Sunday, January 22, 2012

கறுப்புப் பணத்தை மீட்கப் புதிய வழிமுறை: தொண்டு நிறுவனக் கூட்டமைப்பு பரிந்துரை

கிராமப்புற தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஎன்ஆர்ஐ), கறுப்புப் பணத்தை மீட்க புதிய வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளது. கறுப்புப் பணம் குறித்து அரசுக்கு துப்பு தரும் புதிய சமூக ஊழியர்களை உருவாக்க வேண்டும் என்று அந்த கூட்டமைப்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

முன்னாள் வர்த்தக அமைச்சரும், கூட்டமைப்பின் தலைவரான மோகன் தாரியா, மத்திய நிதியமைச்சருக்கு இது தொடர்பான ஆலோசனைகளை அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தது: அடுத்த நிதியாண்டிலிருந்து கணக்கில் வராத பணம் மற்றும் கறுப்புப் பணம் பற்றி அரசுக்கு துப்பு கொடுக்கும் தகவலாளிகளை அரசு உருவாக்க வேண்டும்.

அவர்களை சமூக ஊழியர்களாக அரசு அறிவிக்க வேண்டும். கண்டறியப்படும் பணத்தில் 10 சதவீதத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும். மேலும், பணம் பதுக்கி வைத்திருப்பவர்களை தேசத்தின் எதிரிகளாக அரசு அறிவிக்க வேண்டும். அவர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்வதோடு, அவர்களுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளிக்க வேண்டும்.

சுமார் ரூ. 20 லட்சம் கோடி, கறுப்புப் பணமாகவும், வெளிநாட்டு வங்கிகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதை மீட்டால் பல கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற முடியும். இதைப் பார்க்கும்போது அரசுக்கு நிதிப் பற்றாக்குறையும், கடன் தொல்லைகளும் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை.

இந்த தேச எதிரிகளை துரிதமாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடைய இடைவெளி அதிகரித்து வருவதற்கு திட்டக் குழுவும், மத்திய, மாநில அரசுகளும்தான் காரணம். இந்த வேறுபாட்டை குறைக்க மிகுதியான சொத்துகளுக்கு ஆடம்பர வரி விதிக்க வேண்டும்.

3 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான கட்டடப் பகுதிகளுக்கு, ஒரு சதுர அடிக்கு ஐந்து ரூபாய் வரி விதிக்கலாம். 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் நிலமாக வைத்திருந்தாலும், சதுர அடிக்கு ரூபாய் ஐந்தை வரியாக விதிக்கலாம். 5 லட்சம் பேருக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கு இந்த வரியை விதிக்கலாம். அதைப்போலவே அனைத்து ஆடம்பர பொருள்களுக்கும் செல்வ வரி விதிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் விதிக்கப்படும் இந்த வரியால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், உலக வெப்பமயமாவதை கருத்தில் கொண்டு இந்திய நிலங்களை முறையாக பயன்படுத்துவதற்கும், வேளாண்மை உற்பத்தியை பெறுக்குவதற்கும் ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார்.

மோகன் தாரியா திட்ட குழுவின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தவர். ஊரக வளர்ச்சி மற்றும் வனப் பெருக்கத்திற்கு அவரின் பங்களிப்பை பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் பாராட்டியிருந்தார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.