சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ வரலாற்று நாவலின் ஒரு பகுதியாகிய குற்றப்படம்பரை வரலாற்று நிகழ்வை அடிப்படையாக வைத்தே இப்படம் உருவாகியுள்ளது.
கவிஞர். எழுத்தாளர். இயக்கவாதி, அரசியல்வாதி, களப்பணியாளர். ஆய்வாளர், பேச்சாளர் என பன்முக ஆற்றல் பொருந்தியவர் எழுத்தாளர் சு. வெங்கடேசன். அரசியலுக்கு வரவிரும்பாத எழுத்தாளர்கள் மத்தியில் அரசியலில் இருந்து சிறந்த எழுத்தாளராகப் பரிணமித்திருப்பவர் எனப் பாராட்டப்பட்டிருப்பவர்.
அரவான் படத்தின் திரைகதையை சு.வெங்கடெசனே எழுதியிருகிறார். இவருக்கு இந்த நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது கிடைத்து இருகிறது. ஜெயகாந்தன் 38 வயதில் சாகித்ய அகாடமி விருது வாங்க்கியுள்ளார். அதேபோன்று 38 வயதில் சாகித்திய ஆகாடமி விருதுக்கான நூலை எழுதியுள்ளார் வெங்கடேசன், இது அவரது கடுமையான உழப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அரவான் படத்துக்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்து விட்டது.
இனி காவல்கோட்டம் நாவலைப்பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம். வெள்ளையருக்கு அடிமைப்பட்டிருக்கும் மக்கள், அரசியல் - பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுப் போராட்டங்களை மேற்கொள்வது இயல்பு. இத்தேடலின் அடிப்படையிலேயே ‘காவல் கோட்டம்’ எனும் வரலாற்று நாவல் உருப்பெற்றுள்ளது.
பெரும்பாலும் தமிழில் வரலாற்று நாவல்கள் நந்திவர்மன் முதல் திருமலை நாயக்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமிட்டே எழுதப்பட்டுள்ளன. இதற்கு மாறான ஒரு போக்கை உருவாக்கிய மாதவையா, பிரபஞ்சன் ஆகியோரது போக்குகளின் ஊடே பயணித்து 1048 பக்கங்களைக் கொண்ட ‘காவல் கோட்டம்’ எனும் வரலாற்று நாவலை சு. வெங்கடேசன் உருவாக்கியுள்ளார்.
மிஷனரிகளின் ஆவணங்கள், ஆவணக் காப்பகங்களில் உள்ள தரவுகள், வரலாற்று நூல்களின் தரவுகள், நேரடியாகக் கள ஆய்வுகளில் பெற்ற செய்திகள் என எல்லாத் தரவுகளும் இந்நாவலை உருவாக்க வழிவகுத்துள்ளன.
ஆறு நூற்றாண்டு காலப் பகுதியை மையமாகக் கொண்டு, அம்மக்களிடையே நிகழ்ந்த சமூக மாறுதல்களையும் மதுரையின் வரலாற்றை யும் பின்னணியாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி மாலிக்காபூரின் படையெடுப்பு, தெலுங்குச் சமூகத்தினர் தமிழகத்தில் காலூன்றியது, பாளையப்பட்டுகள் உருவான கதை, பிரித்தானியர்களின் ஆட்சி முறை, மதுரை கலெக்டராக பிளாக் பெர்ன் சேர்ந்து மதுரையின் சுற்றுக் கோட்டையை இடிப்பது, வைகை அணைக்கட்டுத் திட்டத்தின் செயலாக்கம் என நாவலின் தளம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
இந்நாவலின் இரண்டாம் பகுதி மேற்கூறிய வரலாற்று நிகழ்வுகளின் பாதிப்புகளின் ஊடே மதுரையைச் சுற்றிய ‘கள்ளர் சமூகம்’ பற்றியது. குறிப்பாக, தாதனூரில் வாழும் பிரமலைக் கள்ளர் சமூகத்தை மையமாகக் கொண்டே இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. காலனிய ஆட்சியில் பல பண்பாட்டு மாறுதல்கள் ஏற்படுவதும் பிரமலைக் கள்ளர்களைக் குற்றப்பரம்பரையினர் என்று இழிவுபடுத்தித் தம் கைரேகையைக் காவல் துறையிடம் பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுக் கொடூரமாக ஒடுக்கப்படுவதும் இந்நாவலின் முக்கிய நிகழ்வுகள்.
நாவலில் இடம்பெறும் ஆங்கிலேயர்கள் மற்றும் தாதனூர்க்காரர்களின் பாத்திரங்களை ஆசிரியர் அமுத்தமாகப் பதிவு செய்துள்ளார். வேட்டையின் நுட்பங்கள், போர், போர் முறைகள், வரிகள் பற்றிய செய்திகள் மற்றும் கள்ளர் சமூக அமைப்பு, குடும்ப உறவுகள் வகை யறாக்களின் தோற்றம், சாமிகளின் பிறப்பு, வழிபாடு, கவரடைப்பு என தாதனூர் கள்ளர் குறித்த இனவரைவியல் செய்திகளும் பதிவாகியுள்ளன.
வணிக வர்க்கத்தின் தோற்றம் வளர்ச்சி, நாடார் சமூகத்தின் வாணிப வளர்ச்சி, பறையர் மாணவர் படிக்க எதிர்ப்பு, சாதி இந்துக்களுக்கென்று தனிக்கல்லூரி, சிறைச் சாலை உருவாகுதல் எனச் சமூக நிகழ்வுகளை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்.
ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக காவல்துறை உருவாக்கப்பட்டுக் காவலர்கள் நியமனம் அதன் தொடர்ச்சியாகச் சீருடையும் பெல்ட்டும் அறிமுகமாகிறது. குறிப்பாக, பிராமணர்கள் அதை எதிர்கொண்ட முறைகள், சாஸ்திரத்தை முன் வைத்து பெல்ட் அணிவது தொடர்பான விவாதம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நாவலை அரசியல், சமூக வியல், இனவரைவியல் கண்ணோட்டங்களுடன் அணுகமுடியும்.
காலனிய தாக்குதலுக்கு உட்பட்ட, ஒரு சமூகத்தின் கடந்த கால வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாறே, வரலாற்று நாவலாக உருப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப் படுத்தத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் காலமும் களமும் வாசகனை நாவல் நிகழும் காலத்தை நோக்கிப் பயணிக்கச் செய்கிறது.
பத்தாண்டுக்கால உழைப்பில் உருவானதுதான் இந்தக் "காவல்கோட்டம்." இதை வரலாற்று நாவலென்றும், சமூக நாவலென்றும், இன்வரைவியல் என்றும் சொல்லலாம். தூங்காநகரமான மதுரை குறித்த 2500 வருட வரலாற்றைக் கண் முன்னே விரிக்கின்றது.
நகரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். கோபல்ல கிராமம் நினைவிற்கு வருகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக தகுதியான படைப்பு, உரிய நேரத்தில் கவுரவிக்கப்பட்டிருக்கின்றது. புத்தாண்டில் போற்றுவோம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.