சாண்டி புயல் தாக்குதல் : அமெரிக்காவின் பழமையான அணுஉலை மூடப்பட்டது !
அமெரிக்காவைத் தாக்கிய சக்திவாய்ந்த புயலான சாண்டி தாக்கியதால் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.
நியூயார்க் நகரம் முழுவதும் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான இந்தியக் குடும்பங்கள் வசிக்கும் நியூ ஜெர்சியிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த சூப்பர் சாண்டி புயல் தாக்கத்தால் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் அலைகள் மிக உயரமாக எழுந்து மிரட்டியதால், நியூஜெர்சில் உள்ள அமெரிக்காவின் மிகப் பழைமையான ஓய்ஸ்டர் கிரீக் அணுமின் நிலையம் உடனடியாக மூடப்பட்டது. அசாதாரண சம்பவங்கள் நடக்கலாம் என முதலில் அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
அனைத்து அணுசக்தி நிலையங்களும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், ஓய்ஸ்டர் கிரீக் அணுமின் நிலையம் அருகே முன்னேறி வந்த கடல் நீரின் வேகம் படிப்படியாக குறைந்ததால் ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1969-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஓய்ஸ்டர் கிரீக் அணு உலையில் தயாராகும் மின்சாரம், நியூஜெர்சியின் 9 சதவீத மின்தேவையைப் பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
நன்றி:- மாலை மலர், 30-10-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.