Thursday, October 27, 2011

திருத்தணி சுப்பிரமணியசாமி அருள்பாலிப்பாரா?அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருத்தணியில் உள்ளது. போராடிப்பெற்ற ம.பொ.சி.யின் நினைவாகப் பெரியதொரு சாலைக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளார்கள். மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால். ம.பொ.சி.யே இன்று இருந்திருந்தால், கோவிலில் நடக்கும் கெடுபிடிகளைக் கண்டு நொந்து நூலாகி இருப்பார்.

நான் இது போன்ற அநியாயங்கள் பல நடப்பதால் கோவில்களுக்குச் செல்வது அரிது . ஆனால் தீபாவளிக்கு மறுநாள் திருத்தணி கோவிலுக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன். எனது பேத்திக்குக் மொட்டை அடித்துக் காது குத்தும் நிகழ்வினை ஆங்கு மேற்கொள்ளவேண்டியிருந்ததே காரணம்..

என்ன களைப்போ அல்லது உடல்நலக் குறைவோ உறங்கி விழுந்துகொண்டே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிய மொட்டை போடச் சீட்டு வழகிய அலுவலர்.
27-1-2011 காலை 9 மணியளவில் திருத்தணி மலை உச்சி மீது எடுத்த படம்.


மொட்டை அடித்திட ரூபாய் பத்து கட்டணம். ரசீது தந்தனர். அதனை வரிசையாகக் காத்திருக்கும் ஒப்பந்ததாரரிடம் கொடுத்தால் வேலை முடிந்துவிடும். விருப்பப்பட்டதை அன்பளிப்பாகத் தரலாம் என்றார். ஊரோடு ஒத்துப்போகும் எண்ணத்தில் முதலிலேயே தீர்மானித்திருந்தபடி ரூபாய் நூறு வழங்கினேன். அவரும் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். இது நடந்தது திருத்தணி மலை மீது.


அது காது குத்துவதற்குத் தனி குத்தகைதாரர். அவரது மொபைல் எண் அந்த மண்டபத்தில் உள்ள விளம்பரப்பலகையில் இருக்கும். அழைத்தால் வந்து விடுவார் என்று ஒரு மண்டபத்தைக் காட்டினர். G.L. நாராயணன் ஆசாரி 9944725775 என்ற எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அழைத்தேன். அவர் வீட்டில் இல்லை என்ற பெண் குரல் ஒலித்தது. விபரம் எதுவும் தரப்படவில்லை.

அதுசமயம், ஆங்கிருந்த ஒருவர், குத்தகைதாரருக்கு உடல் நலம் இல்லாததால் வரமாட்டார். நான் ஒருவருடைய மொபைல் எண்ணைத் தருகின்றேன். அவரது உறவினர்தான். அவர் வருவார் என்று சொல்லி, 9698975660 என்ற எண்ணை என் மொபைலில் அவரே பதிவு செய்து பேசச் சொன்னார். பேசினேன். சொன்னபடி + 1 படித்துக் கொண்டிருக்கும் மாணாக்கர் விஜய் என்பவர் மலை உச்சிக்குச் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார். கட்டணம் ரூபாய் பத்து. ரசீது தந்தது ரூபாய் ஐந்துக்கு. மேலும் ரூபாய் 301/- காது குத்துவதற்கு அன்பளிப்பாகக் கேட்டார். நான் எந்தச் சூழலிலும் ரூபாய் நூறுக்குமேல் ( ஏற்கனவே தீர்மானித்தபடி) தரமுடியாது என்றேன். யாருக்கோ மொபைலில் பேசிவிட்டு இறுதியாக ரூபாய்151/- கேட்டார். எனது மகனின் தலையீட்டால் மவுனமானேன். 151/-ல் வேலை முடிந்தது.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பல லட்ச ரூபாய் மூலதனமாக்கி காண்ட்ராக்ட் எடுக்கின்றோம். எங்களுக்குச் சம்பளம் என்று எதுவும் கிடையாது. எனவேதான் இப்படி நடந்து கொள்கின்றோம். என்று விளக்கம் தந்தார். வசதி இருப்பவர்களால் முடியும். சாமியை நம்பி சாமி கோவிலில்தான் காது குத்த வேண்டும் என்று வரும் ஏழை-பாழைகள் கதி என்ன?

