Monday, June 25, 2012

என்னோட நியூயார்க் வந்துடும்மா..உண்மை நிகழ்ச்சி!


ஏமாற்றுதல், மோசடி, நயவஞ்சகம் முதலான பல குற்றங்கள் புரிந்ததுதடன் பெற்றதாயின் மனத்தைக்    கொலை செய்த பாவி இருக்கும் ஊரிலும் பணியாற்றும் இடங்களிலும் இத்தகவலைப் பரப்புங்கள். இக் கொடுமையை நினைக்கும் பொழுது ஒன்றும் எழுத வரவில்லை. வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! த்தைக் காப்போம்! /
katnagaraj
[பட உதவி: கூகிள்]
புது தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் T3 ஓய்விடத்திலிருந்த இருக்கையில் சரிந்து அமர்ந்திருந்தார் அந்த வயதான பெண்மணி. வாழ்வில் பெற்ற அனுபவங்கள் வரிவரியாக சுருக்கங்களை அவரது தோலில் ஏற்றியிருந்தது. பலவித நாடுகளிலிருந்து வந்த/செல்லும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு நடுவே இந்தப் பெண்மணி எங்கே பயணம் செய்யக் காத்திருக்கிறார்? அவரது மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள்தான் என்ன? பார்ப்போமா?


“அப்பாடி…. எவ்வளவு வருடங்கள் ஆயிற்று இப்படி நிம்மதியாய் உட்கார்ந்து. வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஓடி ஓடி, மணமுடித்து, “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என ஒரு மகனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி என ஓட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஒரு வருடமா, இரண்டு வருடமா, கடந்த 72 வருடங்களாக ஓடிட்டே தான் இருந்திருக்கேன்
….
ஆச்சு, ஒரே பையனும் கல்யாணம் பண்ணி நியூயார்க்-லயே செட்டிலாயிட்டான். ஆனாலும் எனக்கென்னமோ இந்த தில்லியை விட்டு போகணும்னு நினைச்சுக்கூட பார்க்கமுடியல. வயசு தான் ஏறிட்டு போகுதே, எப்படி தனியாக இருக்க முடியும்னு அப்பப்ப மனசுல தோணிட்டே இருந்தாலும், ஏனோ போக மனசு வரல. ஆனா இந்த ஒரு வருஷமா உடம்பு ரொம்பதான் படுத்துது. எவ்வளவு நாள் தான் ஓட முடியும், என்னிக்காவது ஒரு நாள் உட்கார்ந்து தானே ஆகணும்.

இப்படி ஒரு நாள் உடம்பு சரியில்லாம பக்கத்து வீட்டுக்காரங்க துணையோட ஆஸ்பத்திரி போன போதுதான் என் பையன் அமெரிக்காவிலிருந்து ஃபோன் பண்ணான். “ஏம்மா, இன்னும் எத்தனை நாள் தான் தனியா கஷ்டப்படுவே, இங்கேயே வந்துடேன்னு” கூப்பிட்டான். உடம்பு சரியில்லாத கஷ்டத்திலேயே சரின்னு சொல்லிட்டேன்.

அவனும் அங்கே இருந்தே, இன்டர்னெட் மூலமா நான் இருந்த எங்க சொந்த வீட்டை விக்கிறதுக்கும், பாஸ்போர்ட், விசா, எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டு, என்னை அழைச்சிட்டுப் போக ஒரு மாசம் முன்னாடி வந்தான். எல்லா வேலையும் கடகடன்னு முடிச்சு, இதோ இங்கே ஏர்போர்ட் வரைக்கும் வந்தாச்சு, அடுத்து நியூயார்க் தான்.”

அவரோட எண்ண ஓட்டத்தை தடை செய்யறமாதிரி, பாதுகாப்பிற்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரர், அந்தப் பெண்மணியை “மாதாஜி ரொம்ப நேரமா இங்கே உட்கார்ந்து இருக்கீங்களே, ஏதாவது உதவி வேணுமா?”ன்னு கேட்டார். அட பழைய நினைவுகளில் மூழ்கியதில் நேரம் போனதே தெரியலையேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டே, “என் பையனோட நியூயார்க் போகக் காத்திருக்கேன், உள்ள போய் போர்டிங் பாஸ் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வரேன்னு போயிருக்கான், இப்ப வந்துடுவான்”_னு சொல்ல, அவர் விடாம “உங்க பையன் பேர் சொல்லுங்கம்மா, நான் விசாரிச்சு சொல்றேன்னு” பேர் கேட்டுட்டு உள்ளே போனார். 

[பட உதவி: கூகிள்]
உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து வந்த போலீஸ்காரர் முகத்தில் ஒரு வித அதிர்ச்சியும், அயர்ச்சியும். ”ஏம்மா, நல்லாத் தெரியுமா, உங்க பையன் உங்களுக்கும் டிக்கெட் வாங்கி இருக்காரான்னு?, ஏன்னா அவர் ஒரு மணி நேரம் முன்பு கிளம்பின நியூயார்க் விமானத்திலே போய்ட்டாரே…”  ன்னு சொன்னதைக் கேட்ட பெண்மணிக்கு மாத்திரமல்ல, நமக்கும் அதிர்ச்சி.

அந்த வயதான பெண்மணிக்கு உட்கார்ந்திருந்தாலும், தரை கீழே நழுவி உள்ளே விழுந்துவிட்டது போன்ற உணர்வு.  “நல்லா விசாரிச்சீங்களா, என் பையன் அப்படி எல்லாம் பண்ண மாட்டானேன்னு” கேட்க, ”நல்லா விசாரிச்சேம்மா, அந்த விமானத்துல அவருக்கு மட்டும் தான் டிக்கெட் வாங்கி இருக்காரு, உங்களுக்கு வாங்கவே இல்லை, விமானம் போயிடுச்சேம்மா” என்று சொல்லி, ”உங்களுக்கு வீட்டுக்கு போகணும்னா சொல்லுங்க, வண்டி ஏற்பாடு பண்ணித் தரேன்னு” சொல்லியிருக்கார்.

இத்தனை வருடம் கஷ்டப்பட்டு, வளர்த்து ஆளாக்கி விட்ட மகன் பணத்திற்காக இப்படிச் செய்வான்னு எதிர்பார்க்காத அந்த பாட்டி அதிர்ச்சியில் அங்கேயே மயங்கிச் சரிந்தார். செல்வதற்கு வீடும் இல்லாமல், கையில் பணமும் இல்லாது என்ன செய்ய முடியும் அந்த மூதாட்டியால்? 

பணத்திற்காக பெற்ற தாயையே இப்படி நட்டாற்றில் விட்டுச் சென்ற அவலம் இந்தத் தலைநகர் தில்லியில் உண்மையாகவே நடந்தது. வடக்கு தில்லியில் நிறைய அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒன்றில் இருந்த ஒரு பெண்மணிக்கு நேர்ந்த கதி இது. விஷயம் கேள்விப்பட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த சில பெரியவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து வந்து மேற்கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தார்கள். இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெற்ற தாயை இப்படி நடுத்தெருவில் விட்டுப்போன அந்த படுபாவியை என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.
மீண்டும் சந்திப்போம்…
வெங்கட்.
புது தில்லி.


0 comments:

Post a Comment

Kindly post a comment.