Wednesday, August 29, 2012

கக்கன் -சிப்பியம்மாள் ஈன்றெடுத்த கக்கன் ஜீ ! பட்டிமன்றத்தில் பதிவர் ரவி ! அமுதசுரபித் தகவல்கள் !






கக்கன் ஜீ யின் நிலைத்த புகழுக்குக் காரணம் 

அரசியல் பணியா? ஆளுமைப் பண்பா? -

பட்டிமன்றத்தில் கவிஞர் இரா. இரவி

நடுவர்: முனைவர் இரா. மோகன்

தும்மைப்பட்டியில் மலர்ந்த தும்பைப் பூ கக்கன் ஜீ
மேலூர் பகுதியில் மலர்ந்த குறிஞ்சிப் பூ கக்கன் ஜீ
பூசாரிக் கக்கனுக்குப் பிறந்த கடவுள் கக்கன் ஜீ
குப்பி அம்மாள் ஈன்றெடுத்த சிப்பிமுத்து கக்கன் ஜீ

இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதையே இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் என்று காந்தி ஜீ-யை சொல்வார்கள். அதுபோல வாழ்ந்த மாமனிதர் கக்கன் ஜீ பிறந்த இந்த மண்ணிலிருந்து பேசுவதை மிகவும் பெருமையாகக் கருதுகின்றேன். இந்த மண்ணில் பிறந்த நாம் எல்லாம் பெருமை கொள்வோம். ஏழ்மையில் பிறந்து வளர்ந்து, அமைச்சர் பதவி வரை உச்சம் அடைந்த போதும், கடைசி வரை ஏழ்மையிலேயே வாழ்ந்த திருமகன் கக்கன். அவர் ஒரு மகா சமுத்திரம். அவரை அரசியல் என்ற குட்டையில் அடைக்காதீர்கள். அவர் ஒரு சகாப்தம், அவரை வட்டத்தில் சுருக்காதீர்கள்.

கக்கன் அவர்களுக்கு தம்பி பிறக்கும் போது தாயை இழந்தார். சிற்றன்னை வளர்க்கிறார். தந்தை கிராம காவலராக பணிபுரிந்து வந்தார். மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். ஆனால் கக்கன் ஜீ-க்கு படிப்பை விட நாட்டு விடுதலையில் ஆர்வம் அதிகம் இருந்ததால், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். பெண் வேடம் பூண்டு மறைந்து போராட்டம் செய்தார், பிடித்து வைத்து மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. அவருடைய சிறந்த பண்புக்கு, மன உறுதிக்கு பல எடுத்துக்காட்டு

அவரது வாழ்வில் உள்ளன.

இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார். வட்டச் செயலாளர், மாவட்ட பொருளாளர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகள் வகித்த போதும் உண்மையாக. நேர்மையாக வாழ்ந்த நல்லவர். இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் முனைவர் அரங்க சம்பத்குமார் எழுதிய "நடையில் நின்றுயர் நாயகன் கக்கன்" என்ற நூலை வாங்கிப் படித்து திருத்த வேண்டும். இங்கு உரையாற்றுவதற்கு ஆதாரமாக விளங்கியது இந்த நூல் தான். மிகச் சிறந்த மனிதரைப் பற்றி நூற்றாண்டு விழா கண்ட இந்தத் திருமகன் பற்றி ஊடகங்களும் இருட்டடிப்பு செய்தது. மிக வருத்தம். நடிகர் நடிகைகளுக்குத் தரும் முக்கியத்துவம் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு காந்தியும், காமராஜரும் கலந்த கலவையான கக்கன் ஜீக்கு வழங்கவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று போராடிய போது, அவருடன் வருகை தந்த அம்பலம் செட்டியார் இருவரையும் வெட்ட வந்த போது எனக்கு ஆதரவாக வந்த அவர்களை வெட்டு முன்பு என்னை வெட்டுங்கள் என்று கழுத்தைக் காட்டிய போது வெட்கிப் போனார்கள். இன்னா செய்தாரை. திருக்குறள் வழி வாழ்கிறார்.

தனது வளர்ப்புத் தந்தை குரு வைத்தியநாதய்யர் தந்த பணத்திற்கு மிகச் சரியாக கணக்கும், மீதித் தொகை திருப்பித் தரும் நல்ல குணம். அவர் இறந்த போது இவரும் மொட்டை அடித்துக் கொள்கிறார். இவரது சிறந்த பண்பை சொல்லிக் கொண்டே போகலாம். அமைச்சராக இருந்த போது தன் மனைவி ஒரு அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னதற்காக, பலர் முன்னிலையில் தெருவில் மனைவியை கடிந்து கொள்கிறார்.


அரசு ஊழியரைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சொந்த வேலை வாங்கக் கூடாது என்கிறார். வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்குக் காப்பி வழங்க பால் இருப்பதில்லை. எனவே ஒரு மாடு வாங்கலாம் என யோசனை சொல்லி, நண்பர் திரு.எழுமலை மாடு வாங்கி வருகிறார். அவரிடம் ஒப்புகைச் சீட்டு எங்கே என்கிறார். அவர் மாட்டிற்கு தருவதில்லை என்கிறார். தேடி பிடித்து மாடு விற்றவரிடம் வாங்கி வருகிறார். வருவாய் தலை ஒட்டவில்லை. ஒட்டி வாங்கி வா என்கிறார். இப்படி பல நிகழ்வுகள்.

