Sunday, June 10, 2012

காவிரிப் படுகையில் இயற்கை வாழ்வியல் மையம் !



First Published : 10 Jun 2012 12:00:00 AM IST
10-06-2012

உணவுப் பொருள்களை சமைக்காமல் சாப்பிட்டால் அது உடலுக்குச் எல்லாவிதமான சத்துகளையும் கொடுக்கவல்லது என்கிறார்கள் "சங்கமம்' இயற்கை நல வாழ்வு மையத்தில் பயிற்சியளிப்போரும், பயிற்சி பெறுவோரும்.அப்படியென்ன இங்கே சொல்லித் தருகிறார்கள்? 

திருச்சியிலிருந்து கரூர் நெடுஞ்சாலையில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், பெருகமணி காவிரிப் படுகையில் உள்ளது கப்புச்சின் சகோதரர்களின் "சங்கமம் - இயற்கை வாழ்வியல் மையம்'.இயற்கை எழில் மிகுந்த காவிரிப் படுகை நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது. அத்துடன் அவர்கள் கொடுக்கும் உணவு நம்மை இன்னும் கூடுதலான ஆச்சரியத்தில் மூழ்கச் செய்கிறது.

தினமும் ஒவ்வொரு வேளை உணவிலும் பலாப்பழம், பேரீச்சம்பழம், தேங்காய் கீற்றுகள், கேரட், மாங்காய், வெள்ளரிக்காய் போன்றவை "சைடு டிஷ்'. முட்டைகோஸ், கேரட், புடலங்காய், செüசெü, மாங்காய் போன்றவற்றை பொடித் துண்டுகளாக நறுக்கி உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித் தழைகளைக் கலந்தால் "காய்கறிக் கலவை' தயார். வேகவைத்து, தாளித்து நாம் அன்றாடம் தயாரிக்கும் கூட்டு பொறியலை விஞ்சுகிறது 

இந்தப் பச்சைக் கலவை.இதேபோன்ற காய்கறிக் கலவையில் முட்டைகோஸ் இதழ்களைச் சுற்றினால் இயற்கையான "ஸ்பிரிங் ரோல்' தயார்.இவற்றைத் தயாரித்து வரும் மல்லிகா கூறும் ரெசிபிகள் மேலும் மேலும் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. 

அடுத்த அதிரடி - "அவல் பிரியாணி'.அவலை சுத்தப்படுத்தி தேங்காய்ப் பாலில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் பட்டை, கிராம்பு, சோம்பு பொடித்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை கழுவி பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி கிண்டினால் அவல் பிரியாணி தயார்.

 "தம்' போடுவதற்கு கரி தேட வேண்டியதில்லை; ஆவி வரும்முன் விசில் போட வேண்டியதும் இல்லை!பிரியாணிக்கு பிரதானமான தயிர் பச்சடியும் உண்டு. இந்த பச்சடி தயிரில் இருந்து தயாரிக்கப்படுவதல்ல! தேங்காய்ப் பாலில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் சுவையான தயிர் தயார். 

அப்புறம் பெரிய வெங்காயம், கேரட்... இத்யாதிகளைச் சேர்த்தால் போதும்.அவலைப் பொடித்து தேங்காய்ப் பால், தண்ணீர், நாட்டுச் சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்தால் பாயசம் தயார். இவற்றை தலைவாழை இலையில் பரிமாறினால் "படாகானா' தோற்றுவிடும்

 "இயற்கை உணவு விருந்து'. எல்லாவற்றையும் நன்றாக மென்று சாப்பிட்டாலே போதும், உடலுக்குத் தேவையான சத்துகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தானாக வரும் என்கிறார்கள்.

