Sunday, June 24, 2012

ஊழலின் ஊற்றுக்கண்! செ. மாதவன் முன்னாள் அமைச்சர்


‘President’ பகுப்புக்கான தொகுப்பு


http://bsubra.wordpress.com/category/president/

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008
ஊழலின் ஊற்றுக்கண்!
செ. மாதவன், முன்னாள் தமிழக அமைச்சர் .
சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.
அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.
ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது.

ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது.

அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.


உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது.

ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.
அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது.

இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.
அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும்

காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.
நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும்.

நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.


(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்) 

0 comments:

Post a Comment

Kindly post a comment.