Wednesday, September 26, 2012

பாலைவனமாகிவரும் தென்பெண்ணை ஆறு - கே.சத்திய மூர்த்தி



  
திருக்கோவிலூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டால் தென்பெண்ணையாறு நாளுக்குநாள் பாலைவனமாய் மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் மிக முக்கிய நகரமான திருக்கோவிலூர் நகரத்தையொட்டிச் செல்லும் தென்பெண்ணையாறு, சுற்றுப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்தின் மூலதனமாகவும் விளங்கிவருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட சாத்தனூர் அணை, அதன்பின் கட்டப்பட்ட திருக்கோவிலூர் அணை ஆகியவற்றின் மூலம் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றிக் கடலூர் மாவட்டமும் விவசாயத்தில் செழிப்படைந்து வந்தது.

ஆனால் சமீபகாலமாகத் தென்பெண்ணையாற்றின் பல பகுதிகளில் மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாலும், அரசுக் குவாரிகள் விதிமுறைகளுக்கு மாறாகவும், முறைகேடாகவும் செயல்படுவதாலும் மணல்வளம் குன்றி தென்பெண்ணையாறு பொட்டல் காடாகக் காட்சியளிக்க ஆரம்பித்துவிட்டது.

குறிப்பாக வயல்வெளிப் பரப்புகளுக்கு மத்தியில்தான் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். சில சமயம் ஆற்றில் சிறிதளவு நீர் இருக்கும்போது கால்நடைகள் நீர் பருகுவதற்கும், மேய்ச்சலுக்காகவும் அவற்றை ஓட்டிச்செல்வது வழக்கம். தற்போது அதற்கும் வழியில்லாமல் ஆகிவிட்டது.

ஆற்றில் நிலத்தடி நீர்மட்டமும் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் நீரின் சுவையும் மாறிவிட்டது. இதுமட்டுமின்றி அருகிலுள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர்மட்டம் நாளுக்குநாள் வேகமாகக் குறைந்து வருகிறது.

இங்கிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் கொண்டுச் செல்லப்பட்ட குடிநீரும் துவர்ப்பாகி சுவை மாறிப்போனதால், அத்தண்ணீரை சம்பந்தப்பட்ட கிராம மக்கள் குடிநீருக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி வந்த மக்கள், இன்று காசு கொடுத்துத் தண்ணீர்க் கேன்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய அவலநிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இயற்கை வளத்தைப் பாதுகாத்திட, மாட்டு வண்டி மணல் திருட்டைத் தடுத்திட, விதிமீறும் அரசு குவாரி மற்றும் திருட்டுத்தனமாக செயல்பட்டுவரும் தனியார் மணல் சேமிப்புக் கிடங்குகள் குறித்து அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி :- தினமணி, 26-09-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.