இனி அங்கிருந்தவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:பயிற்சியாளர் மதுராந்தகம் ஸ்ரீராமுலு: புற்று மண் அல்லது பயிர் விளையாத களிமண்ணைக் கொண்டு உடல் நலக் குறைவு ஏற்பட்ட- குறிப்பாக வீக்கம், வலியுள்ள பகுதிகளில் குழைத்துப் பூசினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.இத்துடன், மண் குளியல், மண் புதையல் போன்ற சிகிச்சையால் உடல் முற்றிலும் புத்துணர்ச்சி பெறும். இந்த பிரபஞ்சத்தின் பஞ்சபூதங்கள்தான், இந்த உடலையும் ஆட்சி செய்கின்றன. அவற்றைக் கொண்டே நோய்களைத் தீர்க்கலாம். ஏதாவதொன்றின் அளவு குறையும் போதும் நோய்கள் ஏற்படலாம். சரியான விகிதத்தில் அதைப் பராமரிப்பதே இயற்கையான வாழ்வு

.பயிற்சியாளர் ரத்தின சக்திவேல்: காய்கறிகளை சமைக்கும் போது கெட்ட கிருமிகள் மட்டும்தான் அழிகின்றனவா? நல்லவையும் சேர்ந்து அழிகின்றன. சூரியன்தான் உலகின் பொதுவான கிருமி கொல்லி. சமைக்காத காய்கறிகளை 50 கிராம் சாப்பிடுவது என்பது, சமைத்த உணவு 500 கிராம் எடுத்துக் கொள்வதற்குச் சமம்.குழந்தை பிறந்த முதல் மூன்று நாள்களில் தாயிடமிருந்து கிடைக்கும் சீம்பால் மட்டுமே போதும், குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியும் தேவையில்லை

.பயிற்சியாளர் சிவகாசி மாறன் ஜி: சிவகாசியில் நான் நடத்தும் இயற்கை உணவகத்துக்கு சுமார் 300 வாடிக்கையாளர்கள் உள்ளனர். 

சங்கமத்தின் இயக்குநர் அருள்தந்தை ஜேக்கப்: ""பரபரப்பான சமுதாயத்தில் நம்முடைய பங்கு என்ன? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. புண்ணியதலங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் முதன்மையான பணி மரம் நடுவதே. வாழ்க்கை முறையை வடிவமைத்துக் கொள்வதில்தான், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதும் அடங்கியிருக்கிறது''

.கீதா வெங்கட்ராமன்: இங்கு இயற்கை உணவுக்கான பயிற்சியை நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் சென்னையைச் சேர்ந்த கீதா வெங்கட்ராமனுக்கு வயது 62. அவரது கணவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், வயது 71.இத்தனை வயதிலும் எங்களுக்கு ரத்த அழுத்தம் இல்லை, நீரிழிவு நோய் இல்லை என்று பெருமையுடன் கூறுகின்றார். வெளிநாட்டில் வசிக்கும் தங்களின் இரண்டாவது மகள் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கும் இயற்கை உணவு முறையை சொல்லித் தந்து வருவதாகக் கூறுகிறார்.

இம்மையத்தின் இயக்குநர் அருள்திரு ஜேக்கப், ஏறத்தாழ 1995 முதல் இயற்கை வாழ்வியல் முறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இங்குள்ள நாய்கள் கூட இயற்கையான உணவை மட்டுமே உட்கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த வளாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எளிய குடிசை வீடுகள் உள்ளன. இங்கேயே தங்கி இயற்கை உணவு மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கற்றுக் கொள்ளலாம். நாளொன்றுக்கு ரூ. 200 மட்டுமே கட்டணமாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துவிட வேண்டும். தொடர்ந்து யோகா, இயற்கை மருத்துவம், இயற்கை உணவு குறித்த வகுப்புகள்... இடையிடையே முன்பு பட்டியலிடப்பட்ட இயற்கை உணவு.வளாகத்தில் "பொன்மொழி'களைக் கொண்ட அட்டைகள் எழுதி தொங்கவிடப்பட்டுள்ளன.-


 - உமிழ்நீர் ஊட்டச்சத்து- 

குடல் சுத்தமே உடல் சுத்தம்-

நடப்பது கால்களுக்கு நன்மை-

 ஊறுகாய் தவிர்த்தால் ஊறு நேராது...

 நன்றிக்குறியோர் ;-10-06-2012 தினமணி ஞாயிறு கொண்டாட்டம் 

0 comments:

Post a Comment

Kindly post a comment.