Sunday, October 9, 2011

மாற்ற வேண்டியது காங்கிரஸ் கொடியையா அல்லது தேசியக் கொடியையா?

பழ.நெடுமாறன்


பேசுகின்றார். ‘‘1946-ம் ஆண்டு, இந்திய தேசியக்கொடி எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து விவாதம் அரசியல் நிர்ணய சபையில் நடந்தேறியது. அவ்விவாதத்தின்போது, அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கலாம் என்று நேரு கூறினார்.

ஆனால், ‘காங்கிரஸ் கட்சியின் கொடி மாதிரியே தேசியக் கொடி இருக்கக்கூடாதுஎன்று எதிர்க்கட்சிகள் ஆட்சேபணை தெரிவித்தன. காங்கிரஸ், இதற்கு உடன்படவில்லை.

இக்கொடியை மகாத்மா காந்தியடிகளும் விரும்பவில்லை. ‘காங்கிரஸ் கட்சியின் வேலை முடிந்துவிட்டது. எனவே, கட்சியை கலைத்துவிடுங்கள்என்றுதான் அவர் சொன்னார். அவர் சொன்னதுபோல் செய்திருந்தால், இன்றைக்கு காங்கிரஸ் கொடி இல்லாமல் போய், தேசியக்கொடி மட்டுமே இருந்திருக்கும். இதற்கு மரியாதையும் கிடைத்திருக்கும்.

ஆனால், காந்தியடிகள் சொன்னதை ஏற்பதற்கு அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் தயாராக இல்லை.சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்கிற முத்திரையுடன் மக்களிடம் செல்வாக்கு பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தனர். இதனால், அவரது கருத்தை ஏற்கவில்லை.

இது மட்டுமல்ல. தேசியக் கொடியை பற்றிய விளக்கங்களைக்கூட காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாகச் சொல்ல ஆரம்பித்தனர்.

மத்தியில் இருக்கும் சக்கரம் அசோகருடைய ஸ்தூபியில் உள்ளது. இது மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தும் சின்னம்என்றார் நேரு.

ஆனால், அரசியல் சட்டம் வகுத்த ஆறு பேர் குழுவில் ஒருவரும், அப்போது மத்திய மந்திரியாக இருந்தவருமான கே.எம்.முன்ஷி, ‘இது மகாவிஷ்ணுவின் சக்கரம்என்று சொன்னார்.

இது, பிற மதத்தவர் மத்தியில், வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி, ஆளுக்கு ஆள் விளக்கம் கொடுத்தார்களே தவிர, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சரியான விளக்கத்தை அளிக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கவில்லை.

அவர்களுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தின் காரணமாக, கட்சிக்கொடியையே தேசியக்கொடியாக ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார்கள். இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கோ, அதைப் பற்றி விளக்கம் தருவதற்கோ, அவர்கள் முன்வரவில்லை. எனவே, இன்றுவரை, இவ்விவாதம் தொடர்கிறது.

பிற நாடுகளைப் பொறுத்த அளவில், முக்கிய கட்சிகள் இருக்கின்றன, தேசியக்கொடியும் இருக்கின்றது. ஆனால், தேசியக் கொடிக்குதான் முதல் மரியாதை தருகிறார்கள். கட்சி அலுவலகமாக இருந்தாலும்கூட நாட்டின் கொடியை ஏற்றிவிட்டு, பிறகுதான் கட்சிக் கொடியை ஏற்றுகிறார்கள்.

ஆனால், இந்தியாவில் இப்படி இல்லாமல் போனதற்கு காரணம், காங்கிரஸ் கட்சி தன்னுடைய கட்சிக் கொடியையே தேசியகொடியாக அறிவித்ததும், காங்கிரஸ் கொடிக்கும், தேசியக் கொடிக்கும் வித்தியாசம் இல்லாமல் போனதும்தான்.

இதில், வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸ் அலுவலகத்தில்கூட தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. மாறாக, காங்கிரஸ் கொடியைத்தான் ஏற்றுகிறார்கள். எனவே, தேசியக் கொடியின் முக்கியத்துவம் காங்கிரஸ்காரர்களுக்கே புரியாமல் போய்விட்டது.

1969-ம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டது. ஸ்தாபன காங்கிரஸ், ராட்டை கொடியை உபயோகப்படுத்தியது. பிரிந்து வந்த இந்திராகாந்தி, தங்களுடைய தேர்தல் சின்னமாக கை சின்னத்தை கேட்டு வாங்கினார். அதையே கொடியில் பொறித்தார்.

எந்த ராட்டையை, ஏழை மக்களின் சின்னமாகக் கருதி மகாத்மா காந்தி பொறித்தாரோ, அதையே தூக்கி எறிந்துவிட்டு காந்தியையும் தூக்கி எறிந்தவர்கள்தான் காங்கிரஸ்காரர்கள். இதையெல்லாம் தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகிற அவமதிப்பாகத்தான் கருதவேண்டி இருக்கிறது. காங்கிரஸ்காரர்களுக்கும் இன்றுவரை இதுகுறித்து உறுத்தல் இல்லை.

கொடியை மாற்ற வேண்டும் என்கிற விவாதம் இன்றைக்கு தேவையா? என்றால், தேவைதான்.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன. ஒவொரு தேசிய இனத்துக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. ஆக, எல்லா தேசிய இனங்களின் அடையாளங்களையும் அல்லது எல்லா தேசிய இனங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு தேசியக் கொடி உருவாக்கப்படவேண்டும் என்பதுதான் சரியாக இருக்க முடியும். மாறாக, காங்கிரஸ் கட்சியின் கொடியையே, தேசியக் கொடியாக கடைபிடித்து வருவது பெரும் தவறு.’’ என்றார்.

ஆக, மொத்ததில் 60 ஆண்டுகளைக் கடந்தும்கூட தேசிய கொடி குறித்த வரையறை, முற்றுப் பெறவில்லை. தற்போது இந்த விவாதம்மீடியா வாய்ஸ்மூலமாக மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மிச்சத்தை நீதிமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ முடிவு செய்யும் நாள், வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

-நன்றி, ‘மீடியா வாய்ஸ்” 20.08.2011

0 comments:

Post a Comment

Kindly post a comment.