Tuesday, November 8, 2011

அவல நிலையில் சைதை ஆசிரியர் கல்லூரி



டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை சைதாப்பேட்டையில் படித்த கல்வியியல் கல்லூரி.
சென்னை சைதாப் பேட்டையில் உள்ள ஆசிரியர் (கல்வியியல்) கல்லூரி இடிந்து விழும் நிலையில் உள்ளது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியிருக்கிறது. இது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1856-ல் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியாக சென்னையில் உருவெடுத்து, பின்னர் 1887-ல் ஆசிரியர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. இப்போது கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆசிரியர் கல்வியான பி.எட்., எம்.எட்., எம்.ஃபில். மற்றும் பி.எச்.டி. (ஆராய்ச்சி) படிப்புகளை இந்தக் கல்லூரி வழங்கி வருகிறது. 235 பேர் பி.எட். படிப்பையும், 35 பேர் எம்.எட். படிப்பையும், 12 பேர் எம்.ஃபில். படிப்பையும் படிக்கின்றனர்.

இந்தக் கல்லூரியில்தான் குடியரசின் முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்துள்ளார். பழமைவாய்ந்த கட்டடத்தில் இயங்கி வரும் இந்தக் கல்லூரிக்கு, அண்மையில்தான் 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகுப்பறைகளில் பி.எட். வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

எம்.எட்., எம்.ஃபில். வகுப்புகள் அனைத்தும் இடவசதி இல்லாததால் பாழடைந்த பழைய கட்டடங்களிலேயே நடத்தப்படுகின்றன. ராதாகிருஷ்ணனின் பெயரைத் தாங்கி நிற்கும் ஹால், பராமரிப்பின்றி மிகவும் மோசமாக உள்ளது. இந்த வகுப்பறையில்தான் ராதாகிருஷ்ணன் படித்ததாகவும், அதனாலேயே ஹாலுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த ஹாலில்தான் எம்.ஃபில். வகுப்புகளும், அவ்வப்போது எம்.எட். வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஹாலின் மூன்று புறங்களிலும் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும் வகையில் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் உடைந்துள்ளன. சாலையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த ஹாலில் வகுப்புகள் நடைபெறும்போது, வாகன இரைச்சலால் பாடங்களைக் கவனிக்க முடிவதில்லை என மாணவர்கள் புகார் கூறுகின்றனர். முன்னாள் முதல்வர் அண்ணா தலைமையில் அப்போதைய கல்வி அமைச்சர் இரா. நெடுஞ்செழியனால் திறந்து வைக்கப்பட்ட - தமிழ் சமூகவியற்பிரிவு - கட்டடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்தக் கட்டடத்தில் உள்ள வகுப்பறைகளின் மேற்கூரை பெயர்ந்துள்ளது. மழைநீர் வழிந்தோடுகிறது. இந்தக் கல்லூரி வளாகத்தில், 2 கட்டடங்கள் முழுவதும் பயன்பாட்டுக்கின்றி கைவிடப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடங்களுக்குள் பகல் நேரங்களிலேயே சிலர் மது அருந்துகின்றனர். "கல்லூரியில் கூடுதல் கட்டட வசதி தேவை என தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். மழைக் காலங்களில் கட்டடங்களின் நிலைமை மிகவும் மோசமடைகிறது. ஆசிரியர் அறைகளிலும் அவ்வப்போது மழை நீர் வடிகின்றது. கல்லூரிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் எளிதாக உள்ளே நுழைகின்றனர். கட்டடங்களைப் பராமரிப்பதில் பொதுப்பணித் துறை அக்கறை காட்டுவதில்லை' என்று வருத்தப்பட்டார் கல்லூரி அதிகாரி ஒருவர்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.