Saturday, December 31, 2011

தாமிரவருணி ~ நூல் வெளியீட்டு விழா ~ தலைவர்கள் பேச்சு

பாசன மேலாண்மை வல்லுநர் திரு. பழ. கோமதிநாயகம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வறிக்கை நூல் தாமிரவருணி - சமூக – பொருளியல் மாற்றங்கள், அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளான நேற்று (29-12-2011) வெளியிடப்பட்டது.

தாமிரவருணி ~ நூல் வெளியீட்டு விழா ~ தலைவர்கள் பேச்சு

நாள் : 29-12-2011, வியாழக் கிழமை

இடம் : தேவநேயப் பாவாணர் அரங்கம், அண்ணா சாலை, சென்னை. (டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் அருகில்)

நேரம் : மாலை 5 : 30 மணி

பங்கேற்றோர் :

திரு. நல்லகண்ணு

திரு. வைகோ

திரு. பழ. நெடுமாறன்
மருத்துவர் வி.சீவானந்தம்

சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் 29.12.11 அன்று மறைந்த தமிழகத்தின் நீரியல் நிபுணர் பழ.கோமதிநாயகத்தின் தாமிரவருணி சமூக பொருளியல் மாற்றங்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது. நூல் வெளியீட்டிற்கு முன்பு பழ.கோமதிநாயகம் தியாகுவுடன் மக்கள் தொலைக்காட்சியில் சங்கப்பலகை நிகழ்சியில் பங்கேற்ற நிகழ்ச்சி திரையிடப்பட்டது. அதில் முல்லைப் பெரியாறு பிரச்னையைப் பற்றிய பலதகவல்களைக் கூறியிருந்தார். தோழர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். வைகோ வெளியிட பசுமை தாயகம் ஜீவா பெற்றுக்கொண்டார். பழ.நெடுமாறன் கருத்துரை வழங்கினார்.

பத்திரிகையாளர் பாண்டியராசன் வரவேற்புரை வழங்கினார். பழ.நெடுமாறன் அவர்கள் மதுரை திருவள்ளுவர் கழகத்துக்கு பழ.கோமதிநாயகம் நினைவு சொற்பொழிவு அறக்கட்டளைக்கான நிதியைகொடுத்து பின்னர் பேசினார்.

பழ.கோமதிநாயகம் இதே நாளில் 2009 ஆம் ஆண்டு எங்களைவிட்டு மறைந்தார். அவர் இறந்துவிட்டார் என்பதை எங்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அது முல்லைப் பெரியாறு பிரச்னையாக இருந்தாலும் சரி அது தமிழகத்தின் எந்த நதிநீர் பிரச்னையாக இருந்தாலும் சரி அதைத் அதைப்பற்றிய அறிவு நிறைய இருந்தது. 1979 ஆம் ஆண்டு கேரள அரசு முல்லைப் பெரியாறு பிரச்னையைக் கிளப்பிய போது கோமதிநாயகம் தந்த குறிப்பின்படி 1979ல் சட்டமன்றத்தில் நான் பேசினேன் அது சமூகத் தளத்திலும் அரசியல் பத்திரிகைகளில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. எங்கே நீர்பிரச்னை நடந்தாலும் அதைத் தீர்ப்பதற்காகவும் யாரை அனுகினால் அந்தப் பிரச்னை தீரும் என்று அணுகி பேசினார். அவர் ஒரு பொறியாளர் என்பதைத் தாண்டி சமூகத்தின் மீதான ஒரு அக்கறை இருந்தது.

அவருடைய தாமிரவருணி என்ற ஆய்வு நூல் தாமிரவருணியில் ஏற்பட்ட நீர் பங்கீடு சம்பந்தமான பிரச்னைகள், மோதல்கள் அதன் பாசன நிலங்கள் யார் யாரின் கைகளில் மாறி வந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள், சாதி மோதல்கள் என்று வெறுப்பு விருப்பு இன்றி சொல்லியிருக்கிறார்.

