Friday, August 17, 2012

தற்கொலை எண்ணத்தை விரட்டும் ஒரு படைப்பாளியின் வாழ்க்கைக் கதை !உள்ளங்களின் உள்ளறைகளை ஊடுருவும் வல்லமைமிக்க எழுத்துக்குச் சொந்தக்காரர் தஸ்தயேவ்ஸ்கி.அவரது வாழ்க்கை திறந்த புத்தகம்.இது அவரின் வாழ்க்கை வரலாறு அல்ல;எனினும் அவரது வாழ்க்கையை கறுப்பு வெள்ளையாகக் காட்டும் வலுவான ஆதாரம். கடவுளின் அம்சங்களும் சாத்தானின் அம்சங்களும் இணைந்த ஆளுமை தஸ்தயேவ்ஸ்கியுடையது என்ற கருத்து இலக்கிய உலகில் நிலவுகிறது.ஆம் என்கிறது இந்த நினைவுக் குறிப்புகள்.

“அமைதியற்ற , மனம் பிறழ்ந்த , வேதனை நிறைந்த வாழ்க்கையாக இருந்தது அவர் வாழ்ந்து முடிந்த வாழ்க்கை.தன் இயல்பின், ஒன்றுக்கொன்று முரணான இரு ஆளு மைப் பண்புகளை அவரால் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் இயலவில்லை. தரித்திரமும், குற்றவாசனையும்,குரூரமெல்லாம் நிறைந்த கீழுலகின் ஊடேதான் அவ ரது கட்டுப்படுத்தப்படாத வாழ்க்கை கடந்து சென்றது. மனித சுபாவத்தின் பெருஞ் சிக்கல்கள் அத்தனையும் நிறைந்த மகத்தான இலக்கியப் படைப்புகள் பிறந்ததும் அங்கிருந்துதான்”என அறிமுகத்தில் எழுதியுள்ள வரிகள் நம்மை உலுக்குகிறது.

வெற்றியாளர்களைப் பற்றி எழுதும்போது புனையப்படும் போலித்தனங்கள் எது வும் இந்நூலில் இல்லை.அவர் எழுத்தைப்போல நினைவுக்குறிப்புகளும் ஒழிவு மறைவு ஏதுமின்றி உண்மையைப் பேசுகிறது. அவர் மரண தண்டனையிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர்.சைபீரியாவில் தண்டனை அனுபவித்தவர். சூதாட்டப் பிரியர்.வலிப்பு நோயாளி.பெரும் கடன்காரர்.எட்டு பெண்களை நேசித்தவர்; பலரால் ஏமாற்றப்பட்டவர்.கடனில் சீரழிந்தவர்.அன்னாவை மணந்த பின்னரே அன்பின் வாசத்தை முழுமையாய் நுகர்ந்தவர். ஆதலால் அன்னா தானே கூறுகிறார், “அவரின் உயர்வு தாழ்வுகளுடன் வாசகர் களுக்கு வெளிப்படுத்துவதற்கான என் ஆத்மார்த்த மான மற்றும் மனப்பூர்வமான பேராவலை முன்வைத்து”. ஆம்.உண்மையைத் தவிர வேறில்லை.

அவர் வலிப்பு நோயாளி. இதை அவர் மறைத்ததில்லை;மாறாக அதையே பல மாக்கியதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.அவரது நாவல்களில் வலிப்பு நோயாளிகளை பாத்திரம் ஆக்குவதில் அவர் பெற்ற வெற்றி மகத்தானது.கரம்சோவ் சகோதரர்கள் நாவலில் ஸ்மிர்ட்யாகோவ் பாத்திரம் நம்மை அதிரவைக்கும்.அதுபோல் மேலும் மூன்று நாவல்களில் வலிப்பு நோயாளிகளைச் சித்தரிப்பதில் அறிவியல் பார்வையும் அனுபவப் பிசைவும் அவரின் தனிச்சிறப்பு.

காதல் வாழ்வில் அவர் வாழ்க்கையில் ஏழெட்டுப் பெண்கள்மலர்க்கொத்துகளுடன் வந்திருக்கிறார்கள்.ஆனால் இவர்களில் யாரிடமுமே அவரது காதல் யதார்த்த மாகவில்லை. மாக்ஸிம் கார்க்கி இவரை ‘டெவில் ஜீனியஸ்’ அதாவது தீமைகளின் ஞானி என்று வர்ணித்துள்ளார்.அவரது காதல் வாழ்வே ஒரு நாவலை விஞ்சியது.

“மகிழ்ச்சி!அப்படியொன்றை நான் வாழ்க்கையில் அறிந்ததே இல்லை”என்கிற தஸ்தயேவ்ஸ்கி இறுதியில் அன்னாவிடம் காதல் சரணடைந்ததை டைரி குறிப்புகளின் விவரங்களிலிருந்து சுவைபட தந்துள்ளார் அன்னா. “வாட்டமும் சலிப்பு மான மனோபாவத்துடன் வாழ்கிறேன்”.. என்றவர் தஸ்தயேவ்ஸ்கி.அவர் சூதாட்டத் தில் சுகங்கண்டவர்.ஈட்டிக்காரனிடம் சிக்கியவர்.வலிப்பு நோயாளி.அன்னாவைவிட பலவயது மூத்தவர்.ஆயினும் அவர்களுக்குள் மெய்யான காதல் அரும்பியது பெருங்கதையாகும்.அது உயிர் துடிப்புடன் பதிவாகியுள்ளது.

தற்கொலை மனோநிலையிலுள்ள யாராயினும் இவரது வாழ்க்கையை அறிந்தால் அந்த கெட்ட எண்ணத்திலிருந்து மீள்வது திண்ணம்.எண்பது பக்க இந்நூலைப் படித்த பின் பலமணிநேரம் இதயம் கனத்து இருந்தது.சமீபத்தில் ஆயிரத்து ஐநூறு பக்க இவரது நாவல் கரம்சோவ் சகோதரர்களைப் படித்தபோது ஏற்பட்ட அதே உணர்வு இப்போதும் ஏற்பட்டது.

நன்றி :- தீக்கதிர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.