Tuesday, October 11, 2011

WWW.INDIA.TAMILஎன்று அமைய என்ன செய்யவேண்டும்?

http://vinaiooki.blogspot.com



நம்முடைய வலைப்பூக்கள், இணையத்தளங்களின் கொற்றங்கள் (domain).com , .net, .in என அல்லாது .Tamil (உதாரணமாக www.india.com என்பதற்குப் பதிலாக www.india.tamil )என்ற வகையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நீங்கள் எண்ணியதுண்டா? ஆம் எனில் இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்.

சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமான பார்சிலோனாவில் இருந்து ஒரு நண்பரை நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது. சிலப்பல ஸ்பானிய மொழி வாக்கியங்களுடன் அவரைச் சந்திக்க தயாராக இருந்தபோது, தன்னை ஒரு கட்டலோனியன் (Catalonia) என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

வடகிழக்கு ஸ்பெயினின் தனியான சுதந்திர அந்தஸ்துடன் இருக்கும் ஒரு மாநிலம் கட்டலோனியா, கட்டலோனிய மொழிப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு அது. தனித்துவமான இன, மொழிகுழுக்கள் தேசியங்களாக மேலெழும்புவதைப் பார்ப்பது மனதுக்குப் பிடித்தமான ஒன்று ஆதலால், அவருடன் தொடர்ந்து பேசத்தொடங்கியபோது , நிறையப் பேருக்கு வெளியில் தெரியாத ஒரு விபரத்தைக் கூறினார்.


இணைய வெளி வரலாற்றில், மொழி மற்றும் கலாச்சாரக் கூறுகளின் அடிப்படையில் இணையத்தில் உயர்நிலைக் கொற்றதைப் பெற்றவர்கள் கட்டலோனியர்கள். ஆம், .cat என்ற உயர்நிலைக் கொற்றம் (TLD - Top level domain)கட்டலோனிய மக்களுக்காக 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. .cat கொற்றத்தின் வழியாக 50,000 க்கும் மேலான இணைய தளங்கள் கட்டலோனியன் மொழியில் செயற்பட்டு வருகின்றன.

2004 ஆம் ஆண்டு ICANN நிறுவனத்தால், உபயதாரர்கள் உயர்நிலைக் கொற்றங்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது, .asia, .jobs, .travel, .mobi ஆகியனவற்றுடன் .cat கொற்றத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது. ICANN என்பதின் முழுவடிவம், Internet Corporation for Assigned Names and Numbers, அதாவது இணைய தள முகவரிகள், எண்கள் வழங்குபவதை நிர்வாகிக்கும் உச்ச அமைப்பு.
இடையில் காதல்-கலவிக் கான இணையத்தளங்களுக்கான .xxx அனுமதி அறிவிப்புப்பிற்குப்பின்னர், இணைய வெளியின் மற்றும் ஒரு மறுமலர்ச்சித் திட்டமாக மேலதிக உயர்நிலைக் கொற்றங்களை அனுமதிக்கும் ஒரு திட்டத்தை ICANN ஆரம்பித்துள்ளது.



அறியாமை, முன்னெடுப்பு இல்லாமை, நிதிக்கட்டுப்பாடுகள், ஒருங்கிணைப்பு இன்மை என ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் தமிழுக்கான உயர்நிலைக் கொற்றம் பெறும் வாய்ப்பை 2004 ஆம் ஆண்டில் தவறவிட்டாலும், இந்த முறை ICANN அறிவித்து இருக்கும் gTLD கொற்றங்கள் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.

தனித்தமிழ் முன்னெடுப்புகள், திராவிட அரசியல் இயக்கங்கள், இளையராஜாவின் இசை, செயற்கை கோள் தமிழ் தொலைகாட்சி ஊடகங்கள், ஒருங்குக்குறி எழுத்துருக்கள் என தமிழுக்கு அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மறுமலர்ச்சிகளும், உணர்வூட்டங்களும் கொடுக்கப்பட்டு நீரில் அமுக்கப்பட்ட காற்றடைத்தப் பந்தைப்போல தமிழ் மேல் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் தமிழுக்கான கொற்றம் அருமையான வாய்ப்பு.

தேவையான முன்னெடுப்புகள்

1. கட்டலோனியர்களின் விண்ணப்பப் படிவத்தை ஆழ்ந்து வாசித்து, அதைத் தரவாக வைத்து தமிழுக்கென ஒரு விண்ணப்பத்தைத் தயார் செய்வது. கருத்தியல், அரசியல், நடைமுறைப்யன்பாடு முதலிய காரணங்களைக் காட்டி எழுந்த எதிர்ப்புகளுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பது பற்றிய ஆழ்ந்த வாசிப்பு. தமிழ் என வந்து விட்டால் சுண்டைகாய் பெறாத விடயங்களைக்கூட காரணம் காட்டி எதிர்ப்பார்கள். புதிய gTLD யில் கலாச்சார மொழிக்கான கொற்றங்கள் கொடுப்பதற்கு எதிர்க்கும் காரணங்களில் தமிழை ஒரு உதாரணமாக ஒரு வேளை தமிழ் தனக்கெனக் கேட்டால் இலங்கை அரசாங்கம் எதிர்க்குமே என விவாதங்களில் காட்டியுள்ளார்கள்.


கட்டலோனியர்களின் விண்ணப்பம் = http://www.icann.org/en/tlds/stld-apps-19mar04/cat.htm


விண்ணப்பத்தின் மீதான விவாதங்கள் - http://forum.icann.org/lists/stld-rfp-cat/

2. ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் / அரசாங்கங்கள் தமிழுக்கென தனி இடத்தை வாங்கும் திட்டம் வைத்து இருந்தால், அவற்றை ஒருங்கிணைத்து கூட்டாக முயற்சித்தால் பெரிய இடையூறுகள் இன்றி பெறலாம்.