மறைந்த கோமதிநாயகம் என்னுடைய இளவல் என்பதற்காக சொல்லவில்லை. நமது தமிழகத்தின் நீரியல் நிபுணர்களில் சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

தம்பி பிரபாகரன் மதுரையில் எங்கள் வீட்டில் வந்து தங்கியிருந்த காலகட்டத்தில் எனது தம்பி படித்துக்கொண்டிருந்தார். பிறகு பிரபாகரன் இலங்கைக்கு சென்று தமிழீழத்தைக் கட்டமைத்த போது அங்கே எழுந்த நீரியல் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அங்குள்ள தமிழர்களுக்கு பயிற்சி அளிக்க தம்பியை அனுப்ப முடியுமா என்று கேட்டார். நான் கேட்டபோது எந்த மறுப்பு இன்றி சம்மதம் தெரிவித்தார். பிறகு அங்கு சூழல் சரியில்லை. என்று சொல்லி அந்த ஏற்பாடு தள்ளி வைக்கப்பட்டது. பிறகு சரியான சூழல் அமைந்த பிறகு கோமதிநாயகம் சென்று பயிற்சியளித்தார். வரும்போது தம்பி பிரபாகரன் நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் வந்து தாங்கள் ஆலோசனை தரவேண்டும் என்றும் முடிந்தால் நீங்கள் ஈழத்திலேயே தங்கிவிட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அப்படி தமிழீழத்திற்கும் ஆலோசனை வழங்கியவர் என்று உணர்ச்சி வசப்பட்டு தழுதழுக்க கூறினார்.

அடுத்து பேச வந்த பசுமைத் தாயகம் டாக்டர் ஜீவானந்தம் பேசியது.

உன்னதமான அறிவியல் சார்ந்த நீரியல் நிபுணர். எனக்கு கோமதிநாயகத்தை அய்யாவுடன் இருக்கின்ற காலத்திலிருந்து தெரியும். திருப்பூரில் நொய்யல் நதி செத்துப்போனது. திருப்பூர் முதலாளிகளின் டாலர் பேராசையால் ஒரு நதி சாக்கடையாக மாறியது. சாயப்பட்டறைகள் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலப்பதை நிறுத்த வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது இந்த பிரச்னையைப் பற்றி ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்த போது அதில் விவசாயிகளின் சார்பாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பாக முன்மொழியப்பட்டவர் பழ.கோமதிநாயகம் அவர்கள். எங்களோடு ஆலோசனைசெய்து எப்படி செய்யவேண்டும் என்னசொல்ல வேண்டும் என்பதை கூறி வழிநடத்தியவர். பிறகு திருப்பூர் முதலாளிகள் ஒரு ஆற்றை நஞ்சாக்கியதற்கு ஈட்டுத்தொகை தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிப்பப்பதற்கு காரணமானவர். அவரது நூலைப் பெற்றுக்கொள்வதில் பெருமையடைகிறேன் என்று கூறினார்.

அடுத்து பேசிய தோழர் நல்லகண்ணு அவர்கள்

பழ.கோமதிநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியின் போது அவருடைய தமிழகத்தின் தாகம் தனியுமா? என்ற நூலை வெளியிட்டோம். கோமதிநாயகம் ஆரம்ப காலத்தில் தியாகராய கல்லூரியில் இளங்கலை பொறியியலும் அண்ணா பல்கலையில் முதுகலையும் பொற்யியலும் பின்னர் அமெரிக்கா கொலரடா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் நீரியல் மேலாண்மை பட்டமும் பெற்றவர். நீரியல் அது ஏதோ தனிதுறை அல்ல அது சமூகத்தோடு தொடர்புடையது. நீர் எப்படி முறைப்படுத்த வேண்டும். நீரியலில் அவருக்கு ஒரு சமூகபார்வை இருந்தது. நான் அவர்களிடம் நேரடியாக பழகியதுண்டு. நதிநீர் தாவாக்கள் நமக்கு மேலோட்டமாகதான் தெரியும். ஆனால் அவர் அதன் எல்லா பிரச்னைகளையும் வரலாற்றையும் அறிந்திருந்தார்.

இந்த நூலுக்கு வா.செ.குழந்தைசாமியும் நீரியல் வல்லுநர் மோகனகிருட்ணனும் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த நூலில் சாதிகளைப் பற்றி சொல்ல வரும்போது ரொம்ப தைரியமாக விருப்பு வெறுப்பு இல்லாமல் சொல்லியிருக்கிறார்.

அவர் எழுதிய எழுத்து இன்றும் பயன்படக்கூடியதாக இருக்கிறது. தாமிரவருணி ஆற்றில் 13 அணைகள் இருக்கிறது. அதில் திருவைகுண்டம் அணை 1868 ல் கட்டப்பட்டது. அதில் மற்ற 7 அணைகள் பாண்டியர் நாயக்கர்கள் என பல்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. மருதூர் அணை 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கல்லணையைப் பற்றி One of the oldest dame in the world என்றும் உலகத்தில் வேறு எங்குமே இப்படி ஒரு தொழில் நுட்பத்தில் அணை கட்டப்படவில்லை என்றும் ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் மற்றும் கோல்ராசு என்பவரும் சொல்கிறார்கள். ஓடுகிற தண்ணீருக்கு அல் மணலில் பாறைகள் போடும்போது அதன் மீது மேலும் மேலும் போட்டு ஆழங்காண முடியாத இடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டு கட்டப்பட்டதுதான் காவேரி 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லனை அழியாமலிருக்கிறது. ஆனால் 1895ல் கட்டிய முல்லைப் பெரியாறு உடைந்துவிடும் என்று கேரளா அதை உடைத்துவிடப் பார்க்கிறது.

