Friday, October 14, 2011

இந்தியப்பெண்ணை மணந்தார் பூடான் மன்னர்



மன்னர் ஜிக்மி கேசார் நாம்கில் வாங்சுக்- ஜெட்சன் பெமா திருமணம் எளிய முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 31 வயதான இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

2008ம் ஆண்டில் இவரது தந்தை ஜிக்மி சிங்கே வாங்சுக் பதவியில் இருந்து விலகி இவருக்குப் பட்டம் சூட்டினார். அது முதல் இவர் பூடான் மன்னராக இருந்து வருகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 17 வயதான மணமகள் ஜெட்சன் பெமா இமாசலப் பிரதேசத்தில் சானவார் லாரன்ஸ் பள்ளியில் படித்தவர். அவர் இப்போது லண்டன் கல்லூரியில் பட்டம் படித்து வருகிறார். இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடக்கும் என கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தலைநகர் திம்புவிலிருந்து 71 கிலோ மீட்டா தூரத்தில் உள்ள மலைகள், ஆறுகள் சூழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க நகரான புன்னகாவிலில் உள்ள புன்னாகா திசாங் அரண்மனையில் திருமணம் வியாழக்கிழமை நடைபெற்றது. அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர். திருமண நிகழ்ச்சிகளை தலைமை புத்தபிட்சு நடத்தினார். இவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கின. 100 புத்த பிட்சுகள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். சரியாக 8.29 மணிக்கு மன்னர் மணமகன் கோலத்தில், பிரதமர் ஜிக்மி ஒய். தின்லே, பூடான் அரண்மனை காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் புடைச்சூழ வந்தார். சில நிமிடங்களுக்கு பிறகு மணமகள் பெமா வந்தார். அங்குள்ள தங்கத்திலான குத்து விளக்கை அவர் ஏற்றினார். 2 மணி நேர திருமண நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவர்கள் கணவன்-மனைவியாக அறிவிக்கப்பட்டனர். புகைப்பட மற்றும் தொலைக்காட்சி கேமராவிற்கு அவர்கள் போஸ் கொடுத்தனர்.

திருமணத்துக்குப்பிறகு, பெமா இளவரசியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கீரிடம் சூட்டப்பட்டது. திருமணத்துக்காக 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய பந்தல் போடப்பட்டு , 20 அரங்குகளுடன், 1500விருந்தினர்கள் பார்க்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. திருமணத்தை முன்னிட்டு, வியாழக்கிழமையிலிருந்து 3 நாள்களுக்கு பூடான் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

பழங்குடியினர் உள்பட லட்சக்கணக்கானோர் மன்னர் திருமணத்தை காண அரங்கின் வெளியே குவிந்தனர். தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட மன்னரின் திருமணத்தை வீட்டிலிருந்தவாறே 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். இருதினங்கள் கழித்து புது மணத் தம்பதிகள் தலைநகர் திரும்புகின்றனர். அவர்களை வரவேற்க தலைநகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

மணமகள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், மாநில ஆளுநர் எம்.கே. நாராயணன், பூடானுக்கான இந்திய தூதர் பவன் கே. வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான அரச குடும்பத்தினரும், வெளிநாட்டு தூதர்களும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

விருந்தினர்களுக்கு பாரம்பரிய 52 வகை பூடான் உணவுகள் பரிமாறப்பட்டன. இதில் இந்தியாவின் ரொட்டியும் இடம் பெற்றிருந்தது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.