துவேன்” என முழக்கம் செய்தார். இவ்வளவு ஆவேசமாகப் பேசினாலும் உள்ளூர்ப் பத்திரிக்கையான லாகோஸ் டைம்ஸில் அவரது பேச்சு ஒரு வரி கூட இடம் பெறவில்லை. இவருக்கு முன் பதவியிலிருந்த 16 அமைச்சர்களின் பேச்சையும் விரிவாகக் கொடுத்து விட்டதால், இது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன பழைய மாவுதான் என்று ஆசிரிய்ர் முடிவெடுத்துவிட்டார் போலும். இவற்றை எல்லாம் பதவிக்கு வந்த இக்னேஷியஸ் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 

இவர் பதவியேற்ற ஒருமாதத்தில் லஞ்சம் வாங்கியதற்காக நகரின் தலைமைக் காவல் துறை அதிகாரி கைதானார். நான்கு மாதங்கள் கழித்து அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைத்தது. நிதி அமைச்சர் இக்னேஷியஸ் அகார்பி, லாகோஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் இடம் பிடித்தார். நட்டநடுவில் கொட்டை எழுத்துக்களில் “அப்பழுக்கற்ற இக்னேஷியஸ் “ என்று பெயர் பொறிக்கப்பட்டிருக்க, திடீரென்று எல்லோரும் கண்டு பயப்படக் கூடிய புதிய சக்தியாகத் தோற்றமளித்தார்.. சிறிதும் பெரிதுமாக அதிகாரிகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கைதாக இக்னேஷியசின் பெயர் ஜுரம் போல் பரவியது.

நாட்டின் தலைவர் ஜெனரல் ஒடோபியே தனது நிதி அமைச்சரால் சந்தேகிக்கப்படுகிறார் என்று காரமாக வதந்திகள் பரவின. இப்போதெல்லாம் 100 மில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட அத்தனை அந்நிய ஒப்பந்தங்களையும் நிதி அமைச்சர் இக்னேஷியஸ் அகார்பி மட்டுமே தனிப்பட்ட முறையில் பரிசீலனை செய்து, கையெடுத்திட்டு அனுப்பினார். அவர் எடுத்த ஒவ்வொரு முடிவினையும் எதிரிகள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தனர்.  அவர்களால், குண்டூசியளவு குற்றத்தைக் கூடச் சுமத்த முடியவில்லை. எனவே, எதிர்ப்பாளர்களும் அவர் சாதனைகளை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாட்டின் தலைவரும் நிதி அமைச்சரும் தனியே சந்தித்து ரகசியமாகப் பேசிக் கொண்டனர். அவர்,  ”இக்னேஷியசிடம்,  அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு நிறுவனர்களுக்கும் இடையே உள்ள இடைத்தரகர்களுக்குச் செல்லும் லஞ்சத்தால் நமக்குப் பல மில்லியன் டாலகள் இழப்பு ஏற்படுகின்றன.யார் கைக்கு அவை செல்கின்றன என்பதைத் தங்களால் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். ”அதில் பெரும் பகுதி தனிப்பட்ட சுவிஸ் அக்கவுண்டுகளுக்குச் செல்கிறது என்று சந்தேகம் கொள்கின்றேன். ஆனால் நிரூபிக்க முடியவில்லை.” என்றார், நிதி அமைச்சர்.

அதை நிரூபிக்கத் தேவையான அதிகாரம் முழுமையும் நிதி அமைச்சர் இக்னேஷியஸ் அகார்பியிடம் எழுத்து பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதுடன், பாதுகாப்பிற்காகத் துப்பாக்கி ஒன்றும் தரப்பட்டது.

