மகள் மீதுள்ள அக்கறை பேரப்பிள்ளைகளிடமும் உண்டு-மு.கருணாநிதி
சிபிஐ அதிகாரிகள் கலாநிதிமாறன், தயாநிதி மாறன் வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்மையில் சிபிஐ தமிழகத்தில் மாறன் சகோதரர்கள் இல்லங்களில் நடத்திய சோதனைகளால் பாதிக்கப்படும் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரைப் பற்றி கருணாநிதியும் அவர் கழகமும் கவலைப்படவில்லை, அவர்களுக்கு ஆதரவு தரவில்லை என செய்திகள் வெளிவருகின்றன.
நான் கலாநிதி, தயாநிதி வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கும் என் மகள் கனிமொழி மீது சிபிஐ நடத்துகின்ற வழக்கு குறித்தும் எந்தவித கருத்தும் வெளியிடாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் மத்திய அரசுக்கு இதில் சம்பந்தமில்லை என்பதாலும் சிபிஐ மற்றும் நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதில்லை என்பதாலும்தான்.
கலாநிதி, தயாநிதி மாறனை இந்த சூழலில் நான் ஆதரிக்கவில்லை என்பது தி.மு.கழகத்தை அடியோடு வீழ்த்துவதற்கு சிலர் நடத்துகின்ற சூழ்ச்சியாகும். கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் முரசொலி மாறனால் என் கையில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள். அவர்களை சூழ்ந்து தாக்குகிற எந்த முயற்சிகளையும் அவர்கள் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கும், அவற்றிலே வெற்றி பெறுவதற்கும், உண்மையை நிலை நாட்டுவதற்கும் என் ஆதரவு அன்று போல் இன்றும் இன்று போல் என்றும் உண்டு.
என் மகள் கனிமொழி விடுதலையாக வேண்டும் என்பதிலே எனக்குள்ள ஆர்வம் என் பேரப்பிள்ளைகள் மீது சாற்றப்படும் வழக்குகளிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என்பதிலும் உண்டு.
நியாயம் வெல்லும்! நீதி நிலைக்கும்! என்பதில் எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.