Sunday, July 8, 2012

மொழிகளை இணைத்த பாலம்! -தினமணி !First Published : 08 Jul 2012 12:00:00 AM IST

புதுச்சேரி, பிரெஞ்சு கான்சல் ஜெனரல் அலுவலகத்தில், ரம்மியமான ஒரு மாலைப் பொழுதில், உலகக் கவிஞர்களால் நவீனக் கவிதையின் தந்தை' என்று போற்றப்படும் ஷார்ல் போத்லெர் எழுதிய கவிதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பிரெஞ்சு மொழி பேசக்கூடிய சிலரும், பிரெஞ்சு மொழியோடு தமிழும் சரளமாகப் பேசக்கூடிய சிலரும் கூடியிருந்தனர்.


நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகித்த, பிரெஞ்சு கான்சல் ஜெனரல் பியர் ஃபுர்னியே பேசத் தொடங்கும் முன்னரே, அவருக்கு மொழிபெயர்ப்பாளராக வந்த ஸ்ரீராம், இந்த நிகழ்ச்சி தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளின் சங்கமம் என்பதால், இங்கு ஆங்கிலம் இருக்காது. தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே இங்கு பேசப்படும் என்பதை அறிவிப்பாகவே வெளியிட்டார்
.
பியர் ஃபுர்னியே பேசுவதை, ஸ்ரீராம் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஃபுர்னியே, கவிதைகள் வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பயணங்களின் போது மிக அருகே கவிதைகளை வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை கூட நூல்கள் இல்லாமல் பயணித்ததில்லை. மரபு சார்ந்த, சிற்றிலக்கியங்களை மனப்பாடமாகப் பயில வேண்டும் என்பதை வலியுறுத்துவேன். இது ஒருவரது நினைவாற்றலை நன்கு வளர்க்க உதவும்
.
மரபு கவிதைகளின் சந்தம், எதுகை மோனை என எதிலும் வடிவம் மாறாமல், தமிழில் வெளிவந்திருக்கிறது. அது கவிதைக்கு தனி சக்தி அளிக்கிறது. போத்லெர், ரேம்போ ஆகியோர், பிரெஞ்சு மொழியில் குறிப்பிடத்தக்க இரு கவிஞர்கள். இதில் போத்லெரின் புரட்சிகரமான கவிதைகளை மக்கள் அன்றிலிருந்து இன்றுவரை, பள்ளிகளில் கூட படித்து வருகிறார்கள். இதுபோன்ற கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.


இந்த நூலின் ஆசிரியர் ஷார்ல் போத்லெர், 1821 முதல் 1867 வரை வாழ்ந்த கவிஞர். 20ம் நூற்றாண்டில் தோன்றிய முக்கிய இலக்கிய இயக்கங்களின் மூல நூலாகக் கருதப்படும் "தீமையின் மலர்கள்' எனும் தொகுப்பு, 1857 ஜூன் 25-ம் தேதி வெளியாயிற்று. இதன் தமிழாக்க நூல் முதல் முறையாக இப்போது (2012 ஜூன் 25-ல்) வெளியிடப்பட்டுள்ளது.


இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்த குமரன் வளவன், காரைக்காலில் பிறந்து, பிரான்ஸில் கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று, பாரிசில் நாடகக் குழுவில் நடிகனாகப் பங்கேற்று, 19 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியவர். பிரெஞ்சு மொழியில் 3 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், தமிழில் வெளியிடும் முதல் மொழிபெயர்ப்பு நூல் இது
.
தமிழ் நூல்களை பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்க அவ்வளவாக ஆர்வம் இல்லையே என்று கேட்டபோது, பிரெஞ்சு நூல்களை மொழிபெயர்க்க அந்நாட்டு அரசு உதவுகிறது. கான்சல் ஜெனரல் உதவியோடு இந்நூலை 2 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால், தமிழ் நூல்களை பிரெஞ்சு மொழிக்கு மாற்றுவதற்கு உதவி செய்ய எவரும் இல்லை
.
இந்நூலை பிரெஞ்சு கான்சல் ஜெனரல் பியர் ஃபுர்னியே வெளியிட, ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி பெற்றுக் கொண்டார். விழாவில் பங்கேற்ற தமிழக எழுத்தாளர் இமயம், அரசியல் கோஷங்களில் இருந்து விடுபட்ட எழுத்தாளராகத் தான் மாறியதற்குக் காரணம், பிரெஞ்சு எழுத்தாளர்களின் நூல்களே என்று குறிப்பிட்டார். இந்நூலை பதிப்பித்த க்ரியா பதிப்பகம் சார்பில் ஆசைத்தம்பி கலந்து கொண்டார்.


தமிழிலிலும், பிரெஞ்சு மொழியிலும் எழுதப்பட்ட ஷார்ல் போத்லெர் கவிதைகளை உடலெங்கும் ஒட்டியபடி வந்த தமிழக இளைஞர் கார்பிஷ் பல்பானோ, அவற்றை இரு மொழிகளிலும் வாசித்துக் காட்டினார்.


இவரைத் தொடர்ந்து வந்த மற்றொரு தமிழ் இளைஞர் வசந்த் செல்வம், ஷார்ல் போத்லெர் கவிதைகளை மனப்பாடமாக தமிழில் ஒப்பிக்க, பிரெஞ்சு பெண்மணி ஷெபில் அதை பிரெஞ்சு மொழியில் வாசித்துக் காட்டினார். இருவரும் ஒரே நேரத்தில் இரு மொழிகளில் கவிதைகளை வாசித்துக் காட்டியது, இரு மொழிகளின் சங்கமத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.


ஒரு நூல் வெளியீட்டு விழாவாக இருந்தாலும், இது பிரெஞ்ச் மற்றும் தமிழ் மொழிகளை இணைக்கும் ஒரு பாலமாகவே இருந்தது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.