பல நைஜீயர்கள் ஆகஸ்டு மாதம்தான் வெளியூர்களுக்குச் செல்வர். இக்னேஷியஸும் அதே ஆகஸ்டு மாதத்தைத் தேர்வு செய்தார்.ஆர்லேண்டா பயணத்தைத் தன் மனைவி, குழந்தைகளுடன் சொந்தச் செலவில் மேற்கொண்டார். ப்ளோரிடா வந்து சேர்ந்ததும் மாரியட் ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கினார். ட்6ஹிடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி, நான் நியூயார்க்குக்கு வேலை விஷயமாகச் செல்லப் போவதாகவும், கூடிய சீக்கிரம் திரும்பி வந்து சேர்ந்து கொள்வதாகவும் தன் மனைவியிடம் கூறினார். மறுநாள் குடும்பத்தினரை ஆரவார டிஸ்னி உலகில் விட்டு விட்டு , விமானத்தில் நியூயார்க் பறந்தார். டாக்ஸியில் ஏறிக்கொண்டு  லகார்டியா விமான நிலையத்திலிருந்து கென்னடி விமான நிலையத்துக்கு விரைந்து, உடைகளை மாற்றிக் கொண்டு, டிக்கட் வாங்கிக் கொண்டு மூன்றாம் பேர் அறியாமல் ஜெனிவாவிற்குச் செல்லும் சுவிஸ் விமானத்தில் பயணத்தை மேற்கொண்டார்.

ஜெனிவாவில் இறங்கியவர், அதிகம் தெரியாத ஒரு ஓட்டலில் தங்கி, அலுப்புத் தீர 8 மணி நேரம் தூங்கினார். மறுநாள் காலை உணவின் போது, நைஜிரீயாவிலேயே பட்டியலிட்டு வைத்திருந்த வங்கிகளை நோட்டம் விட்டார். ஒரு தெருவில் ஏறக்குறைய பாதியை அடைத்துக் கொண்டிருந்த ஜெர்பெர் ஏ சீ வ்பங்கியிலிருந்தே தொடங்க முடிவெடுத்தார். ஒட்டலிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு  பேசினார். வங்கித் தலைவர் பேசி, பகல் 12 மணிக்கு இக்னேஷியஸைச் சந்திக்க ஒப்புக் கொண்டார்.

சற்று வத்தலும் தொத்தலுமான ஒரு பெட்டியுடன் இக்னேஷியஸ் வங்கிக்குச் சென்றார். பளிங்குக் கல் பதித்த ஹாலில் அவரை வரவேற்கச் சாம்பல் நிற சூட், வெல்ளச் சட்டை, சாம்பல் நிற டை என அமர்க்களமாக இருந்த இளைஞனுக்கு , நைஜிரீய அமைச்சராக இருந்தும் சீக்கிரமாக வந்த அவரது வருகை ஆச்சரியத்தை அளித்தது. வணக்கம் சொல்லி வரவேற்றான், தான் சேர்மனின் காரியதரிசி என்று அறிமுகமும் செய்து கொண்டான். 11-வது மாடிக்கு அழைத்துச் சென்று, வங்கித் தலைவரிடம் நைஜிரீய நிதி அமைச்சர் என்று அறிமுகப் படுத்தினான். செல்லும் வழியில் இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொண்டனர். ”மிக முக்கியமான விஷயமாக எங்கள் நாடு அதிபர் இங்கே அனுப்பியுள்ளார். உங்கள் நாட்டில் நைஜிரீயக் குடிமக்கள் வைத்திருக்கும் கணக்குகளைத் தெரிந்து வருவதே எங்கள் இலக்கு” என்று பேச்சைத் துவக்கி அதற்கு ஆதாரமான கடிதத்தையும் காட்டினார்.சேர்மனின் உதடுகள், லேசாக அசைந்தன, ”இம்மாதிரி விஷயங்களை எங்களால் தெரிவிக்க முடியாது. மேலும் நீங்கள் கொண்டு வந்திருக்கும் கடிதத்திற்கு எங்கள் நாட்டில் எந்த மதிப்பும் கிடையாது என்றும், எங்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது” என்றும் உறுதியாகக் கூறினார்.