அடுத்து பேசிய வைகோ அவர்கள், பழ.கோமதிநாயகம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவருடைய நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அண்ணன் நெடுமாறன் உணர்ச்சிவசப்படுகிற இயல்பினர் அல்ல. ஆனால் தன்னுடைய இளவலின் இழப்பை 24 திங்கள் கடந்த பின்பும் தாங்க முடியாமல் மேடையில் தழுதழுத்தார். உலகத் தமிழர்களெல்லாம் தம்பி என்றைழைக்கப்பட்ட அந்த தம்பியிடம் தனது தம்பியை அனுப்பி வைத்திருக்கிறார். தான் கட்டமைத்த தமிழீழம் விளங்க வேண்டும் என்பதற்காக கணிப்பொறி தயாரிப்பதில் இருந்து வான்படை, கப்பல் என்று அனைத்தையும் உருவாக்கி உலகத்தில் இப்படி ஒரு நாடு இல்லை என்று சொல்ல வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார் தம்பி பிரபாகரன். அப்படியாக மலர இருந்த தமிழீழத்தை கருக்கிப்போட்டு சிங்களக்கொடியோனின் கைகளில் வல்லாண்மை மிக்க வல்லரசுகள் ஆயுதங்களைத் தந்து அந்தக் கனவை தற்காலிகமாக தகர்த்தார்கள். அதையும் தாண்டி தமிழீழம் மலரத்தான் போகிறது. அண்ணன் பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்தபோதுதான் கோமதிநாயம் அவர்களை நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன். தமிழ் மக்களுக்குத் திரட்டிய நிவாரணப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் வழங்க வேண்டும் என்று கூறி அதுவரை நான் உணவருந்த மாட்டேன் என்று சொல்லி உண்ணாவிரதம் இருந்தார். அப்போது இரண்டாவது மூன்றாவது நாட்களி தனது சகோதரனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கோமதிநாயகம் கண்கலங்கியதை நான் பார்த்திருக்கிறேன். கேரள அரசு யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப் போல முல்லைப் பெரியாறு அணையின் நீரை கேரளம் தடுத்து நிறுத்தி அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள். முல்லைப் பெரியாறு தமிழர்களின் உரிமை. அந்த நீரை தராமல் விவசாயம் செய்ய உனக்கு கழனி இருக்கிறதா. நிலம் இருக்கிறதா. இல்லை. அங்கிருந்து தண்ணீர் கிடைத்தால் நீங்களும் பசியாறலாம் நாங்களும் நன்றாக இருக்கலாம். என்ன செய்யப்போகிறாய். முல்லைப் பெரியாறு விஷயத்தில் உச்சநீதி மன்றமும் தன் கடமையை செய்யத் தவறிவிட்டது. கேரள அமைச்சர் ஜோசப் அணையை உடைத்து ரோடு போடவேண்டும் என்று கூறுகிறார். இன்று தமிழகம் கொதிநிலையில் இருக்கிறது. தனது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள தமிழகம் கிளர்ந்துவிட்டது.

உலகிலேயே உயர்ந்தது சகோதரபாசம்தான் இதிகாசங்களில் உதாரணம் சொல்கிறார்கள் பற்றி எரிகின்ற அரக்கு மாளிகையிலிருந்து தனது சகோதரர்களையும் தாயையும் தோள்மீது தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றியவன். மருது சகோதரர்கள் தங்கச்சி மடம் பற்றி நிறைய சொல்லலாம். சகோதரர் தம்பி கோமதிநாயகம் வாழ்ந்த நாட்களில் ஈழத்துக்கும் அவர் பங்காற்றியிருக்கிறார். எனவே அவர் தந்திருக்கிற நூலை வெளியிடுவது தமிழினத்திற்கு செய்கிற சேவை. இவை பயன் தருகின்ற நூல்கள். இதன் மூலம் மரணத்தை வென்று நம் நினைவில் நிற்கிறார் கோமதி நாயகம் என்று கூறி முடித்தார்.

1 comments:

Kindly post a comment.