Thursday, January 5, 2012

இந்திய தூதரக அதிகாரி மீது சீன வர்த்தகர்கள் வெறித் தாக்குதல்: நீதிபதி முன் நடந்த அக்கிரமத்திற்கு இந்தியா கேள்வி

பீஜிங்:இந்திய - சீன வியாபாரிகள் இடையேயான வழக்கு விசாரணை முடிந்து திரும்பியபோது, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, சீன வர்த்தகர்கள் பலர் சேர்ந்து தாக்கியதில், அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். நீரிழிவு நோயாளியான அவர், முதலுதவி செய்யாமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


ஓடிப்போன உரிமையாளர்:அங்கு செயல்பட்டு வந்த, "யூரோ க்ளோபல் டிரேடிங்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்த உரிமையாளர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி விட்டு, பணத்தைச் செலுத்தாமல், சீனாவை விட்டு ஓடிவிட்டார். அவர், ஏமன் அல்லது பாகிஸ்தான் நாட்டவராக இருக்கலாம் எனத் தெரிகிறது.


கைதான இந்தியர்கள்:இது குறித்து, சம்பந்தப்பட்ட சீன வர்த்தகர்கள், போலீசிடம் அளித்த புகாரின்படி, டிரேடிங் நிறுவனத்தில் பணியாற்றிய தீபக் ரஹேஜா மற்றும் ஷ்யாம் சுந்தர் அகர்வால் என்ற மும்பையைச் சேர்ந்த இந்தியர்கள் இருவரை, கைது செய்த போலீசார், தங்கள் காவலில் வைத்துள்ளனர். இருவரது குடும்பத்தினர், ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம், அவர்களை விடுவிக்கும் முயற்சியில் இறங்கினர்.


பேச்சுவார்த்தை:இதையடுத்து, ஷாங்காய் இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரியான எஸ்.பாலச்சந்திரன், 46, சீன வர்த்தகர்களுடன், இவு கோர்ட் மூலம் பேச்சு நடத்தி வந்தார். கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி, இந்தப் பேச்சுவார்த்தை, இவுவில் உள்ள கோர்ட்டில் நடந்தது. ஐந்து மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், பாலச்சந்திரன், இரு இந்திய வியாபாரிகளையும் அழைத்துக் கொண்டு செல்ல முயன்றார்.


சரமாரி தாக்குதல்:ஆனால், அவர்களைப் பிடித்துக் கொண்ட சீன வர்த்தகர்கள் பலர், போலீஸ் மற்றும் நீதிபதி கண் முன், பாலச்சந்திரனை சரமாரியாக அடித்தனர். பலமாக தாக்கப்பட்டதால் பாலசந்திரன் மயக்கமடைந்து விழுந்தார். நீரிழிவு நோயாளியான அவருக்கு முதலுதவி கூட செய்யாமல், பட்டினி போட்டுள்ளனர்.


மன்னிப்பு கோரிய அதிகாரிகள்:சிறிது நேரம் கழித்து உள்ளூர் அதிகாரிகள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு, பாலச்சந்திரனை கொண்டு சென்றனர். நடந்த சம்பவத்திற்கு, பாலச்சந்திரனிடம் அதிகாரிகள் மன்னிப்பு கோரினர். இதற்கிடையில், போலீஸ் விசாரணையில் இருந்து விடுவித்த பின்பும் கூட, சீன வர்த்தகர்கள் தங்களைத் தாக்குவரோ என்ற பயத்தில், இரு இந்தியர்களும் தொடர்ந்து போலீஸ் காவலிலேயே உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, பாலச்சந்திரன் உடல்நிலை தேறியிருப்பதாக, ஷாங்காய் இந்தியத் தூதர் ரிவா கங்குலி தாஸ் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் இவுவில் சகஜம் தான் என, அங்குள்ள இந்திய வர்த்தகர்கள் சிலர் தெரிவித்தனர்.


இந்தியா கண்டனம்:இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இச்சம்பவத்தில், அவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்படவில்லை. நீரிழிவு நோயாளியான அவருக்கு ஆறு மணி நேரமாக உணவு கூட வழங்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள சீன துணைத் தூதரை அழைத்த மத்திய அரசு, இவு நகரில் இந்திய தூதரக அதிகாரியை இழிவுபடுத்தியது தொடர்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர.

0 comments:

Post a Comment

Kindly post a comment.