Monday, October 22, 2012

01-03-1985 :-அதிகாலை 2 மணி :--சென்னை விமான நிலையத்தில் ராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆர். உருக்கமான சந்திப்பு !


28-02-1985 இரவு 12.30-க்கு சென்னை விமான நிலையத்தில் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அதிகாலை 2.00 மணிக்குத்தான் சந்திப்பு நிகழ்ந்தது.

1984 அக்டோபர் 31 தேதி இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி, எம்.ஜி.ஆரிடம் உடனே தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் கிட்னி ஆபரேஷன் செய்து உடல் நிலை தேறியபின்னரே தெரிவிக்கப் பட்டது.


உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்தபோது, 1984 அக்டோபர் 31ந்தேதி இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இச்செய்தியை அறிந்தால், எம்.ஜி.ஆரின் உடல் நிலை மேலும் பாதிக்கப்படும் என்பதால் அவரிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகுதான், இந்திரா காந்தியின் மரணச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு எம்.ஜி.ஆர். பெரிதும் துயரம் அடைந்தார். இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளை "வீடியோ"வில் பார்த்து, கண்ணீர் சிந்தினார்.

பாராளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் டிசம்பர் மாதம் தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக ராஜீவ் காந்தியும், தமிழக முதல்வராக எம்.ஜி.ஆரும் பதவி ஏற்றனர். இதன் பிறகு புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக செல்லும் வழியில் 28.2.1985 அன்று ராஜீவ் காந்தி சென்னை வந்தார்.

அவர் இரவு 12.50 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கர்நாடகத்தில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பெங்களூரில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் அவர் விமானம் அதிகாலை 3 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது.

ராஜீவ் காந்தியை வர வேற்பதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்துக்கு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். வந்து காத்திருந்தார். விமானத்தில் இருந்து ராஜீவ் காந்தி இறங்கியதும், அவருக்கு கவர்னர் குரானா, சந்தன மாலை அணிவித்தார். பிறகு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்திக்கு பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்தார்.

மற்றும் அமைச்சர்களும் பிரமுகர்களும் மாலை அணிவித்தனர். மாலை அணிவித்த எம்.ஜி.ஆரின் கையை ராஜீவ் காந்தி பிடித்துக்கொண்டு, அவருடைய உடல் நிலை பற்றி அன்புடன் விசாரித்தார். இந்திரா காந்தி மறைவுக்குப்பிறகு, இருவரும் சந்திப்பது இதுவே முதல் தடவை. இந்திரா காந்தியை நினைவு கூர்ந்தபோது, இருவரும் உணர்ச்சிமயமாகக் காணப்பட்டனர்.

கண்கள் கலங்கின. விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், இருவரும் கவர்னர் மாளிகைக்கு காரில் சென்றனர். அங்கு அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். "நீங்கள் உடம்பை சரியாக கவனித்துக்கொள்ளாமல், கடுமையாக உழைப்பதாக எனக்கு தகவல் வருகிறது.

ஆகவே, நீங்கள் தயவு செய்து உடம்பை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளுங்கள்" என்று எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தி பரிவுடன் கூறினார். "இலங்கை தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்து வருகிறார்கள். இலங்கை தமிழர்களை காக்க, மத்திய அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார்.

"இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளதால் அதிகமாக செலவு ஆகிறது. எனவே அகதிகளுக்கு உதவுவதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.11 கோடி நிதி உதவி செய்யவேண்டும்" என்றும் ராஜீவ் காந்தியிடம் எம்.ஜி.ஆர். வற்புறுத்தினார். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தி உறுதி அளித்தார்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் சென்றார். 1985 ம் ஆண்டு ஜுலையில் தமிழக அரசுக்கு கப்பல்கள் வாங்க, எம்.ஜி.ஆர். ஜப்பானுக்குச் சென்றார். அப்படியே அமெரிக்கா சென்று புரூக்ளின் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொண்டார். அவர் உடல்நிலை நன்கு தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

24.8.1985 அன்று எம்.ஜி.ஆர். சென்னை திரும்பினார். 1984 ல் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, டெல்லி மேல் சபை உறுப் பினராக மட்டும் இருந்து வந்த ஜெயலலிதாவை மீண்டும் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்தார்.

1986ம் ஆண்டு பிப்ரவரி 23 ந்தேதி தமிழகத்தில் ஊராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடந்தது. மொத்தம் 97 நகரசபைத் தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.கழகம் 64 இடங்களைக் கைப்பற்றியது. அதன் தோழமை கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, முஸ்லிம்லீக், ஜனதா ஆகியவை 8 இடங்களைப் பிடித்தன.

அ.தி.மு.க. 11 இடங்களிலும், இ.காங்கிரஸ் 11 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. பஞ்சாயத்துகளுக்கு நடந்த தேர்தலிலும் தி.மு.க. அணி வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். மந்திரிசபையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக கே.ஏ.கிருஷ்ணசாமி இருந்து வந்தார்.

அவருடைய இலாகாவை அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் 7.4.1986 ல் எம்.ஜி.ஆர். மாற்றினார். இதனால் அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அ.தி.மு.க.வை விட்டு விலகப்போவதாகவும், அரசியலுக்கே முழுக்கு போடப்போவதாகவும் கூறினார்.

இது குறித்து நடந்த சமரச முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. கிருஷ்ணசாமியின் ராஜினாமாவை எம்.ஜி.ஆரின் யோசனைப்படி கவர்னர் ஏற்றார். ஆனால் அ.தி.மு.க.வை விட்டு விலகும் திட்டத்தை கிருஷ்ணசாமி கைவிட்டார்.                                                                                                   

நன்றி :- மாலைமலர், காலப்பெட்டகம். 22-10-2012.

0 comments:

Post a Comment

Kindly post a comment.