Monday, October 22, 2012

அம்பர சிதம்பர சதானந்த ,அடிகள் மறவாதருளும் அனுதினமுமே !- முத்துத் தாணடவர் கீர்த்தனை மற்றும் தமிழ்க்கீர்த்தனைகள் ஓர் பார்வை !


தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை-600 013 ( தற்பொழுது சென்னை 600 008 ) 1993-ல் தமிழ்க் கீர்த்தனைகள் என்ற நூலை வெளியிட்டுள்ளது. அரசுத் துறை வெளியீடு எண் 116. வெளியிட்ட பிரதிகள் 500 மட்டுமே.

அந்த நூலில் முத்துத் தாண்டவர் கீர்த்தனைகள் இரண்டும், முத்து வேலர் கீர்த்தனைகள் பதினொன்றும், கனம் கிருஷ்ணைய்யர் கீர்த்தனைகள் முப்பத்தி ஒன்றும்,  பாலகவி செண்பக மன்னார் கீர்த்தனைகள் பதினொன்றும், பாலசரஸ்வதி கீர்த்தனை ஒன்றும், யாரால் இயற்றப்பட்டது என்பது தெரியாத நிலையில் நான்கு கீர்த்தனைகளும் இடம் பெற்றிருக்கின்றன..

உ.வே.சா. நூலகச் சுவடியை ஆதாரமாகக் கொண்டு நூல் பதிப்பிக்கப் பட்டிருந்தது. பதிப்பாசிரியர் ஆர். வசந்தகல்யாணி, எம்.ஏ., கல்வெட்டாய்வாளர், தொல்பொருள் ஆய்வுத்துறை. பொறுப்பாசிரியர், நடன.காசிநாதன், எம்.ஏ. இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத்துறை. பதிப்பித்த ஆண்டு 1993.

இவை தமிழுக்கு அணியாவதோடு வரலாற்றுக் குறிப்புக்களைத் தருவனவாகவும் உள்ளன. கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உடையார் பாளையம், அரியலூர் ஜமீந்தார்கள், கபித்தலம் இராமபத்திர மூப்பனார், அவர் தந்தை முத்தைய மூப்பனார், இஞ்சிக்கொல்லை வேங்கடராமன் போன்றவர்களைப் பற்றிக் குரிப்பிடப்படுகின்றன. இசைக் கலைஞர்களுக்கு அவர்கள் கொடுத்த ஆதரவும் மதிப்பும் இதன்வழி நமக்குப் புலப்படுகின்றன.

அகச் சுவைப் பாடல்களாகவும், தத்துவப் பாடல்களாகவும், இறைவன் பெருமையைக் கூறுபவைகளாகவும், இவர்களை ஆதரித்தவர்களைப் பற்றியனவாகவும் இப்பாடல்கள் இசையோடு பாட இனிமை மிக்கவை. - ஆர்.வசந்தகல்யாணி எழுதியுள்ள முன்னுரையில் ஒரு பகுதி.

கீர்த்தனைகள் எழுதும் மரபு, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் ஏற்பட்டிருக்கிறது. ( இதை எழுதிய ஆண்டு 1993 ). கீர்த்தனைகளில் முக்கிய அங்கங்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகியவைகளாகும். கீர்த்தனைகளில் இசையைவிட சாகித்தியத்துக்கே அதிக முக்கியத்துவம் தரப்படும். தமிழ்க் கீர்த்தனைகள் இயற்ரியவர்களில் அருணாச்சலக் கவிராயர், கோபால கிருஷ்ண பாரதி, முத்துத் தாண்டவர், பாபநாசம் சிவன் ஆகியோர் முக்கியமானவர்களாகக் கருதப்படுவர்.( இவ்விடத்தில் மாரி முத்தாப்பிள்ளை விட்டுவிட்டது ஏனோ தெரியவில்லை ) நடன காசிநாதன் எழுதியுள்ள பதிப்புரையின் ஒரு பகுதி.

எடுத்துக்காட்டாக முத்துத் தாண்டவர் எழுதிய தமிழ்க் கீர்த்தனைகளில் ஒன்று மட்டும் இங்கே தரப்படுகின்றது. இதர பதிவுகளில் ஒவ்வொரு பாடலைப் பதிவு செய்யும் எண்னமும் உண்டு.                       


பாட்டு எண் : 1                                                                  கீர்த்தனை:- 1
தளு: தோடி ராகம்                                                               ஜம்பை தாளம்

பல்லவி

அம்பர சிதம்பர சதானந்த
            அடிகள் மறவாதருளும் அனுதினமுமே                ( அம்பர )

அனுபல்லவி

செம்பொன் மலச் சிலைவளைத்த திவ்விய பரமானந்த
                 சம்போ சிவசங்கர ஸ்ரீதாண்டவ நடேசா!           ( அம்பர )

சரணம்

கங்கை மதி அரவசைய காதிற் குழையசைய
செங்கைமழு துடிஅசைய செய்ய ஜடைஅசைய
பொங்குபுலி யதளசைய பொற்பாதச் சிலம்பசைய
மங்கைசிவ காமவல்லி மகிழ நடம்புரியும்                         ( அம்பர )


நின்மல நிரலாம்ப நிர்க்குண நிரஞ்சன
சின்மயானந்த பர சிற்க்குண சொரூபா !
வன்மலங்கள் நீகியருள் வாரியுரவே எனது
புன்மையற உமைக்காணப் பொதுவில் நடம்புரியும்                ( அம்பர )

துங்கமறை ஆகமங்கள் சொன்னவிதி வழுவாமா ?
சிங்கார மாமகங்கள் செய்து தினந்தினமும்
மங்காத நீறுபுனை வைதிக மூவாயிரவர்
நங்கோ வென்றே பரவநாளும் நடம்புரியும்                         ( அம்பர )


0 comments:

Post a Comment

Kindly post a comment.