Monday, August 27, 2012

ஆமைகள்... -சங்கர் சசிகலா







26-08-2012-ல், சென்னை, மாம்பலம், புண்ணியகோட்டி திருமண மண்டபத்தில்  தமிழ்நாட்டில் உள்ள வலைப்பதிவர்களுக்கான  முதல் திருவிழா, நிகந்தது. 30% செலவு  மக்கள் சந்தை உதவியதாகத் தகவல் காதில் விழுந்தது. செவிக்கும் வயிற்றுக்கும் நல்லுணவு கிடைத்தது. தென்றலின் கனவு என்ற கவிதை நூலும் கிடைத்தது. எழுதியவர் சஙகர் சசிகலா. எல்லாமே இலவசம். இதுபோன்ற நிகழ்வுகள் பல நடத்திக் கையைப் பன்முறை சுட்டுக் கொண்டவன் என்ற நிலையில் யார் யார் நட்டப்பட்டார்களோ என்ற வருத்தமே ஒரு பக்கம் மேலோங்கியது. சகலகலாவல்லவன் சங்கரநாராயணன் சாமனியரல்லவே என்ற ஆறுதலும் கிடைத்தது. 

கவிதைத் தோழிக்கு நன்றி சொல்ல, தொலைபேசி எண் ஒன்றைத் தேடிப்பிடித்தேன். இணைப்புக் கிடைக்கவே இல்லை, வலைப்பூ முகவரி அறிந்தேனில்லை. கூகிள் கைகொடுத்தது. என் கிராமத்து வீடு என்ற ஓர் கவிதையின் தலைப்பினைக் கணினியில் தட்டியவுடன்,

veesuthendral.blogspot.com  என்ற வலைமுகவரி கிடைத்தது. என்றோ பின்தொடர்பவனாகப் பதிந்து வைத்த உண்மையும் தெரிந்தது. வலைத் தளத்தை அமைத்துத் தந்த, ”வசந்தமண்டபம்” வலைப்பூ நண்பர் துபாயிலிருந்து வருகை தந்ததும், கவிதைகளைப் பாராட்டியதும் சிறப்பம்சம். மேலும் கடிதத்தில் எழுதப்பட்டு கணினியில் ஏற்றப்படவையல்ல சங்கர் சசிகலாவின் கவிதைகள் என்ற பாராட்டும் மேடையில் பேசியியவரிடமிருந்து கிடைத்த தகவல் மற்றுமொரு சிறப்பு. நல்ல எதிர்காலம் உள்ளது.

முயலாமையாலே  இல்லாமை சூடின்
வாழ்வே கனவாகும்!
கல்லாமையாலே அறியாமை வந்தால்
எதிர்காலம் பொய்யாகும்!

தேடாமையாலே தெரியாமை வாழின்
நினைவும் குருடாகும்!
எண்ணாமையாலே எழுதாமை நேரின்
கவிதையும் உயிரிழக்கும்!

தேற்றாமையாலே ஆற்றாமை விளையின்
கண்ணீரே கதைபாடும்!
பகிராமையாலே புரியாமை வருமின்
உறவே பிரிவாகும்!

தீண்டாமையாலே கூடாமையிருப்பின்
ஒற்றுமை பாலையாகும்!
பொறாமையாலே போற்றாமை உயிர்ப்பின்
பகையே உறவாகும்!

உண்ணாமையாலே உறங்காமை நேரின்
உலகே கசப்பாகும்!
கொடாமையாலே கொள்ளாமை வந்தால்
வாழ்வில் அர்த்தமில்லை!

இறவாமையென்ற பொன்னாமை தேடல்
என்னாளும் நலமாகும்!
வாய்மை நேர்மை உண்மை மேன்மை
இதுவே உயர்வாகும்!

காந்தியிடம் பள்ளியில் படிக்கும்பொழுது  தங்கத்தைவிட உயர்ந்தது எது என்று கேட்ட வினாவிற்குச் ”சத்தியம் “ என்று பதில் எழுதினார். பிளாட்டினம் என்று எழுதுவதே பாடத் திட்டத்தின்படி சரியான பதில். ஆனால், உண்மைக்கு ஆசிரியர் மதிப்பெண் போடாலா இருந்திருப்பார்.? தங்கள் கவிதைகளில் உண்மை அனுபவ்பங்கள் விரவிக் கிடக்கின்றன. கவிதைக்குப் பொய் அழகல்ல என்பவன் நான். சற்று மிகைப்படுத்திக் கூறலாம். அவ்வளவுதான்

உன்கண்ணில் நீர் வடிந்தால் என்று யாரும் எழுதிவிடலாம். 
அடுத்த வரியான என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி 
என்று கண்ணதாசனால் எழுத முடியும். அதுவே கவிதை.

பொன்னாமை என்பதற்குப் பொருள் எனக்குத் தெரியவில்லை. கழகத் தமிழ் அகராதியைப் புரட்டியும் பயனில்லை. முடிந்தால் குறிப்பிடுங்கள் கவிதக்குக் கீழே!.

ஜெயகாந்தன், சமுத்திரம், இராஜம்கிருஷ்ணன் போன்றோரின் நூல்களப் படியுங்கள். கண்ணதாசனையும், வண்ணதாசனையும் கூட விட்டு விடவேண்டாம். நிறைய எழுதிவிட்டேன்.  

இந்தவலைப்பூவின் பக்கம் வருவோரேல்லாம் தென்றலுக்கும் வருவார்கள் .பீடுபெற ,வாழிய நீடு.!

4 comments:


  1. காலத்தை வெல்லும் வாழ்வு - நீதி நேர்மை உண்மை அணிந்து
    சமூகத்துக்காக தன்னை அர்பணித்து வாழ்கின்ற பெரியார்கள்
    அழியார் பொன்னாமைத் தோடு போன்று எந்நாளும் வாழ்கிறார்கள்.
    அந்த தோடைத்தான் உவமையாக குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  2. மீள் பதிவாக்கி சிறப்பித்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வலைப்பதிவர் கூட்டத்தில் தாங்கள் வழங்கிய நூல் புது தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இயங்கும், தீரர் சத்திய மூர்த்தி நூலகத்தில் நேரடியாகச் சேர்க்கப்பட்டுவிட்டது. அதெ புத்தகம் மீண்டும் கிடைக்குமா என்பது தெரியவில்லை. மின்னஞ்சல் முகவரி இன்மையால்.

      Delete
  3. புத்தகம் வேண்டுமெனின் முகவரி அனுப்புங்க எத்தனை வேண்டுமானாலும் அனுப்புகிறேன். விலை போடவில்லை ஆதலால் விற்பனைக்கு கொடுக்கவில்லை.

    ReplyDelete

Kindly post a comment.