அமைச்சரின் குரலில் மென்மை படர்ந்தது. ”எங்கள் அரசாங்கம், சுவிஸ் அரசுடன் இனி ஏற்படக்கூடிய அனைத்து அரசு தொடர்பான பணிகளுக்கும் உங்கள் வங்கியையே நாட அனுமதி வழங்கியிருக்கிறது” என்றார். ”மகிழ்ச்சி அமைச்சர் அவர்களே” என்றதோடு சரி. வெளியே புறப்படத் தயாராக எழுந்து நின்றவர் இதற்குப் பின்னர் கூட உட்காரவில்லை.

இக்னேஷியஸ் கொஞ்சம் கூட அசரவே இல்லை. ”வருந்துகிறேன், திரு. ஜெர்பர் ( வங்கித் தலைவரின் பெயர் ) நைஜிரீய மக்களின் கணக்குகள் குறித்த உங்கள் வங்கியின் ஒத்துழையாமை குறித்து இங்கு பெர்ன் நகரில் இருக்கும் எங்கள் தூதுவர் உங்கள் அரசாங்கத்திஃடம் புகார் சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.” என்ற போதும் வங்கித் தலைவர் அசைந்து கொடுக்கவே இல்லை.

”புகார் நீங்கள் கொடுக்கலாம். சுவிஸ் சட்டப்படி வெளி உறவுத் துறை இந்த விஷயங்களில் தலையிட அனுமதி கிடையாது.”  இவ்வாறு உரையாடல் தொடர்கின்றது. ”எங்கள் நாட்டுத் தூரகங்களைக்கூட நாங்கள் மூடிவிட வேண்டியிருக்கும்” என்ற நிலையிலும் கூட, வங்கித் தலைவர், “தங்கள் இஷ்டம், எங்கள் வங்கியின் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.” என்றார்.

கடைசியில் துப்பாக்கியை எடுத்து வங்கித் தலைவரின் நெற்றிப்பொட்டில் வைத்து, நைஜிரீய நிதி அமைச்சர், நிதானமாகச் சொன்னார். “ இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொரு நைஜிரீயனின் பெயரும் எனக்கு வேண்டும். இல்லை என்றால் உங்கள் சேர்மனின் மூளை இந்த மேஜையின் மீது சிதறும், புரிகிறதா?” இளைஞன் சேர்மனை நோக்கினான். சேர்மனின் உடல் வெல் வெலத்தது. ’இல்லை.பி.ஏ. கூடாது’  ’சரி இளைஞன் கிசு கிசுத்தான்.’.

”அப்புறம் நான் சந்தர்ப்பம் தரவில்லை என்று சொல்லக் கூடாது’ இக்னேஷியஸ் துப்பாக்கியின் விசையை அழுத்தினார். சேர்மனின் முகத்தில் வியர்வை ஆறாக ஓடியது. வெடிக்கப் போகும் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்கச் சகிக்காமல் இளைஞன் முகத்தை மூடிக் கொண்டான்.

’அற்புதம்’ நைஜீரியாவின் நிதி அமைச்சரான இக்னேஷியஸ் அகார்பி துப்பாக்கியை எடுத்துவிட்டு மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார். வங்கி அதிகாரிகள் இருவரும் பேசத் திராணியன்றி நின்றனர்.

அமைச்சர் தன் நாற்காலியின் கீழே இருந்த பழைய பெட்டியைத் தூக்கி மேஜையின் மீது வைத்தார். வங்கி அதிகாரிகள் குனிந்து பார்த்தனர். பெட்டி முழுவதும் டாலர் நோட்டுக்கள். சேர்மன் அதி வேகமாகக் கணக்கிட்டார். குறைந்தது ஐந்து மில்லியன் டாலர்கள் இருக்கக்கூடும்.

“ஏன் சார், என்ற வங்கித் தலைவரிடம், “ உங்கள் வங்கியில் நான் எப்படிக் கணக்கு ஆரம்பிப்பது ? என்று சொல்ல முடியுமா ?” என்று கேட்டார்,நைஜீரியாவின் நிதி அமைச்சரான இக்னேஷியஸ் அகார்பி.                    

இப்பொழுது விளங்குகின்றது வெளிநாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளின் பட்டியல் வெளியடப்படாத கதை !

0 comments:

Post a Comment

Kindly post a comment.