Monday, October 17, 2011

மோதி மிதிக்கும் கல்லூரி மாணவி கமீலா வலேஜோ எம். மணிகண்டன்


நமது கல்லூரிகளில் அளவுக்கு அதிகமாகக் கட்டணம் வசூலித்தால் என்ன செய்வோம்? முதலில் நிர்வாகத்திடம் முறையிடுவோம். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிப்போம். கொஞ்சம் செல்வாக்கு இருந்தால் அமைச்சரைச் சந்திப்போம். இல்லாவிட்டால் கீழ் நீதிமன்றத்திலும் பிறகு மேல் நீதிமன்றத்திலும் வழக்குப் போடுவோம். இதற்குள் ஒன்றிரண்டு ஆண்டுகள் போய்விடும். ""படிச்சு லட்ச லட்சமா சம்பாதிக்கப் போறீங்க, இதுக்கெல்லாம் கணக்குப் பார்க்கலாமா''? என்று கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்துவார்கள். இதையெல்லாம் தாண்டி, ஏதோ ஒன்றிரண்டு பேர் போராடி வெற்றி பெறுவார்கள். மற்றவர்கள் மெüனிகளாக கேட்டதொகையைக் கட்டுவார்கள். அதனால்தான் நமது நாட்டில் கல்வி, மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது.

பிள்ளைகள் 4 மணி நேரம் வந்து போகும் வகுப்புக்கு ரூ.35 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். சட்டமே இயற்றிய பிறகும் 25 சதவீத இடங்களை ஏழைகளுக்குத் தர மறுக்கிறார்கள். அப்படியே தந்தாலும், அந்த 25 சதவீதம் பேரையும் தனி வகுப்பறையில் அடைத்துத் தீண்டாமைக்குப் புதிய இலக்கணம் வகுக்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகள்கூட பல்கலைக்கழகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. வியாபாரிகளில் பலர், தங்களுக்கே முடிசூடி வேந்தர்களாகிக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் மவுனமாக்ப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அநியாயங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமான போராட்டங்களும் உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காகவே நடக்கின்றன.

ஆனால் சிலி நாட்டு மாணவர்களுக்குப் பாதகம் செய்பவர்களைக் கண்டால் மோதி மிதித்து, முகத்தில் உமிழ்ந்து விடும் துணிச்சல் இருக்கிறது. அங்குள்ள மாணவர்கள் அமைப்புகளின் கட்டமைப்பு அப்படி. நாடு முழுமைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு இருக்கிறது. தேசியத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதனால் தனியார் கட்டணக் கொள்ளையையும், அரசின் அலட்சியத்தையும் எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துகிறார்கள். கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு, கட்டணக் குறைப்பு, தனியார் கல்வி நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு, அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றம் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டம், அமைதிப் பேரணி என எல்லா முக்கிய நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. போராட்டம் நடப்பது என்னவோ கல்வியில் சீர்திருத்தத்தை வலியுறுத்தித்தான் என்றாலும், மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த புரட்சியைப் போன்ற தீவிரம் இதில் இருக்கிறது.

பினோஷேவின் ராணுவப் புரட்சியுடனும், அதே பினோஷேவுக்கு எதிராக 1980-களில் ஜனநாயகம் கோரி நடந்த போராட்டங்களுடனும் இந்தப் போராட்டங்கள் ஒப்பிடப்படுகின்றன.இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னின்று நடத்துபவர் பட்டம் படிக்கும் ஒரு கல்லூரி மாணவி என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அவரது பெயர் கமீலா வலேஜோ. பார்ப்பதற்குத் திரைப்பட நாயகி போன்ற தோற்றம். ஆனால் புரட்சிகரமான சிந்தனை. ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அனாயசமாகப் பேசுகிறார். எந்தக் குறிப்பும் இல்லாமல் நீண்ட நேரம் கூட்டத்தைக் கட்டிப்போடுகிறார். பேச்சில் அனல் தெரிகிறது. அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறார். மைக்குடனேயே பிறந்தவர் போல எவ்வளவு பிரமாண்டமான மேடையையும் கையாளுகிறார். தடியடி நடக்கும்போதும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும்போதும்கூட தடுப்புகளை விலக்கிக்கொண்டு இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டேயிருக்கிறார்.

நவீன மங்கைக்கு உரிய எல்லா அடையாளங்களையும் கொண்ட இவரது கையில், கண்ணீர்ப் புகையை எதிர்கொள்வதற்கான முகமூடி எப்போதும் இருக்கிறது.சிலிக்கு மட்டுமல்ல, பிரேசில் போன்ற தென் அமெரிக்க நாடுகள் பலவற்றில் இப்போது இவர்தான் புரட்சி நாயகி. ஊடகங்கள் இவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. தற்காலத்தில் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மாணவர் தலைவர் இவராகத்தான் இருக்க முடியும்.

இடதுசாரி பின்புலம் கொண்ட இவருக்கு எதிரான விமர்சனங்களுக்கும் குறைவில்லை. போலீஸ் தடுப்புகளுக்குப் பதிலாக, அழகுப் போட்டிகளுக்கான மேடையே இவருக்குப் பொருத்தமானது என்று சிலர் எழுதுகிறார்கள். இடதுசாரிப் போராட்டங்களுக்கு இருக்கும் வழக்கமான எதிர்ப்புகள் இதற்கும் உண்டு. கமீலாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இப்போது போலீஸ் பாதுகாப்புடனேயே அவர் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவ்வளவு தீவிரமான எழுச்சிக்குப் பிறகும் போராட்டம் முழுமையாக வெற்றிபெற்றுவிடவில்லை. ஆனால் அதிபர் பினேரா அச்சத்தில் இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. 2006-ம் ஆண்டில் அப்போதைய அதிபரும் இடதுசாரியுமான மிஷல் பேக்லட்டுக்கு எதிரான போராட்டம் அவரது புகழுக்குத் தீராத களங்கத்தை ஏற்படுத்தியது. அதுபோன்றதொரு நிலை தமக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பெரும்பாடு பட்டார். மாணவர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேற்றுவதற்கு இசைந்திருக்கிறார்.

இதுவரை இல்லாத அளவுக்கு கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கிறார். ஆனாலும் மாணவர்களின் பட்டியல் இன்னும் முடிந்துவிடவில்லை.கல்விக்காக மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் நாட்டின் அதிபரையே கலங்கவைத்திருக்கிறது. பினேராவின் செல்வாக்கு பெருமளவு சரிந்துவிட்டதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அடுத்த தேர்தலில் அவர் அவ்வளவுதான் என்கிறார்கள். இத்தனைக்கும் தென் அமெரிக்காவைப் பொருத்த அளவில், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு அது. மக்களாட்சியும் ஓரளவு வலுவாக இருக்கிறது. இதனால், இவ்வளவு பிரமாண்டமான புரட்சி ஏற்படுவதற்கு உகந்த சூழல் சிலியில் இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், அரசியல்வாதிகளே பெரும்பாலான கல்வி நிறுவனங்களைக் கையில் வைத்திருப்பதும், மேல்தட்டு மக்கள் மட்டுமே மேல்படிப்பு படிக்கும் அளவுக்கு கல்விக் கட்டணம் இருப்பதுமே மாணவர்களைப் போராடத்தூண்டியது. இந்தியாவிலும் இதே நிலைதான். மோதி மிதிக்கத்தான்ஆளில்லை.

நன்றி:-தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.