Saturday, November 19, 2011

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பு: 36 மாதம் சிறைத்தண்டனை



வெள்ளைக் கொடி வழக்கில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான தீர்ப்பு கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டடத்தில் அறிவிக்கப்பட்டது.

நீதிபதி தீபாலி விஜேசுந்திர தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்து வந்தது.இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபட்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா நேர் காணல் வழங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாதுகாப்புக் செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பெஞ்ச், சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதற்கு முன்னர் ராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.