Tuesday, January 10, 2012

தமிழ் குருவிகளுக்கான கூடு

PageLines- tamilsunion.jpg

தமிழ் குருவிகளுக்கான கூடு

மதிப்பிற்க்குரிய தமிழ் த்வீட்டர்களே,

நம்மைப் பற்றி.. நமது Twitamils தளம் தமிழ் த்விட்டர்களுக்காக, ட்விட்டர் குறித்து எளிய தமிழில் விரிவாக விளக்கமாக அறிந்து கொள்வதற்காக 2011 ஆகத்து 15 ஆம் நாளன்று துவங்கப்பட்டது. இதற்கான முயற்சி, தமிழக மீனவர்களின் படுகொலையை கண்டித்து நாம் நடத்திய #TNfisherman இணைய இயக்கத்தில் இருந்து துவங்குகிறது. அம்முயற்சியில் தாம் நாம் தமிழ் குருவிகளின் ஒற்றுமையை முழுமையாக கண்டோம். ட்விட்டர் எனும் சமூக ஊடகத்தின் வல்லமையை உணர்ந்தோம். இது ஒற்றுமை ஒரு அக்கினிக் குஞ்சு. இந்த அணையாது பேணப்படல் வேண்டும், மேலும் பலர் இந்த சமூக வலைத்தளங்களை பற்றி அறிந்து ஆக்கப்பூர்வமான கருத்தொற்றுமைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அவை அனைத்தையும் குறித்து தமிழில் எழுத வேண்டும் என எண்ணினோம். அதுவே இத்தளத்தின் செயல் வடிவமாக உருப்பெற்றது.

“கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்கிற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழக்கத்தை அடிநாதமாக கொண்டோம். முதலாவது படியாக இந்த சமூக ஊடகங்களின் வழியே மக்கள் தமிழில் தொடர்பு கொள்ள செய்ய வேண்டும், நமக்கென தனித்துவமாக தமிழ் அடையாளம் வேண்டும். ஆதலால் தமிழில் எழுதும் வழிகள் அனைத்தையும் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட நண்பர்களின் உதவியின்,தேடலின் மூலம் தொகுத்தளித்தோம்.

இரண்டாவது படியாக சமூக ஊடகங்கள் குறித்த அறிவினை எளிய தமிழில் வழங்கிட இத்தளத்தின் மூலம் முயற்சிக்கிறோம். சமூக ஊடகங்களில் ட்விட்டர் தான் பயன்படுத்த மிக எளிமையாக இருப்பதினால், அதை குறித்து விரிவாக எழுத எண்ணியுள்ளோம். மேலும் ட்விட்டர் குறித்து தமிழில் எளிமையான கையேடு, காணொளிகள் வெளியிடவும் தயாரிப்பு செய்து வருகிறோம். சாதாரண அலைபேசிகளிலும் ட்விட்டரில் தமிழ் எழுதும் வழியினை ஆய்ந்து வருகின்றோம். ட்விட்டர் தளமானது அதன் சேவைகளை தமிழில் தர தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறோம். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மொழிபெயர்ப்பில் பங்கெடுக்கவும் ஆர்வம் கொண்டுள்ளோம்.

தமிழில் கீச்சுவதை எளிமைப்படுத்துவது, பரவலாக்குவது மட்டுமல்லாமல் , கீச்சர்களை ஒன்றிணைக்கும் வழியை செயல்படுத்த முயன்று வருகிறோம். முழு உரு பெற்றதும் விரைவில் அறிமுகப்படுத்துவோம்.

இம்முயற்சிகளுக்கான கருத்துருவாக்க விதை தோழர் @TPKD_ அவர்களால் வழங்கப்பட்டு, தோழர் @karaiyaan அவர்களின் ஊக்கத்தினால் ஊன்றப்பட்டு , தோழர்கள் @thamiziniyan @tamil ஆகியோரின் அயராத உழைப்பில் பேணப்பட்டு வளர்க்கப்படுகிறது. தளத்திற்கான TwiTamils (தமிழ் கீச்சர்கள்) என்ற பெயர் தோழர் @Shaiju_sgr அவர்களின் தேர்வாகும். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து பெருமரமாய் வளர்க்கலாம். ட்விட்டரை தமிழகத்தின் கட்டற்ற மற்றும் நம் அனைவருக்குமான பொது ஊடகமாக ஆக்கிடுவதன் அயராத முயற்சியில், தமிழ் கீச்சர்கள் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இத்தளத்திற்கு கட்டாயத் தேவை. இது தமிழ்க் குருவிகள் நாம் அனைவருக்குமான கூடு.


0 comments:

Post a Comment

Kindly post a comment.