3. ICANN நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய gTLD திட்டத்தின் கீழ் வர்த்தக நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், அரசாங்கங்கள், சமுதாய,கலாச்சர,மொழிக்குழுக்கள் என கொற்றங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

4. புதிய உயர்நிலைக் கொற்றங்களைக்கோரும் விண்ணப்பங்கள் ஜனவரி 12, 2012 ஆம் ஆண்டில் இருந்து ஏப்ரல் 12, 2012 ஆம் தேதிவரை ICANN பெற்றுக்கொள்ளும்.

5. உயர்நிலைக் கொற்றம் பெருவதில் மிகப்பெரும் வியாபர சந்தையும் இருப்பதால், இதற்கான விண்ணப்பக் கட்டணமும் மிக மிக அதிகம். சாமானிய மனிதனால் இந்த முன்னெடுப்பைத் தனியாக செய்ய இயலாது. நிறுவனங்கள், அரசாங்கங்கள் என கூட்டு முயற்சியில் மட்டுமே தமிழுக்கென தனிக்கொற்றம் வாங்க முடியும். தனிக்கொற்றம் பெற்று அதற்கான இரண்டாம் நிலை கொற்ற விற்பனை சந்தையினால், விண்ணப்பம் கோரும் நிறுவனம் அதற்கான சிறந்த வியாபரத்திட்டத்தையும் கையகத்தே வைத்திருத்தல் வேண்டும்.

6. விண்ணப்பத்திற்கான முன் வைப்புத் தொகை - 5000 அமெரிக்க டாலர்கள்
ஒட்டு மொத்த விண்ணப்பத் தொகை - 1,85,000 அமெரிக்க டாலர்கள்

7. இயல்பாக எழும் அடிப்படைக் கேள்விகளுக்கு இந்தக் கோப்பை வாசிக்கலாம் http://www.icann.org/en/topics/new-gtlds/gtld-facts-31jul11-en.pdf

8. விண்ணப்பத்தாரர்களுக்கான முழு வழிகாட்டி இந்த சுட்டியில் கிடைக்கும் http://www.icann.org/en/topics/new-gtlds/rfp-clean-19sep11-en.pdf







விண்ணப்பங்களை அனுப்ப இன்னும் 90 நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. ஐந்து நாடுகளில் மக்கள் செல்வாக்குடன் அரசியல் செல்வாக்கையும் பெற்றிருக்கும் தமிழுக்கு தனிக்கொற்றம் வேண்டும் என்பது பேராசை அல்ல. இயல்பாக தன்னிடம் வரவேண்டிய விசயங்கள்,தகுந்த முன்னெடுப்புகள் இல்லாமல் இலவு காத்த கிளியின் நிலை போல் ஆகிவிடக்கூடாது. தமிழக அரசாங்கமோ, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ, அல்லது தமிழை நேசிக்கும் பெரும் நிறுவனங்களோ இணைந்து இந்த முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.

முக்கியமான விசயம் என்னவெனில் இதில் வெறும் ஆர்வம் சார்ந்து, கொடை சார்ந்த விசயம் மட்டும் அல்ல. இதில் வியாபாரம் வணிகம் சார்ந்த கூறுகளும் அடங்கியுள்ளது. வெறுமனே மொழி சார்ந்து மட்டும் பார்க்காமல் சந்தை ரீதியில் பார்த்தாலும் மிகப்பெரும் லாபம் ஈட்டக்கூடிய ஒரு விசயம் இது.

இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெறப்பட்ட .cat கொற்றம் இன்று வருடா வருடம் ஒன்பதரைக் கோடி ரூபாயை தோராயமாக ஈட்டி வருகிறது. கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் மக்கள் தொகை / சந்தை கொண்ட தமிழால் மேலும் லாபம் ஈட்டித்தர முடியும்.

மாட்ரிக்ஸ் படத்தில் வருவதைப்போல உலகம் இணையம் சார்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பூமிப்பந்தில் தனித்த இடம் இல்லாது போதிலும், எல்லையற்ற இணையவெளியில் தமிழுக்கென கொற்றத்தைப்பெறுவொம்.

தமிழுக்காக மட்டும் இன்றி , ஏனைய மொழிகளுக்கும், அவற்றின் மொழி ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் ஆனா ஒரு கொற்றத்தை பெற வைக்க முன்னெடுப்புகளையும் செய்ய வேண்டும்.

தமிழும் ஈழமும் ஒன்றுக்கொன்று சமமானவை. தமிழுக்கு கொற்றம் பெறும் அதே வேளையில் ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி, .eelam or .eezham கொற்றத்தினைப் பெற முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். அரசியல், அறப்போராட்டங்களுக்கு, அறிவுசார்ந்த வெற்றிகளும் மிகப்பெரியத் துணைக்கொடுக்கும்.

இரண்டு வருடங்களில் www.tamil.eelam எனவும் www.eelam.tamil எனவும் தளங்கள் அமைய இன்றே விதைப்போம்.

உசாத்துணைகள் / தரவுகள்
1. http://www.icann.org/
2. http://www.mindsandmachines.com/tag/new-gtlds/
3. http://newgtlds.icann.org/

நன்றி - கலைச்சொற்கள் மற்றும் மேலதிக விவாத விபர உதவிகளுக்காக - டாக்டர். புருனோ - http://www.payanangal.in/

0 comments:

Post a Comment

Kindly post a comment.