Friday, August 10, 2012

மதுரை அருகே பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு "சீல்' ! 40 குவாரிகளில் விதிமீறல்கள்?



First Published : 
10 Aug 2012 03:06:48 AM IST
நன்றி: தினமணி
மதுரை, ஆக. 9: மதுரை மாவட்டம், மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் "சீல்' வைக்கப்பட்டது
.
 மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு, கீழையூர், செம்மினிப்பட்டி, இ.மலம்பட்டி, அம்மன்கோவில்பட்டி, மேலப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் பாசனக் கண்மாய்கள், ஓடை புறம்போக்கு நிலங்கள், வண்டிப்பாதைகள், பாறைகளில் அனுமதி இன்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்துச் சென்றதில், தமிழக அரசுக்கு சுமார் ரூ.16,000 கோடி வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிக்கை அளித்தது
.
 இதன்பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா 18 குழுக்களை அமைத்து கிரானைட் குவாரிகளை ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். இதுதெரியவந்ததும் தடயங்களை மறைக்கும் முயற்சியில் கிரானைட் அதிபர்கள் ஈடுபட்டனர். பெரும்பாலான சட்ட விரோதக் குவாரிகளை கழிவுக் கற்கள், மண்ணைக் கொட்டி மூடினர். இதையடுத்து, நவீன ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களின் அளவுகளைத் துல்லியமாகக் கணித்து வருகின்றனர்.


 மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் மதிப்பிட்ட ரூ. 16,000 கோடி போல 5 மடங்கு மதிப்புள்ள கிரானைட் கற்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆய்வுப் பணிகளைச் செய்துவரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


 நிறுவனத்துக்கு "சீல்': அரசு நிலங்களில் கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டியெடுக்கப்பட்டு, கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தொழிற்சாலை மற்றும் குவாரிகளில் பணிபுரிந்த 21 ஊழியர்களை போலீஸôர் புதன்கிழமை கைதுசெய்து விசாரித்தனர். இவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக் காவலில் வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் கனிமத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் தெற்குத்தெருவிலுள்ள பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன அலுவலகத்துக்கு வியாழக்கிழமை "சீல்' வைத்தனர்.

கிரானைட் நிறுவனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சீலிடும் பணி முடிந்து வெளியேவந்த ஆட்சியரை வழிமறித்த தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்புக்கு வழிசெய்யுமாறு ஆட்சியரிடம் கோரினர். அவர்களை அலுவலகம் வந்து சந்திக்குமாறு ஆட்சியர் தெரிவித்தார்.  இந்த நிறுவனம் கிரானைட் கற்களை மெருகூட்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தது.


 சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இத் தொழிற்சாலை இயங்கிவந்தது. இந்தப் பகுதியில் இருந்த சில குளங்களும் மூடப்பட்டுவிட்டன.


 பி.ஆர்.பி. நிறுவன இயக்குநர்கள் பி.ஆர்.பழனிச்சாமி, இவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் மகராஜன் ஆகியோர் மீது இ.மலம்பட்டி, கீழையூர் சி.சி. கண்மாய் உள்ளிட்ட இடங்களில் அனுமதி இன்றி கிரானைட் கற்களை வெட்டிக் கடத்திதாகவும், தடயங்களை மறைக்கும் வகையில் கிரானைட் வெட்டிய பள்ளங்களை மண்ணைக் கொட்டி மூடியதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பி.பழனிச்சாமி மற்றும் அவரது மகன்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளனர்.

 இம் மனுக்கள் மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.


 40 குவாரிகளில் விதிமீறல்கள்?

 மதுரை மாவட்டத்தில் விதிமீறல்கள் குறித்து 175 கிரானைட் குவாரிகளில் தொடர்புடைய அனைத்து துறைகள் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில், விதிமீறல்கள் உறுதி செய்யப்படும் கிரானைட் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.


 மதுரை அருகே தெற்குத் தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் ஏற்றுமதி நிறுவனத்தில் ஆட்சியர் வியாழக்கிழமை ஆய்வு நடத்திய பிறகு அவர் கூறியதாவது
:
 மதுரை மாவட்டத்தில் 175 கிரானைட் மற்றும் கனிமவளக் குவாரிகள் உள்ளன. இவற்றில் ஒரு வாரமாக ஆய்வுகள் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக, 40 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அதிகபட்சமாக விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்ட 20 கிரானைட் குவாரிகள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


 தொடர்ந்து அனைத்து குவாரிகளிலும் சுற்றுச்சூழல், மின் துறை, கனிமத் துறை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அரசுத் துறையினரும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வுகள் முடிவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும். ஆய்வுகள் முழுமையாக முடிக்கப்பட்டவுடன் ஆய்வு அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும் என்றார்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.