மொட்டை அடித்ததிலும், காது குத்தப் பட்டதிலும் கோவில் நிர்வாகம் குத்தகைக்கு விட்டதோடு கழன்று கொண்டதுதான் தவறு.

குத்தகை விதிகளிலேயே பயனாளிகளிடம் வசூலிக்க வேண்டிய ஒரு தொகையை நிர்ணயித்திடல் வேண்டும். அதை விட அவர்களைக் கோவில் ஊழியர்களாகவே ஆக்கிக் கண்காணிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தஙக நகைகளின் தரங்களைக் கண்டறியத் தனி அலுவலர் இருப்பது போல், மொட்டை போட, காது குத்த அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். நல்ல வருவாய் உள்ள திருத்தணி போன்ற திருக்கோவில்களில் இது சாத்தியமானதேயாகும்.

நான் மாமங்கத்திற்கொரு முறை குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காகவோ, சில நண்பர்கள் அல்லது உறவினர்களுக்காகவோ கோவில்களுக்குச் செல்லும் பொழுது இது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்திடப் பல்வேறு கட்டுப்பாட்டு வரிசை முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண நாட்களிலும் இலவச தரிசனம், 10, 25, 50 என கட்டணங்கள் உள்ளன. கட்டணமே இல்லாமல் சுவாமியைப் பார்க்கும் காலம் வரவே வராதா? திரையரங்குகளில் உள்ளது போன்று கட்டணத்திற்கேற்ப சுவாமி நமக்குப் பக்கத்தில் வருவார். இது என்ன நியாயம்?

கர்நாடகா தர்மஸ்தலாவில் சாமி தரிசனத்திற்கும், இலவச உணவிற்கும் கோடீஸ்வரராக இருந்தாலும் ஒரே வரிசைதான்.

பிறந்து வளர்ந்த பண்பாட்டுச் சூழலில் கோவில்கள் வாழ்க்கையில் பெரும் அங்கம் வகிக்கின்றன. தமிழகக் கோவில்களில் உள்ள கலை, இலக்கிய, பண்பாட்டுச் சின்னங்களைக் கூட இலவசமாகப் பார்த்திட முடியாதென்றால் என்ன சொல்வதென்றே புரியவில்லை.

இனுமொரு செய்தி. கண்ணில் பட்டது. சுற்றுப் புறகாரத்தில், சரியாக மூலவருக்குப் பின்புறத்தில், சில படிகள் கீழ் இறங்கி நடந்தால் அஞ்சல் நிலையம் வரும். அதன் அருகில் சரஸ்வதீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இவற்றிற்கு எதிரில் சுனை ஒன்று இருக்கின்றது. அது சரியாகப் பராமரிக்கப் படாதலால் பாசி படிந்து அழுக்கடைந்த நிலையில் உள்ளது. முறையாகப் பராமரிக்கப் பட்டால் குளிப்பதற்குப் பயன் படும் என்று பலர் கூறினர். பயன்பட்டு வந்தது என்றும் கூறினர்.

திருக்கோவில்களுக்குச் செல்வோர் கோவில்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லை என்றால் கோவில்களுக்குப் போகக் கூடாது என்று சொல்வோர் கூட என்பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொள்வர் என்று நம்புகின்றேன்.

மாற்றங்கள் நிகழுமா? ???

2 comments:

  1. You go temple and pray thats all. Rest of the things do outside temple. Do not encourage people giving bribe that is your fault.

    ReplyDelete
  2. மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நிகழ்வுகளைத் தாங்கள் கோவில்களில் செய்வதில்லை போலும். தரிசனத்திற்கு 10, 25, 50 கட்டணம் வசூலிப்பதும், பணத்திற்கேற்றபடி தரிசிக்கும் இடத்தைத் தீர்மானிப்பதும் என்ன நியாயம்? கோவில் சுற்றுப்புறத்தில் உள்ள சுனையைத் தூய்மையாக வைத்துக் கொள்ளாமைக்கும் பதில் இல்லையே? பல கோவில்களில் திருக்கோவில் பிரசாதங்கள் கூட ஒப்பந்ததாரர் மூலமாகவே தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன மேலோட்டமாகப் பார்த்தவை இவை. இன்னும் பல குறைகள் இருக்கக்கூடும். திருக்கோவில்கள் வியாபாரத் தலங்களாகி வருவதை ஏற்றுக் கொள்கின்றீர்களா நண்பர் பிரபாகரன் அவர்களே ?

    ReplyDelete

Kindly post a comment.