Thursday, February 16, 2012

ஒய்மேக்ஸ் கோபுரங்கள் மூலம் கம்பியில்லா பிராட்பேண்ட் இணைப்புகள்!




சென்னை : கம்பியில்லா முறையில், பிராட்பேண்ட் இணைப்பு வழங்கும்,"ஒய்மேக்ஸ்' என்ற புதிய திட்டத்தை,சென்னை தொலைபேசி அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புறப் பகுதியில், கம்பி மூலம் "பிராட்பேண்ட்' இணைப்பு வழங்குவதில் பல சிரமங்கள் உள்ளன. இதை நிவர்த்தி செய்ய, நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் கம்பியில்லா முறையில், "பிராட்பேண்ட்' இணைப்பு வழங்கும், "ஒய்மேக்ஸ்' என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, சென்னை தொலைபேசி தலைமைப் பொது மேலாளர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை தொலைபேசி, பரிசோதனை முறையில் ஊத்துக்கோட்டையில், "ஒய்மேக்ஸ்' தொழில்நுட்பத்தில் கோபுரம் அமைத்து, 10 இணைப்புகளை வழங்கியது.

இப்பரிசோதனை முறை வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, உத்திரமேரூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், கும்மிடிப்பூண்டி, கேளம்பாக்கம் உட்பட 15 இடங்களில், "ஒய்மேக்ஸ்' கோபுரங்களைச் சென்னை தொலைபேசி அமைத்துள்ளது. இதன்மூலம், கம்பியில்லா முறையில் "பிராட்பேண்ட்' இணைப்பு வழங்க முடியும்.

தற்பொழுது கம்பியில்லா முறையில், "பிராட்பேண்ட்' இணைப்பை, வாடிக்கையாளர்கள் எளிதில் பெறலாம். . ஒரு கோபுரத்திலிருந்து 1100 ஒய்மேக்ஸ் இணைப்புகள் வழங்கப்படும்இந்த முறையில், இணைவதற்கான குறைந்தபட்ச சேவை கட்டணம், 220 ரூபாயிலிருந்து 7 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை பெறும் கருவிக்கான (மோடம்) கட்டணம் 2,800 ரூபாயிலிருந்து, 4,200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண கணக்கீட்டு முறையைக் கையாளுவதில் பல சிரமங்கள் ஏற்படுவதாக, வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது. இது விரைவில் சரிசெய்யப்படும். எல்லா "பிரவுசர்'களிலும் http://selfcare.sdc.bsnl.co.in இயங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த புதிய முறையைக் கையாளுவது எப்படி என்பது குறித்த விளக்கக் கையேடும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.