Sunday, October 21, 2012

"தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012' ஆவணம் வெளியீடு ! 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ! !

 தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், "தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012' ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, அதனைப் பெற்றுக் கொள்கிறார் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்.

சூரிய ஒளிமூலம் மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012-ஐ சனிக்கிழமை சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

சூரிய சக்தியானது, மனித குலத்துக்குத் தூய்மையானதும், சுற்றுப்புறச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாததும், அளப்பரியதும் மற்றும் குறைவற்ற எரிசக்தி ஆதாரமாகும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

எரிசக்தி பாதுகாப்பு, சூரிய சக்தியைக் கொண்டு 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் உள்நாட்டிலேயே சூரியசக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி ஆகியன சூரிய சக்திக் கொள்கையின் முக்கிய குறிக்கோள்களாகும். இதன் மூலம் 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் தலா ஆயிரம் மெகாவாட் வீதம் மொத்தம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சூரிய சக்திக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள்: சூரிய சக்தி பூங்காக்களை உருவாக்குதல், வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளை நிறுவ ஊக்குவிக்கும் வகையில் மின் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் தொகை அளித்தல். அனைத்து புதிய அரசு கட்டடங்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் தலா 50 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட சூரியசக்தி பூங்காக்கள் அமைக்கப்படும்.

இப்போதுள்ள அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது படிப்படியாகச் செயல்படுத்தப்படும். உள்ளாட்சி நிறுவனங்களின் அனைத்து தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புகள் படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.

பெரும் தொழிற்சாலைகள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி மின்சாரத்தில் இருந்தே பயன்படுத்த வேண்டும். சூரிய சக்தி சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

நிகர அளவியல், மின்சார வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதேபோல மின்தேவை வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சூரிய மின் சக்தி கொள்கை ஆவணம் வெளியிடும் நிகழ்ச்சியில், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன், எரிசக்தித் துறை செயலாளர் ரமேஷ்குமார் கன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.                  

நன்றி :-தினமணி, 21-10-2012









0 comments:

Post a Comment

Kindly post a comment.