காந்தியடிகளை அவர் மிகவும் நேசித்த காரணத்தால் தனது மகளுக்கு கஸ்தூரிபாய் என பெயர் சூட்டுகிறார். தம்பி அழைத்து வந்த உறவினர் தவறு செய்து தண்டனை பெற்றவர். பரிந்துரைக்கு வந்த போது வெளியே போ ! என விரட்டுகிறார். அன்று மனம் வருந்திய தம்பி, இன்று அண்ணனின் நேர்மை கண்டு மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றார். 


கட்சிக்காரராக இருந்தாலும் வேலை சரியில்லை என்றால், காசோலை தர முடியாது என மறுக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது எழுத்தாளர் ஜெயகாந்தன் இவருடன் ரயில் பயணம் செய்த போது, பல்வேறு திரவியங்கள் கருவிகள் கொண்டு முகச்சவரம் செய்தார். ஆனால் கக்கன் அவர்கள் அரைபிளைடால் அற்புதமாக முகச்சவரம் செய்ததைத் கண்டு அசந்து போய்ப் பாராட்டி உள்ளார்.

மந்திரியாக இருந்த போது வெளியூர் சென்ற போது மாற்று உடை இல்லை என்று அவரே துவைத்து இருக்கிறார். மகிழுந்து ஓட்டுரை முதலில் சாப்பிடச் சொல்லும் மனித நேயம் மிக்கவர். கவர்னர் மாளிகை விருந்துக்கு தனது குழந்தைகள் கதராடை அணிந்து வரவில்லை என்பதற்காக வர வேண்டாம் என்று குழந்தைகளை திருப்பி அனுப்புகின்றார்.


சமரசம் என்ற சொல்லிற்கு இடமின்றி கொண்ட கொள்கையில் உறுதியாக வாழ்ந்த நல்லவர். உறவினர்கள் மருத்துவச் கல்லூரியல் இடம் கேட்டு வந்த போது காலை 9 மணிக்கே சென்று வரிசையில் நின்று படிவம் வாங்குகங்கள் என்று சொல்லி அனுப்பியவர். தங்கப் பேனா மலேசியா மந்திரி தந்ததும், அரசு பதிவேட்டில் பதிய முற்பட்ட போது மந்திரி எதற்கு ? என்று கேட்டதற்கு நான் மந்தரி பதவியை கேட்டு விலகும் போது, பேனாவை அரசிற்கு ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும், அதற்காக பதிய வேண்டும் என்றார். இல்லை இதை பதிய வேண்டாம்,உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது அன்பளிப்பு என்றார். எனக்குத் தேவை இல்லை. இந்த தங்கப் பேனா பயன்படுத்தும் தகுதி எனக்கு இல்லை என திருப்பி தந்து விடுகிறார். 

கக்கன் அவர்களை கக்கன் ஜீ என்று முதலில் அழைத்தவர் நேரு ஜீ. அந்தப் பெயரே நிலைத்தது. அவரது அரசியல் வாழ்க்கை 15 ஆண்டுகள் என்ற போதும் வாழ்நாள் 72 ஆண்டுகள் மிகச் சிறந்த பண்பாளராக நேர்மையின் சின்னமாக எளிமையின் சிகரமாக வாழ்ந்தவர். பெரிய பதவிக்காக மனம் மகிழவும் இல்லை. தோல்விக்காக துவளவும் இல்லை. ஒரு ஞானியைப் போல வாழ்ந்து உள்ளார்.

சாதிக் கலவரம் நடந்த போது தேவரை நேரில் போய் சந்திக்கச் சென்ற போது போக வேண்டாம் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மீறி மன தைரியத்துடன் சென்று தேவரை சந்திக்கிறார். அவர் மிகச் சிறப்பாக வரவேற்று, இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை விட்டு சாதிக் கலவரத்தை நிறுத்துகின்றனர். அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது தம்பி முன்னோடியின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். இப்படிப்பட்ட அமைச்சரை இன்றைக்கு இந்தியாவில் உலகில் எங்காவது பார்க்க முடியுமா?

கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி வழங்குகிறார். வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அதை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை. எனவே தருவது என் கடமை என்கிறார். இப்படிப்பட்ட நாணயம் மிக்க மனிதனை எங்கு தேடினாலும் காண முடியாது.

தனது தம்பிக்கு, காவல் துறை உயர் அதிகாரி திரு.அருள் அவர்கள், துணை ஆய்வாளர் பதவி தந்த செய்தி அறிந்ததும் என் தம்பிக்கு எப்படி நீங்கள் பதவி தரலாம் என்கிறார். உடல் தகுதி அடிப்படையில் தான் தந்தேன் என்கிறார். இல்லை ஒரு விபத்தில் காயம் பட்டு ஒரு விரல் சரியாக மடக்க வராது. துப்பாக்கி சுட முடியாது. எனவே அந்தப் பதவி தரக் கூடாது என கண்டிக்கிறார்.

வறுமையிலும் நேர்மையாக, நெறியாக வாழ்ந்த மாமனிதர், சத்யமூர்த்தி சீடர் என்பதால் தனது மகன்களுக்கு சத்தியநாதன், நடராசமூர்த்தி என்று பெயர் சூட்டி மகிழ்கின்றார். இந்த நாள் இனிய நாள், மிகச் சிறந்த மனிதரைப் பற்றி பேசிய நாளை சிறந்த நாளாகக் கருதுகின்றேன். மாமனிதர் கக்கன்  உடல் மறைந்து இருக்கலாம். அவரது புகழ் உடலுக்கு என்றும் அழிவில்லை, உலகம் உள்ளவரை நிலைக்கும். 



விவிலியத்தில் ஒரு வசனம் வரும். 
தன்னைத் தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவர்
அதைப் போல வாழந்த மாமனிதர் கக்கன்.

நன்றி :கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 
இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

0 comments:

Post a Comment

Kindly post a comment.