ஏப்ரல் 1985- சென்னை சூளைமேடு பகுதியில் எக்கச்சக்கமான கூட்டம்.
கால்கள் இல்லாதவர்களுக்கு செயற்கைக் கால்களை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 100 பேருக்கு மட்டும்தான் அவர்களால் கொடுக்க முடிந்தது.
செயற்கைக்கால் கிடைக்காததால் பலர் ஏமாற்றத்துடனும், அழுகையுடனும் திரும்பினர்.
இந்நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த மீனா தாதா என்ற பெண்ணுக்கு மனம் உருகிப் போனது.
கால்கள் இல்லாத அந்த மனிதர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையே வந்து ஏமாற்றத்துடன்
திரும்பிப் போனது, அவரை மிகவும் வேதனைப்பட வைத்தது.
வீட்டுக்கு வந்ததும் தன் வேதனையைக் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டார்.
அவர்கள் கேட்டனர்: "" ஏன் நீயே இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து
இலவசமாகச் செயற்கைக் கால்களை வழங்கக் கூடாது?''
இந்தக் கேள்வி மீனா தாதாவின் தலைக்குள் சுற்றிச் சுற்றி வந்தது. விளைவு?
சென்னையிலிருந்து துளசிதாஸ் என்பவரை செயற்கைக் கால் செய்யும் தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொள்ள ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். ஆறு மாதப் பயற்சிக்குப் பின்பு சென்னைக்குத் திரும்பி வந்த துளசிதாஸ், மேலும் சிலருக்குப் பயிற்சி அளித்தார்.
இப்படித்தான் 1986 ஏப்ரலில் ஆரம்பமானது "முக்தி'. இதுவரை இரண்டரை லட்சம் பேருக்கும் மேல் இலவசமாகச் செயற்கைக் கால்களை வழங்கியிருக்கிறது இந்த அமைப்பு.
"முக்தி'யின் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் மீனா தாதாவைச் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள "முக்தி' எஸ்.எல்.சேத்தியா மெமோரியல் சென்டரில் சந்தித்தோம்:
""சென்னையில் லாயிட்ஸ் ரோடில் எங்கள் வீட்டின் கார் ஷெட்டில்தான் செயற்கைக் கால் செய்யும் பணியை முதன்முதலில் ஆரம்பித்தோம். கால் மூட்டுக்குக் கீழேயும், மூட்டுக்கு மேலேயும் பொருத்துகிற மிகவும் எடை குறைவான செயற்கைக் கால்களைச் செய்து வழங்குவதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம்.
எங்களிடம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கைக் கால்களை வாங்கிப் பயன் அடைந்தவர்களும் உண்டு. இப்போது, பெரிய அளவுக்குப் பிசினஸ் நடத்தும் ஒருவர், எங்களிடம் முதன்முதலாக 18 ஆண்டுகளுக்கும் முன் செயற்கைக் கால்களை வாங்கிப் பயன்படுத்தினார். ரயிலிலும், விமானத்திலும், கார்களிலுமாக அவர் இந்தக் கால்களைப் பொருத்திக் கொண்டே பயணம் செய்து, தனது பிசினûஸக் கவனித்துக் கொள்கிறார்.
எங்களிடம் சென்னையில் இருந்து மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் இருந்து செயற்கைக் கால்களைப் பெற வருகிறார்கள். ஏற்கெனவே செயற்கைக் காலை எங்களிடம் வாங்கிச் சென்றவர்கள் சொல்வதைக் கேட்டும் பலர் எங்களிடம் வருகிறார்கள்.
நாங்கள் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் மூலமாக விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறோம். அங்கு வருபவர்கள் மூலமாகவும் நிறையப் பேர் எங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு செயற்கைக் கால்களுக்காக எங்களை நாடி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள பல அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் கால்களில் அறுவைச் சிகிச்சை செய்யும் பல மருத்துவர்கள், எங்களைப் பற்றி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களிடம் சொல்கிறார்கள். அதைக் கேட்ட பலரும் எங்களிடம் செயற்கைக் கால்களைப் பெற வருகிறார்கள்.
குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டால் காலிபர் போட வேண்டும். அப்படிப்பட்ட குழந்தைகளும் இங்கு வருகிறார்கள்.
சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே கால்கள் வளைந்திருக்கும். கால்கள் வளைந்திருக்கும் குழந்தைகள் எங்களிடம் வந்து நாங்கள் தரும் ஸ்பிலிண்ட்டை இரவு நேரத்தில் அணிந்து கொண்டால் சில ஆண்டுகளில் கால்கள் சரியாகிவிடும். சிலருக்கு மூட்டுக்குக் கீழ் கால்கள் இருக்காது. அப்படிப்பட்டவர்களும் எங்களிடம் வந்து செயற்கைக் கால்களைப் பெற்றுச் செல்கிறார்கள்.
புற்றுநோய் வந்தவர்கள், தொழுநோயாளிகள், மாணவர்கள், பிச்சைக்காரர்கள் வந்தால் அவர்களைக் காத்திருக்க வைக்காமல் உடனே செயற்கைக்கால்களைச் செய்து கொடுத்து அனுப்பி வைக்கிறோம்.
நாங்கள் எப்படி செயற்கைக் கால்களை உருவாக்குகிறோம் என்பதைப் பார்க்கவும், செயற்கைக் கால்களைச் செய்வதில் பயிற்சி பெறவும் பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவ,மாணவிகள் இங்கு வருகிறார்கள்.
செயற்கைக் கால்கள், காலிபர்கள் தவிர, கை இழந்தவர்களுக்கான செயற்கைக் கைகளையும் தயாரிக்கிறோம். இந்தக் கைகளுக்கான விரல் பகுதியைக் கான்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வாங்குகிறோம். அதுவே ரூ.5 ஆயிரம் ஆகி விடுகிறது. கையின் இதர பகுதிகளை இங்கே செய்து முழுக் கையையும் உருவாக்குகிறோம். இந்தச் செயற்கைக் கையின் சிறப்பு என்னவென்றால், இயற்கையான கைவிரல்களைக் கொண்டு ஒரு பொருளைப் பிடிப்பதைப் போல பிடித்துக் கொள்ள முடியும். இந்தக் கைகளைப் பொருத்திக் கொண்ட சிலர், இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். கார் ஓட்டுகிறார்கள்.
ஒரு செயற்கைக் கால் செய்வதற்கு ரூ.3 ஆயிரம் - 4 ஆயிரம் வரை செலவாகிறது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் நண்பர்கள் பலர் தரும் நன்கொடைகளின் மூலமாகவே இந்தச் சேவையைச் செய்து வருகிறோம்'' என்கிறார் பெருமையாக.
நன்றி :-தினமணி கதிர், 09-09-2012, தினமணி இணைப்பு.
0 comments:
Post a Comment
Kindly post a comment.